Saturday, April 28, 2018

...................

இன்னும்
நினைவில் இருக்கிறது
ஏழு வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளான அந்த நாள்
அப்பாழ் வீட்டில்
நான் தொடுகையில்
இறந்துப்போன அச்சுவரோவியம்
சமயலறையை
ஆக்கிரமிதிருந்த துத்திச் செடிகளும்
அதன் மஞ்சள் மலர்களும்


இருந்தும்
பிறிதொரு காலம்
உன் மார்புக்கிடையில்
அத்தனை நிம்மதியாக உறங்கிப் போனேன்

மறக்கவே இயலாதபடி
இன்னும்
நினைவில் இருக்கிறது

சண்டையில்
அப்பா எறிந்த விறகு
அம்மாவின் கண்ணைக் கீறி
அழுந்திய அவள் விரல்களையும்
கன்னத்தையும் மீறி சிதறிய உயிர்
என் ரேகையில்
படிந்த அந்த நாள்

இருந்தும்
பிறிதொரு காலம்
நாங்கள் புன்னகைத்தோம்

புயலில்
கிளைகள் முறிந்த மரம்
தன்னைப் புதுப்பித்து கொண்டதைப் போல.

17th Mar 2018
"சிறு குழந்தையொன்று
என்னை
உற்று நோக்க நேரும் தருணங்களிலெல்லாம்
புன்னைகைப்பேன்

பின்நாட்களில்
தோல்வி, ஏமாற்றம், துரோகம்,
வஞ்சம், துயரம், பாகுபாடென
யாதொன்றிலிருந்தும்
இக்குழந்தை தப்பித்துவிட
அது ஒருபோதும் உதவாதெனினும்
ஆண்டாண்டு காலமாக
இம்மண்ணில் பற்றி படந்துவிடத் தவிக்கும்
அன்பெனும்
இச்சிறுக்கொடியின் நீட்சியை
இத்தலைமுறைக்கு கடத்தவாவது"

25th Jan 2018

....................

"அன்றொரு மாலையில்
கேட்டாய்
ஏன் எதற்காக எழுதுகிறாயென
அப்போது என்ன சொல்வதென தெரியாமல்
உன்னைப் பார்த்தேன்

பெரிதாக ஒரு
காரணமுமில்லையெனினும்
ஓர்வேளை
என்றாவது ஓருநாள்
பறவைகள் அவற்றை
மொழிப்பெயர்க்கக்கூடும்"

17th Dec 2017

........................

எல்லாமும் நினைவிலிருப்பது
சுமை

இந்நாட்களில்
உன் இருத்தலை அறிந்திராத
எத்தனையோ மனிதர்களைப் போல
நானும் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது

நினைவிருக்கிறதா
நம் கடைசி சந்திப்பை
என் முகம் பார்த்து பேசுவதை நீ தவிர்த்ததை
ஓயாத என் விசும்பல்களினூடே
ஏங்கிய என் கன்னத்தில்
நீ தர மறுத்த
ஒற்றை முத்தத்தை

எனது வாதங்களை தவிர்த்தபடி
தீர்க்கமாய்
எனைப் பார்க்காது சொன்னாய்
நீ உன் வழிப் பார்த்துக்கொள்
நான் என் வழிப் பார்த்துக்கொள்கிறேனென

பின்னொரு நாள்
உன் நிராகரிப்பை
நீலவானென அர்த்தப்படுத்திக் கொண்டேன்

இம்மழை நாளில்
முன்னொரு கோடையில்
நாம் எடுத்துக்கொண்டப் புகைப்படத்தைப் பார்க்கிறேன்
உறைந்த நம் புன்னகையை
நமக்குப் பின்னே இருந்த பசும்கொடிகளை
உன் கருநிற உடையை

இம்மாலையில் தொலைப்பேசியில்
வேறு யாரையோ அழைக்க நினைக்கையில்
விரல்கள் அனிச்சையாக
உன் எண்களைப் பதிக்கின்றன

ஆம்
எல்லாமும் நினைவிலிருப்பது
பெருஞ் சுமை.

7th Dec 2017

.................................

அருகருகே அமர நேர்ந்த
இப்பயணத்தில்
எதார்த்தமாக
நான் அறியாதது ஏதேனும் சொல் என்கிறாய்

ஒரு இடைவெளி
மௌனத்திற்குப் பிறகு நான் சொன்னேன்
உன்னை காதலிப்பதை நிறுத்தி
வெகுநாட்களாகிறதென
துயர் தேங்கியப் புன்னகையுடன்
மீண்டும்
"நான் அறியாதது ஏதேனும் சொல் என்கிறாய்"
இம்முறை
என் கையை இறுகப் பற்றியபடி.


21st Sep 2017

Thursday, May 4, 2017

...................

இந்தப் பருவத்தின் முதல் மழை
மண்வாசனை காற்றில் நிறைகிறது
எத்தனையோ நாட்களுக்குப் பிறகு
குளிர்ந்து கிடக்கிறது இந்த நிலம் 
நேற்றுவரை
மழைக்கு ஏங்கிக்கிடந்த
உயிர்கள் சிலிர்க்கின்றன

அறுவை சிக்கைச்சைக்கு
உடல் ஏற்றதல்லவென மருத்துவர்கள்
கைவிரிக்கவில்லையெனினும்
கைவிடப்பட்ட இக்காலத்தில்
தனதறையில்
இலையுதிர்கால மரம் போல
அமர்ந்திருக்கிறாள் இடுப்பு உடைந்த கிழவி

தொண்ணூறுகளில் இன்னும்
உயிரை கையில் இறுகப் பிடித்திருக்கும்
ஊரின் மிகவயதான
அவளுக்கு அல்செய்மர்ஸ் இருக்கிறது
காது சரியாக கேட்பதில்லை
இரண்டு அடி தூரத்திலிருப்பவர்களைக் கூட
அடையாளம் காண இயலாதவாறு
கண் பார்வை மங்கலாகிவிட்டது 

இம்முறை ஊருக்கு சென்றிருந்தபோது 
பக்கத்தில் அமர்ந்திருந்தேன்
தலைகோதும் என் விரல்களை மட்டும்
நினைவில் வைத்துப் புன்னகைக்கிறாள்

இத்தனை நாட்களாக ஏன் வரவில்லை என்றாள்
அம்மாவுக்கு அவளைப் பார்த்துக்கொள்ள
விருப்பமேயில்லையென்றாள்
பின் இப்படி ஆவேனென்று நினைக்கவில்லையென
உடைந்து அழுதாள்

ஆறு மாதங்களாக
இவ்வறை
இந்த ஒளி
இந்த சன்னல்  மட்டும்
தன்னோடிருப்பதாய் அவள் சொல்கையில்
இயலாமையின் ஒற்றை சாட்சியாய் அமர்ந்திருந்தேன்

இந்நாட்களில்
நண்பர்களற்று
தனியேப் பேசியேயிருக்குக்கும்
அவளை காண கடினமாக இருக்கிறது

பதிமூன்று வயதில் தன் தாய்மாமனை
மணந்துகொண்டவள்
பதினேழுவருட தவத்திற்குப் பின்
அப்பாவைப் பெற்றெடுத்தாள்
இரயில்வே வேலையை விட்டுவிட்டு
தாத்தா சராயக்கடையையும்
கூத்தியாவையும் வைத்துக்கொள்ள
கணவனைப் பிரிந்தாள்
சில ஆண்டுகளில் மாரடைப்பில்
கணவன் இறந்துப்போக
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவுமில்லை
ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லையென
சின்னப்பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்

ஏனோ
அவள் மன்னிப்பதேயில்லை
யாரோடும் நெருங்குவதுமில்லை
உறவினர் ஊராரென
யாரிடமும் பேச்சுவார்த்தையில்லை
எனக்கு தெரிந்து
இத்தனை ஆண்டுகளில்
காசுக்காக யாரிடமும் கையேந்தியதில்லை
தன் உழைப்பை மட்டும் நம்பியிருந்தாள்

இந்தப் பின்னிரவில்
கதவைத் திறந்துப் பார்க்கிறேன்
உறக்கமற்றுப் படுக்கையில் அமர்ந்திருக்கிறாள்
அவளுடலில்
இன்னும் கொஞ்சம் இலைகள்
மட்டுமே மீதமிருக்கின்றன

போய் வருகிறேனென
சொல்ல மனமில்லாமல்
இந்த யாமத்தில் நகரம் திரும்புகிறேன்

இன்றுப் பெய்த
இந்த மழைப் போதுமானதாக இல்லை
எல்லா உயிர்களையும் குளிர்விக்க.

Sunday, January 22, 2017

.............

நீ அவர்களை நம்புகிறாய்
எவ்வளவெனில்
உனது நிர்வாணத்தை
அவர்களிடம் பகிருமளவிற்கு


உனது அறைக்குள்
உடைகளற்றிருக்கையில்
ஒரு பறவையைப்போல உணர்வதாக கூறினாய்

முன்காலங்களில்
உன்னிடமிருந்தன
பிறப்புத் தழும்புகள், வரித் தழும்புகள்,
மற்றும் கூடுதல் கொழுப்புகள் குறித்தான
வருத்தங்கள்

அவற்றைப் பற்றி கேட்கப்படும்போதெல்லாம்
நீ வின்மீன்களிலிருந்து உதிர்ந்த தடயமென்றாய்

இப்பிரபஞ்சத்தின்
அவிழ்ந்திடாத இரகசியமொன்றின் குறியீடுகளென்றாய்
அவர்கள் புன்னகைத்தார்கள்
 
எந்த தயக்கமுமின்றி
நீ அவர்களை நம்புகிறாய்
உனது நிர்வாணத்தை
அவர்களிடம் பகிருமளவிற்கு

ஆனால் உனக்கு தெரிவதேயில்லை
யாவும் கவனிக்கப்படுகின்றனவென
குறிப்பாக
உனது பலவீனங்களும்
உனது குறைகளும்
இனி உனக்கும் அவர்களுக்கும்
எவ்வித உறவுமில்லையென
தனித்த ஒரு காலையில்
படுக்கையிலிருந்தபடி நீ உணரும்வரை

எப்போதும் சொல்லப்பட்டிருக்கிறது
காலம்
காயங்களை ஆற்றும்
காயங்களை ஆற்றுமென
இல்லை
அதில் உனக்கு இப்போது நம்பிக்கையில்லை

காயங்கள் ஒருபோதும் ஆறுவதில்லையென
எஞ்சிவிட்ட தழும்புகளும்புகளுடன்
நிலைக்கண்ணாடியில்
உன்னைப் பார்க்கிறாய்

.............

அணைத்துக்கொள்ள யாருமற்ற
இந்த யாமத்தில் அனிச்சையாக
உன் அருகாமையைத் தேடுகிறது
நெஞ்சம்

இவ்வேளை
உணவு வேண்டி
என் கால் உரசும் என் பூனை
ஒரு மிகச்சிறந்த ஆறுதல்
ஒரு மழைக்காலத் தேனீர் போல
உறக்கமற்று
மர ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறேன்

காற்றில் மெல்ல
முன்னும்
பின்னும் அலைவுறுகிறது நிலை

இவ்வேளை நினைத்துக்கொள்கிறேன்
தலை வலிக்கையில் என் நெற்றி அழுந்தும்
உன் உள்ளங்கையின் கதகதப்பை
ஈரமிக்க உன்
கோடைக்கால இதழ்களை
அத்தனை சரியாக
பொருந்தும் நம் கை விரல்களை

இப்பின் யாமத்திலும்
உணவு வேண்டி
என்முன் அமர்ந்திருக்கிறது இந்த பூனை

காற்றில் மெல்ல
முன்னும்
பின்னும் அலைவுறுகிறது
நீயற்ற இந்த இரவு.

Sunday, April 10, 2016

........................

நீ வேறு யாருடனோ மகிழ்வுடன் இருக்கும்
புகைப்படத்தைப் பார்த்தப்பின்
குளியலறையின் வெந்நீரூற்றில்
சுமார் அரைமணி நேரம் அப்படியே நின்றிருந்தேன்

பின்வேளை
ஆவிப்படர்ந்த குளியலறைக்கண்ணாடியில்
உன் பெயரெழுதிப் பார்த்தேன்
இந்நாட்களில்
நாம் தொடர்புகொள்வதில்லை
முயல்வதுமில்லை
உனக்குள் இருக்குமோ
சுட்டு வலிக்கும் மாலை நேரத்து நினைவு
இந்த மன அழுத்தம்
இந்த கோடையில்
ஒரு சலனமுமற்று இருக்கிறாய் நீ
நானோ
உனை நீங்கும் மனவுறுதியற்று
ஒரு கிளையைப் போல உடைந்து தொங்குகிறேன்.
எப்பொழுதோ
நீங்கிய இலைகளை
மெல்ல கலைக்கிறது இந்த காற்று.

..................

முட்புதருக்குள் கைவிடப்பட்ட
கண்விழிக்காத இரு நாய்குட்டிகள்
மெல்லத் தொடப்படுகையில்
என் விரல்களுக்கிடையில் முலைக்காம்புகளை
தேடி அலைகின்றன

உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட
பெண்ணொருவள் மூடிய கோவிலுக்கு வெளியே
கைத்தூக்கி அவ்வளவு ஆத்மார்த்தமாக
பிராத்தனை செய்கிறாள்
துயர்மிக்க இந்த மாலையில்
மெதுவாக கீழிறங்குகிறது சூரியன்
அத்தனை இயல்பாக.

March 2nd

Tuesday, February 2, 2016

........................

இப்பொழுதெல்லாம்
கொஞ்சம் வேகமாக நடக்கிறேன்
கொஞ்சம் கூடுதல் வேகத்தில் வண்டியையும்

இப்பொழுதெல்லாம்
கொஞ்சம் அதிக ஒலியுடன் பேசுகிறேன்
கொஞ்சம் அதிகம் புன்னகைக்கவும்
மக்கள் நிறைந்த கேளிக்கைகளில்
யாரோவொருவர் கூர்ந்து கவனிக்கிறார்கள்

தனிமை நிரம்பும் இந்நாட்களில்
கொஞ்சம் அதிகமாகப் புகைப்பிடிக்கிறேன்
கொஞ்சம் கூடுதலாக மதுவும்

மேலும்
வேறென்ன செய்துவிட முடியும்
கைவிடப்பட்ட மற்றும்
ஆயிரம் சில்லுகளாக உடைக்கப்பட்ட ஒரு நெஞ்சம்.

....................

உன் ஒற்றைச் சொல்லில்
உடைந்து நொறுங்கிய முன்பகலொன்றில்
நகரின் உயரமான கட்டிடத்தின் உச்சிலிருந்து
என்னைத் தூக்கி எறிய நினைத்தேன்

உன் புறக்கணிப்பின்
துயர் தாங்காதப் பின்னிரவில்
நீலமடைந்த இந்த உடலை
ஒரு மின்விசிறியெனச் சுழற்றிவிடவும்
இப்பொழுது
வெகுநாட்களாக அறையிலிருக்கும்
இந்த பாலித்தீன் பையைப் பார்க்கிறேன்
எப்பொழுதோ இறந்துபோய்விட்ட என்னை
இன்னும் எத்தனை முறைதான்
மீண்டும் கொல்வேன்?
முன்பு நினைத்தைப் போல
இந்த மரணம் ஒரு கனவைப் போன்றதல்ல
இருப்பினும்
இன்னொரு முறை நிகழலாம்
என்னை மலர்களினால் அலங்கரிக்கும் வண்ணம்
அவ்வாறு ஒருவேளை நிகழுமேயானால்
அவர்களை
அழவேண்டாமெனச் சொல்லுங்கள்
அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்
இங்கிருந்து
இவ்விடத்திலிருந்து
வெளியேறுதலே எனது ஆசுவாசமென்று.

Jan 19th 2016

....................

சிலவேளை நினைத்துக்கொள்வேன்
எனக்கு யாருமில்லையென
சிலவேளை தோன்றும் என்னுடனிருப்பது
நான் வாழும் இந்த பழைய நகரம் மட்டுமேயென
மஞ்சள் ஒளி மிதக்கும்
குளிர்கால மாலைகளில்
நடைபாதையில்
எதிர்வரும் மக்களைப் பார்த்திருப்பேன்
அவர்களின்
புன்னைகைமிக்க முகங்களை

எப்போதாவது பார்த்திருக்கிறேன்
யாரோ ஒருவர் தனித்து உடைந்து அழுவதை
அவ்வேளைகளில் அவர்களை
தேற்ற விரும்பாது
நகர்ந்து
ஆளரமவற்ற பேருந்தில்
யாருடனும்
ஒரு வார்த்தைகூட பேசாது பயணித்திருப்பேன்
எனக்குத் தெரியும்
இவ்வாழ்வின் மிகவும் கடினமான தருணங்கள்
அழும் போதானவையல்ல
அழக்கூட முடியாமல் போகும்போதானவை மட்டுமே.

Jan 13th 2016

Tuesday, November 17, 2015

பழைய குளிர்காலப் பாடல்

மகிழ்சியற்ற இந்நாட்களில்
ஒவ்வொரு நாளும் எனதறைத் திரும்புதலென்பது
ஒருவித சலிப்பை உருவாக்குகிறது 


இரு நாட்களாக
தொடர்ந்து பெய்யும் இந்த மழையில்
வெளியே செல்வதும்கூட

இவ்வெளியெங்கும்
புகையைப் போல படர்ந்து நிறைகிறன
கார் மேகங்கள்

பழைய குளிர்காலப் பாடல்களில்
நெஞ்சம் அலமலக்குற
கதகதப்பான இந்த போர்வைக்குள்
சுருண்டுப் படுத்திருக்கிறேன்

இன்று பெய்யும்
இந்த மழை குளிர்கிறது
மீதமுள்ள
என் எல்லா நம்பிக்கைகளையும் தகர்க்கிறது

Nov 12th 2015
- நளன்

......................

ஊதை தூற்றும்
இந்த மாலையில்
ஓமை மரக்கிளையில் வந்து அமர்கிறது

ஒற்றைக் காகம்

வெகுநேரத்திற்குப் பிறகு
அது அங்கிருந்து பறந்துப்போகும்வரை
அதனைப் பார்த்திருந்தேன்

பறவை நீங்கிய கிளை
மெல்ல அதிர்கிறது
கடைசி இலைகள் மிதக்கிறன

இருள் படர
ஒளி மங்குமிந்த மாலை
எப்பொழுதுக்குமான எனது துயரம்
இந்த வாழ்வைப் போல

நினைவுகளை அழித்துக்கொள்ள
ஏதேனுமொரு வழிவகை
இருந்திருப்பின்
இவ்வேளை
கலங்கமற்ற ஒரு புன்னகையுடன்
ஒரு சலனமுமின்றி எதிர்கொள்ளும்
அந்நியர்களாக இருந்திருப்போம்

இம்முறையும்
தேவைகள் நம்மைத் தீர்மானிப்பதை
நாம் அனுமதித்துதான் ஆகவேண்டுமா?

Oct 25th 2015
- நளன்
 

Wednesday, September 16, 2015

..................

மழை நின்ற இவ்வேளை
காற்றே இல்லை

மின்சார கம்பிகளில் அமர்ந்து
ஈரம் உலர்த்துகின்றன
மழைக்காலக் காக்கைகள்

அற்புதம்
அவ்வபோது காதல் சொரியும் உன் கண்கள்
எப்போதும் நெஞ்சம் அதிரும் உன் புன்னகை
உன் குரல் ஒருவித மயக்கம்

கண்ணாடி மதுக் கோப்பைகள்
மோதி அதிர நம் புன்னகைகள்
எப்போதாவது நிகழும் நமது இந்த சந்திப்பு

மதுவும்
இலக்கியமும் இசையும் போதும்
நம்மை இவ்வுலகிலிருந்து
கொஞ்சம் நேரமேனும் விடுவித்துக்கொள்ள

உன் முகம் வசீகரம்தான்

நெடுநாளான உனது குழப்பத்தை
பேச்சினிடையே
அவ்வபோது
எனது பார்வையில் உறுதி செய்துகொள்கிறாய்

ஆம் உனது அனுமானங்கள்
சரிதான்
எப்போதும் கண்கள் பொய் சொல்வதில்லை

மேலும்

ஒருவேளை
அப்பழுக்கற்ற எனதந்த ஈர்ப்பு
உனது அனுமானங்களில்
மெல்லத் தொலைந்துப் போகக்கூடுமெனில்
இந்த திரைச்சீலையை கொஞ்சம் விலக்கியே வைப்போம்

.............

நேற்று
அத்தனை மௌனத்திற்குப் பின்
உன்னைப் பார்க்கவோ
உன்னிடம் பேசவோ
எனக்கு எந்த விருப்பமுமில்லை என்றேன்


அழைப்பை துண்டித்தாய்

வாசல் கதவைத் தட்டிவிட்டு
ஏன் தயங்கி நிற்கிறாய்
உள்ளே வா
மழையில் நனைந்திருக்கிறாயென
துவட்டுவதற்குத் துண்டை நீட்டுகிறேன்
நீ வாங்கவில்லை

இப்போது எதற்காக
குரல் உடைந்து அழுகிறாய்

சற்று யோசித்து 
உன் கண்ணீரில் எனக்கு நம்பிக்கையில்லை
என்றேன்

நீர் வழியும் கண்ணங்களோடு
வெறுமென என்னைப் பார்த்தாய்

சட்டென யூகித்திடா கருணையுடன்
நான் உன் கண்ணீரை துடைத்திட முயன்றேன்
நீ எனது கைகளைத் தட்டி விட்டாய்

எதையோ நினைத்தப் பின்
இப்போது அழுகையை நிறுத்திவிட்டாய்
அறையிலிருந்து
ஒரு பறவையென வெளியேறிவிடவே நினைத்தாய்

நீ வெளியேறாவண்ணம்
நான் கதவை மூட முயல்கிறேன்
நீயோ வெளியேற முயல்கிறாய்
வலுக்கொண்டு நான் மூட
உன் முயற்சியை கைவிட்டாய்

இப்பொழுது
கட்டிலின் இன்னொரு ஓரம் அமர்ந்திருக்கிறாய்

சுவற்றில் வெகுநேரம் அசையாதிருக்கும்
இந்தப் பல்லியை என்ன செய்யலாம்

நான் நெருங்கி உன் கைப்பற்றிக்கொள்ள முயல்கிறேன்
நீ உன் கைகளை இழுத்துக்கொண்டாய்
இந்த திரைச்சீலைகள்
ஏன் இத்தனை அமைதியாக இருகின்றன
இந்த காற்றும்

இப்பொழுது
உன்னை மார்போடு இறுகப் பற்றியபடி இருக்கிறேன்
பின் எதற்காக விசும்புகிறாய்
ஏனெனக் கேட்கிறேன்
நீ எதுவும் சொல்லவேயில்லை
திரும்ப விசும்புகிறாய்
உனை விலக்க எத்தனைக்கிறேன்
என்னை இறுக இறுக இறுக அணைத்துக்கொண்டாய்

எனக்குத் தெரியும் ஏனென

இப்பொழுதும் நான் உன்னிடம் இருப்பதற்கான காரணம்
அது ஒன்றன்றி வேறெதுவுமில்லை.

- நளன்
July 8th 2015

............

தயவுசெய்து
அந்தப் பாடலை நிறுத்துங்கள்

என் நெஞ்சம் வலியால் நிரம்புகிறது
உன் நினைவுகளுக்குள் வலிய இழுத்துத் தள்ளுகிறது
உன்னோடு இருந்த நாட்களை
உன் புறக்கணிப்பை
குறிப்பாக
உன் பொய்களை
என் கண்முன் நிறுத்துகின்றது

இந்த காலி மதுக்கோப்பை
சுக்குநூறாக உடைத்து நொறுக்கப்படுவதற்கு முன்பாவது

தயவுசெய்து
அந்தப் பாடலை நிறுத்திவிடுங்கள்.

- நளன்
June 21st 2015

................

இந்த நெடுஞ்சாலைப் பயணத்தில்
இருப் பக்கங்களிலும் விரையும் வாகனங்களினால்
காற்றில் திணறுகின்றன அரளிச் செடிகள்

சிறு வயதில் ஒரு நாள்
திரும்பத் தரவியலாதப் பணத்திற்காக
கந்துவட்டிகாரன்
அம்மாவை திட்டிப்போக
யாருமே பார்த்திராத மறுநாள் வைகறையில்
அவன் வீட்டு சன்னலை
கல்விட்டெறிந்து உடைத்து வந்ததை
இவ்வேளையில் நினைத்து கொள்கிறேன்

இம்மழைக்காலங்கள் ஏன் எப்போதும்
நினைவுகளைக் கிளருகின்றன

குளிருக்கு இதமாக
சுருண்டுப் படுத்திருக்கும்
மழைக்கால நாய்களைப் போல
ஆட்களற்ற இப்பேருந்தில்
கண்ணாடிகளில் வழியும் மழையை
பார்த்தபடி புகை காற்றில் நிரம்ப
புகைப்பிடித்தல் ஒரு ஆசுவாசம் 

தன் பழைய முகத்தை
கழற்றி எறிந்தப்பின்
ஒரு கூட்டுப் புழுவாக
இவ்வேளை காத்திருக்ககூடும்தானே
ஏதேனுமொரு கம்பளிப்பூச்சி
என்றாவது ஒரு நாள்
சிறகு முளைத்து ஒரு வண்ணத்துப்பூச்சியாக
அங்குமிங்கும் அலைவதற்கு

எப்போதும்
முளைத்திடாத சிறகுடன்
எந்தவொரு கசப்பான நினைவையும்
பழைய முகத்தையும்
கழற்றியெறியவியலாத நான் காத்திருக்கின்றேன்
குறைந்த பட்சம்
இந்த மழை நிற்பதிற்கு.

- நளன்
June 13th 2015

Sunday, March 22, 2015

.............இந்தப் பயணத்தில்
கடந்துப்போகும்
வழிப்போக்கர்களைப் பார்த்தபடி இருக்கிறேன்

இந்நாட்களில்
நான் கற்றுக்கொண்டது என்னவோ
எல்லோரிடமிருந்தும்
ஏதோவொரு வகையில்
தொலைந்துப்போதல் எவ்வளவு நல்லதென

எத்தனையோ முறை முயன்றும்
சொல்லாது மறைத்துவைத்துக் கொண்ட
சொற்களை நேற்றுப் பேசினாய்

முற்றிலும் அழுகிப்போன 
இச்சொற்களை
எவ்வளவு காலம் மனதில் வைத்திருந்தாய்

இன்று எந்த பாசாங்குகளும்
இல்லையெனினும்
என்னை அதிர்வுரச்செய்வதெல்லாம்
சில நாட்களுக்கு முன்பான உரையாடலில் 
இடையிடையேயான
உன் புன்னகைகள் மட்டுமே

மனதில் இத்தனை
கசப்புக்களை வைத்துக்கொண்டு
புன்னகைத்துப் பேச உன்னால் எப்படி முடிந்தது?

இருப்பினும்
எனக்குத் தெரியும்
உனது இயலாமையை

நேற்று எந்த சலனமுமின்றி
நீரின் மேல் ஏன் கல்லெறிந்தாயென

நீர்வளையங்களுக்குப் பின்னரான
மேற்பரப்பென
மெல்ல
எதுவுமே நடந்துவிடாததுப் போல
இன்று அவரவர் நிலைக்கு மீள்கிறோம்

கணக்குமுந்தன் சொற்கள் மட்டும் இருக்கிறன
நீரினடியில் கற்களைப் போல
மிக ஆழமாக.

Tuesday, February 3, 2015

...........

தக்க சந்தர்ப்பத்திற்காக
காத்திருக்கின்றோம்
யாவரும்

முன்னெப்பொழுதும் வெளிப்படுத்தாது
இதுவரை தேக்கி வைத்தப் புகார்களை
மொத்தமாக சேர்த்து
சேற்றைப் போல
முகத்தில் அறைவதற்கு

Monday, January 19, 2015

.............

எல்லாவற்றிர்க்கும் இருக்கின்றன
ஏதோவொரு காரணங்கள்

இப்பொழுதெல்லாம் நீ பேசி முடித்தப்பின்
நான் கேட்பதேயில்லை
அழைத்தது யாரென

நீயாக சொல்வதுமில்லை


29 டிசம்பர் 2014
- நளன் 

அந்த குரல்கள்

எல்லா வேளைகளிலும் மழைத் தூரும்
இக்கார்காலத்தில்
இந்த இதமான வெந்நீர் குளியலைப் போன்று ஏதுமில்லை

மஞ்சள் விளக்குகள் பின்னால் நகர
இத்தொய்யத்தில்
ஊர் திரும்புகிறேன்

குளிர்மிக்க அதிகாலைகளில்
காடுகளில் அலைந்து
அக்காவுக்காக டிசம்பர் பூக்களைப் பறித்து வந்தது
நினைவிலாடுகிறது

சென்ற முறை
மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை காரணமாக
தான் முலையற்றிருப்பதை
முந்தானையை விலக்கி காட்டிய
ஜெயா பெரியம்மா இப்பொழுது இல்லை

மழைக் காற்று
முகத்தில் படர கண்களை மூடிக்கொள்கிறேன்

நின்று போன கடிகாரத்தில்
உறைந்து போய்விடுகிற காலத்தைப் போல
தேங்கிவிடுகிறன சில நினைவுகள்

என்ன இருக்கிறது
இந்த இருத்தலில்
மற்றும் இல்லாது போதலில்

கூதிர்கால இலைகளைப் போல
ஒவ்வொருவராக
இறந்துப் போகிறார்கள்

அவர்களது குரல்கள் மட்டும்
என்றைக்கும்
என்னிடம் இருக்கிறன.19 டிசம்பர் 2014
- நளன்

பறவைகள் வெளியேறியத் தீவு

எங்கிருந்து வந்ததென தெரியவில்லை
சில மாதங்களாக
மொட்டை மாடியில் சுற்றித் திரிகிறன
இரு வெண்ணிறப் புறாக்கள்

பார்த்ததும்
முதலில் ஓடி மறைந்தவை
நான் உணவளிக்க துவங்கியதும்தான்
எனை நம்ப ஆரம்பித்தன

யாருடையதாக இருக்கும்

எப்படி இருப்பினும்
தன்னிடத்தை விட்டு வெளியேறுதல்
துயரம்

எனினும் சில நாட்களில்
நாங்கள் நண்பர்களாகியிருந்தோம்
அவை என் கை தோள் தலைமேல் அமருமளவிற்கு

கின்னர இசை மிதக்கும் மாலைகளில்
அவைகளுடனிருப்பது மனிதர்களுடன்
இருப்பதைக்காட்டிலும் எனக்குப் பிடித்திருக்கிறது

அவ்வெண்ணிறம் ஏகாந்தம்

படபடக்கும் அவற்றின் சிறகுகள்
எனது நீண்டகால ஏக்கம்

இதற்கிடையில்
இன்று காலை என் வீட்டிற்கு வந்த பெண்ணொருவள்
அப்புறாக்களை தன்னுடயவை என்கிறாள்

நான் எப்படி விட்டுக்குடுப்பது
இல்லை
அவை என்னுடயவை என்றேன்

இல்லை அவை தன்னுடையவை என்கிறாள்

தான் பக்கத்துத் தீவில் வசிப்பதாகவும்
அங்கிருக்கும் போர்க்காலச் சூழலில்
தொடரும் வெடிச்சப்ததைக் கேட்க சகிக்காது
அவைகள் வெளியேறிவிட்டதெனவும்
அவைகளைத் தேடி
வெகுதொலைவு வந்திருப்பதாகவும்
தயவு செய்து தந்துவிடுங்களென
மூச்சிறைக்கக் கேட்கிறாள்

தந்துவிடலாமெனினும்
பறவைகளே வெளியேறியத் தீவில்
நீ எப்படி இருக்கிறாயென எதார்த்தமாகக் கேட்டேன்

அத்துனை வெறுமையாக எனைப் பார்த்தப்பின்
சொல்லாது கொள்ளாது
வெளியேறி முகங்களுக்குள் தொலைந்துப்போனவளை
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்

நமது கையாலாகாதத் தனத்தை மூடிமறைக்க
எல்லோரையும் இங்கேயே
அழைத்துக்கொள்ளலாம் தானே
எட்டுப்பேர் தாரளமாகத் திரியும் வீட்டில்
மேலுமொருவர்
குறுகிப்படுத்துறங்கவா இடமில்லை.10 செப்டம்பர் 2014
- நளன்

............

இந்த சுவரைப் போல ஏதுமில்லை
எவ்வளவுதான் தலைமுட்டி உடலழுந்திப் படுத்தாலும்
அவை விலகுவதேயில்லை.


14 ஆகஸ்ட் 2014
- நளன்

...............

யாரிடமும் பகிரவியலாத சொற்கள்
சுவாசத்தை கடினமாக்குகிறன

இந்நாட்களில்
மழை அவ்வளவாக இல்லை

முற்றிய சோளங்களுமில்லை
பறவைகளும் இல்லை
அவற்றின் ரீங்காரங்களுமில்லை

அவமதிப்பிற்கு பின்னரான இந்த இரவில்
தனித்து கரையொதிங்கிய
ஒற்றை தோணியென அலைமோதுகிறேன்

உன் நினைவுகள் அழுந்தும் துயரை
வேறெப்படி பதிவு செய்வது.


13 ஆகஸ்ட் 2014
- நளன்
 

கைவிடப்பட்டப் பொழுது


பற்றுவதற்கு ஏதுமில்லாமல்
காற்றிலலைகிறன பிச்சிப்பூக் கொடிகள்

இம்மழைக்கால தவளைகளின்
குரலை எவ்வளவு நேரத்திற்கு கேட்டுக்கொண்டிருப்பது

உன்னால் புறக்கணிக்கப்பட்டப்பின்
இந்த இரவு கொண்டு வருகிறது
வாழ்வின் அத்தனைத் துயரங்களையும்

கவிழ்ந்தப்பின் திரும்ப இயலாது தவிக்கும்
கரப்பான்பூச்சியை ஒத்திருக்கிறேன்

நாட்கள்
வேகமாக செல்வதாக தோன்றினும்
மிக நீளமானது இந்த வாழ்வு

உனக்கு நினைவிருக்கிறதா
அன்றொரு நாள்
நெஞ்சம் இறுக அணைத்துக்கொண்டாய்

நெற்றியிலுன் ஈர முத்தம்
நான் கண்களை மூடிக்கொண்டேன்

மழைக்காற்றுக்கு எதிர் திசையில்
பறக்கும் அக்குடையை சமாளித்தபடி நடந்துப்போனோம்

இன்று
இக்கைவிடப்பட்டப் பொழுதில்
உயிர் வலிக்கத் தனித்திருக்கிறேன்

தூக்கியெறிந்த கண்ணாடியென
குளியலறைக்குள்
குலுங்கி உடைந்து அதிரும் என்னுடைய கண்ணீர்

இம்மழைக்கால தவளைகளின்
குரலை எவ்வளவு நேரத்திற்குதான் கேட்டுக்கொண்டிருப்பது.


 04 ஆகஸ்ட் 2014
- நளன்

.....................


ஒருப் பிடிப்பும‌ற்று
மிகுந்த சோர்வாக இருக்கிறது

சன்னல் வழியே
இக்காலை
மழையைப் பார்த்தபடி இருக்கிறேன்

பாடல்களால் நிரம்பி இருக்கிறது எனது உலகம்
கேட்கும்
ஒவ்வொரு பிடித்தமானப் பாடல்களும்
எனை கைப்பிடித்து எங்கோ அழைத்துச் செல்கிறன
பெரும்பாலும் இறந்த காலத்திற்கு

யாரேனும் ஒருவரை
ஏதேனுமொரு நிகழ்வை
சமயங்களில் கசப்பான எதோவொன்றை
நினைத்துக் கொள்கிறேன்

மனநிலைக்கு பொருந்திப்போக இயலாதப் பாடல்கள்
எனை எங்கும் அழைத்துச் செல்வதேயில்லை

காற்றுத் தீண்டுமிந்த‌ பேருந்துப் பயணத்தில்
அத்தனை யோசனைக்குப்பின்
சொல்கிறாய்

அரிப்பெடுத்தால்
எங்காவது போக வேண்டியதுதானே
எனை நம்ப வைத்து ஏன் கழுத்தறுக்கிறாயென

எத்தனை நிச்சலமான தருணம்
நான் எதுவும் சொல்லவேயில்லை

எக்காலத்திலும்
எந்தவொரு உறவிலும்
சந்தர்ப்பம் கிடைத்தால்
இரவுகளில் தன் விருப்பப்படி புணர்ந்துத் திரியுமொரு
சாதாரண விலங்கைப் போலவே இருந்திருக்கிறேன்

இதைச் சொல்கையில்
நீங்கள் என்ன நினைப்பீர்கள்
என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை


எனது நிலைப்பாடு
தெளிவாக இருக்கிறது 


எப்படியேனும்
வழியில் காணும் யாரேனும் ஒருவர்
உங்களை என்னை சலனப்படுத்திவிட இயலுமெனினும்
உங்களதிந்த
நிலைப்பாடு யதார்த்ததிற்கு அப்பாற்பட்டிருக்கிறது 
 
உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்த இயலாதுப்போகும் 
இச்சமூகத்தில் வாழுதலென்பது
எப்பொழுதும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது

எனக்குத் தெரியவில்லை
ஒரு மலர்
மெல்ல அவிழ்வதைப் போல
மிக எளிதாக எங்கனம் இருப்பதென.


 12 ஜூன் 2014
- நளன்

நீலம் இழத்தல்


இன்று மாலை மழைப் பெய்ததில்
ஏதோ ஒருவகை நிம்மதி

இப்பொழுதெல்லாம்
நீ வருகையில்
எனது கண்களில் மிளிர்வதில்லை
எந்தவொரு எதிர்பார்ப்பும்

இப்பொழுதெல்லாம்
நாம் உதடுகளில் முத்தங்களிட்டுக்கொள்கையில்
நீ மூடிக்கொள்வதேயில்லை
உனது இமைகளை

இப்பொழுதெல்லாம்
நமது பிரியங்கள்
குடிக்காமல் ஆறிய தேனீரை ஒத்திருக்கிறது

முன்னெப்போதும் இல்லாமல்
எனது சிறிய‌ சிறிய பிசக்குகளையும்
கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டாய்

நமது விரல் நுனிகள் தருவதில்லை
எந்தவொரு கதகதப்பையும்

இந்த இரவு
மௌனங்களில் நிரம்பியப்பின்
எழும் துளி ஆட்சேபனையில்
பாதியிலேயே நின்றுப்போகிறது நமது நெருக்கம்

இந்நாட்களில்
வசீகரமிழந்த உனது குரல்
ஒரு வழிப்போக்கனைப் போல என்னை கடந்துப்போகிறது

நீ கேட்கிறாய்
இரவு வந்தவுடன் வானம் நீலமிழந்து கருப்பதேனென

இவ்வளவு நாளும்
நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்
வானம் எப்பொழுதும் நீலமாகவே இருப்பதாகவும்
நிலம் மட்டுமே கருப்பதாகவும்.
 
26 ஏப்ரல் 2014
- நளன் 

....................

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது
சிறு வயதில்
புளிய‌ மரங்களை வேரோடுச் சாய்த்த
அந்த பெருமழைக் காற்றை

மழை நீரில் நிரம்பிய
அந்த வீதிகளை

நீச்சல் பழகிய
கருங்குளிர்ந்தநீர் தெப்பக்குளத்தை
அதனைச் சுற்றி அமைந்திருந்த
மேலே நடப்பதற்கு ஏதுவான
பாசிப் படர்ந்த நீண்ட கருஞ்சுவரை

ஊரின்
மிகப் பெரிய அரச‌ மரத்தை

பட்டம் விடப் பழகிய நாட்களை

வண்ணங்கள் பூசி
விரட்டி விரட்டி நீரடித்த
மாரியம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழாவை

திருவிழா முகங்களை

பால்யகால அம்மாவை

எதைக்கொண்டும் நிரப்ப முடியாது
வெறுமை மட்டுமே இருக்கும்
இந்நாட்களில் வாய்க்கவில்லை
ஒரு திருவிழா நாள்
ஒரு பெருமழை நாள்

இன்றைய
இந்தப் பயணத்தில்
பண்பலையில் யாரோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
தேவையற்ற ஏதோ ஒன்றை

ஒரு பிடித்தமானப் பாடலொன்றிக்காக
காத்திருக்கிறேன்.
 
01 ஏப்ரல் 2014
- நளன் 

புறநானூறு

நீங்கள் எட்டுப் பேர் இருக்கிறீர்கள்
எதிரி ஒருவன் மட்டும் தான்

இருப்பினும் எதிரி
எங்கு எப்பொழுது வேண்டுமானாலும்
தாக்கலாமென
உங்களுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது

நீங்கள் நம்பி இருக்கிறீர்கள்
உங்கள் கூட்டத்தின் ஒற்றை மாவீரனை
பிளிறைப் போன்று
உறுதிமிக்க அவனது உடல் வலுவினை

எந்த ஒரு உயிரினப் போரளிக்குமான
மிக முக்கியக் கடமை
தம் மனைவி மக்கள் மண்
இவற்றை காப்பதென முழங்குகிறான் மாவீரன்

வீரம் மிக்க அவனதுப் பேச்சில்
சிலிர்த்துக் கிடக்கிறீர்கள்
ஆண்மைமிக்க அவனது மொழி
உங்களை வசீகரிக்கிறது

முன்காலங்களில்
எனது வாளுக்கு காயம்பட்டு
பலமுறை பேடித்து ஓடியவன் தான் இந்த எதிரி எனினும்
யாரையும் குறைவாக
எடை போடவேண்டாம் என்கிறான் மாவீரன்

இம்முறை அவனதுப் பேச்சு
உங்களைச் சிந்திக்க வைக்கிறது

போர் நாள் நெருங்க நெருங்க
கொன்றைப் பூக்கள் நிறைந்த
குடில்க‌ளுக்குள் பெண்களையும் குழந்தைகளையும் ஒளித்துவைத்து

நீங்கள் தயாராகவே இருக்கிறீர்கள்

பிறிதொரு கார் நாளில்
குளம்பொலிகள் அதிர அதிர வருகிறான் எதிரி

குதிரையில் இருந்தவாறே
அவன் இழுத்து எய்திய அம்புகள் உங்களது
கேடையங்களில் ஊடுருவுகிறது
மறைந்திருந்த‌ மாவீரன் குதிரையை தடம்புரளச்செய்ய
மழைநீர் தெறிக்க கீழே விழுகிறான் எதிரி

இருவருக்கும் நடக்கிறது
மிக கடுமையானப் போர்

முடிவில்
வஞ்சகமும் சூழ்ச்சியும் கொண்ட எதிரியின் வாள்
குரல்வளையை பதம்பார்க்க
இரத்தம் சிதற‌ உடைந்து சரிகிறான் மாவீரன்

தும்பைச் செடிகளில் இரத்தம் படிகிறது

எதிரியின் வாள்
உங்கள் நெற்றியில் நிற்கும் இத்தருவாயில்
அவனை வணங்கி மண்டியிடுவதைத் தவிர
வேறு வழியில்லை உங்களுக்கு

மாவீரனின் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்

உங்கள் கூட்டத்தின் இளம் பெண்கள்
எதிரியால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்

இருப்பினும்
அவனை எதிர்க்க வலுவற்று
மௌனமாக இருக்கிறீர்கள்

எதிரி
இப்பொழுது இது எனது மண்
நீங்கள் எனது அடிமைகள் என்கிறான்

இப்பொழுதும் நீங்கள் மௌனமாகவே இருக்கிறீர்கள்

மாவீரனின் மனைவியை அபகரித்தபடி
எதிரி அவனது நாடு திரும்புகிறான்

இப்பொழுது நீங்கள்
உலகிலுள்ள அலட்சியமிக்க‌ மற்ற கூட்டத்தின் முன்னே
தன் கூட்டத்திற்கு அநீதி நேர்ந்துவிட்டதாகவும்
உங்கள் தலைவன் கொல்லப்பட்டதாகவும்
நீதி வேண்டுமெனவும்
கெஞ்சுகிறீர்கள் கதறுகிறீர்கள்

இப்பொழுது
அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்

எதிரியின் கூட்டம்
எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கத் துவங்க
உங்களது
முன்னோர்களின் வீரமிக்க காப்பியங்களைக் கிழித்து
எல்லாம் பொய்கள்
கட்டுக்கதைகள் என்கிறீர்கள்

நாட்கள் கழிகிறன

இந்நாட்களில்
நீங்கள் அடிமைகளாகவே வாழப் பழகிவிட்டீர்கள்

கள்ளுண்டு
தம் தம் மனைவியைப் புணர்ந்து திரியும்
உங்களுடைய புதிய குழப்பம் இப்போது என்னவெனில்
உங்களுள் புதியத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பதென்பது

கூட்டத்தில்
உங்களது செல்வாக்கை நிலைநிறுத்த
எல்லோருக்கும் பாதுகாப்பு,
எல்லோருக்கும் இலவச உணவு,
மிக முக்கியமாக
எதிரியிடமிருந்து இந்த மண் மீட்கப்படும்
என வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறீர்கள்

வேறுவழியில்லாமல்
என்றாவது ஒருநாள் மீண்டும்
இம்மண் நம் சொந்தமாகுமென்ற எளிய‌ நம்பிக்கையில்
காத்திருக்க துவங்குகிறார்கள் மக்கள்

செத்தொழியுங்கள் ஈனப்பிறவிகளே

நம்பிக்கை என்பது
இயலாமையின் கடைசி மிச்சம்தான் இல்லையா?


24 மார்ச் 2014
- நளன் 

.........

இரு முகங்களுடன்
அலைகிறோம் எப்பொழுதும்

நமக்கு தெரிந்திருக்கிறது
எந்த முகத்தை
எப்பொழுது மாட்டிக்கொள்ள‌ வேண்டும்
அல்லது கூடாதென

தற்செயலாகவோ
யதார்தமாகவோ
இல்லை மறைந்திருந்தோ
இன்னொரு முகத்தை காண நேர்ந்துவிடுகையில்
பின் நாம் ஒருபோதும் திரும்புவதேயில்லை
நமது உறவின் ஆரம்ப நிலைக்கு.


20 மார்ச் 2014
- நளன் 

................

இந்த விடலைப் பருவ சிறார்களுக்கு
கோபம் எங்கிருந்துதான் வருகிறதென தெரியவில்லை
சாப்பாடு பிடிக்கவில்லையென
தட்டோடு தூக்கி எறிந்து வெளியேறி பனியில் நிற்கிறான்

அம்மா சொன்னாள்
உள்ளே வா, குளிருமென‌

அவளைப் பார்க்காது அவன் சொன்னான்
குளிரும், அதனாலென்ன?

அதனாலென்ன உனக்கு சளிப் பிடிக்கும்

சளிப் பிடிக்கும், அதனாலென்ன?

அதனாலென்ன
இப்படியே வெகுநேரம் நின்றிருந்தால்
உடல் விறைத்துவிடும்

உடல் விறைத்துவிடும், அதனாலென்ன?

உடல் விறைத்தால் நீ இறந்துவிடுவாய்

சிறிது இடைவெளிக்குப்பின்
அவன் சொன்னான்

நான் இறந்துவிடுவேன், அதனாலென்ன?


05 மார்ச் 2014
- நளன் 

..................

புன்னகைகளற்ற உரையாடல்கள்
நம்மை இன்னும் பிளவுபடுத்துகிறன

அவ்வளவு ஆதுரமிக்க
நெருக்கத்தின் பின்னும்
மற்றொரு தருணம்
நாம் மீள்வதென்னவோ
கேளாது எஞ்சிய நமது புகார்களில் மட்டுமே

முன்னெப்போதும் இப்படி இருந்ததா?

பிறகு ஏன் இவ்வாறு ஆனது?

பின்பனி காலம் தொடங்கிவிட்டது

வெய்யிலில் மட்டுமல்ல
இப்பனியிலும் காய்கிறன
கொடிகளும் புற்களும் குறுஞ்செடிகளும்

வற்றத்துவங்கும் கன்மாய்களிலும்
குளம் குட்டைகளிலும்
எளிதாக மீனுண்கிறன
கொக்குகளும் இன்னபிற‌ பறவைகளும்

இப்போதைக்கு
இருக்கும் ஒரே ஆறுதல்
இப்புங்கைமரத்தின் இளம் கொழுந்துகள் மட்டுமே

அதிகாலைப் பனியில்
குளிர்காய்தலென்பது அத்தனை இதமானதாக இருக்கிறது

கைகளில் ஒத்தி எடுத்த
தீயின் கதகதப்பை கன்ன‌த்தில் வைத்துக்கொள்கிறேன்

இந்த தீயும்
இந்த தேநீரும்
பண்பலையின் இந்தப் பாடலும்
எனை இன்னும் எளிதாக்குகிறன

ஒரு சீரான இடைவெளி
இருக்க வேண்டும் போல

சமயங்களில்
மிக்க நெருங்கினால் சுடும்
விட்டு விலகினால் குளிரும்
இக்குளர்காய்தலை ஒத்திருக்கிறோம்


03 மார்ச் 2014
- நளன்

Friday, January 3, 2014

இது குளிர்காலம்


அவிழ்ந்தக் கூந்தலை முடிந்தபடி
செருப்பைக்கூடச் சரியாக அணியாது
அவசர அவசரமாக
படியிறங்கி நீ வெளியேறுகையில்
திரும்பிப்பார்க்காது சொன்னாய்
பின்தொடராதேவென

எப்பொழுதோ முறிந்துவிட்டதாக
நான் நினைத்துக்கொண்டிருக்கும் நமது உறவு
சம்பிரதாயத்திற்கேனும்
தொடர்வதென்னவோ சில‌ காரணங்களுக்காகத்தானெனினும்
நான் உனக்கு துரோகம் இழைத்துவிட்ட
இப்பிற்பகலில்
மொட்டை மாடியில் துணையிருக்கிறது தென்னங்காற்று

ஆம்
நான் பொய்களாலானவன்
நான‌ணியும் காலணிகள் மட்டுமே அறியும்
என் நடத்தையை

உத்திரவாதங்களற்றது
இந்த இருத்தல்
இந்த உறவு
யாதொன்றும்

புகைப்படங்களோ அல்லது உங்களைப்பற்றிய குறிப்புகளோ இல்லையெனில்
மக்கி சிதைந்து மற‌ந்துப்போகும் நினைவுகளென
காணாமல் போகக்கூடும் இவ்வாழ்க்கை

இது குளிர்காலம்

பனியுதிருமிந்த‌ மாலையில்
வனாந்திரத்தின் இசையென
வெகு அமைதியாக இருக்கிறேன்

சன்னலில் மோதி மோதி உடைகிறன
காட்டுப்புறாக்கள்.

அப்ரீத்எப்பொழுதும் என்னை
கைவிட்டுவிடுகிறது இந்த மழைக்காலம்

வருத்தங்களை ஒளித்துவைத்துக்கொள்ளும் கலை
இப்பொழுது சாத்தியமாகிவிட்டது

நான் போவதில்
அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை

பிரிவை எதிர்கொள்ளும் மனமின்றி
எங்குப் போகிறேனென கேட்கிறான் குழந்தை
காலணியை கட்டிக்கொண்டே
நான் மெல்லச் சொன்னேன்
மாமா வேலைக்குப் போகவேண்டும்
வேலைக்குப் போனால்தான் பணம் கிடைக்கும்
பணம் கிடைத்தால்தான் உனக்கு மிட்டாய் வாங்கமுடியுமென

நேற்று முழுவதும் என்னுடன் சுற்றித் திரிந்தவன்
இரவுகூட‌ என் கைகளுக்குக்கிடையே 

ஒரு பூனைக்குட்டியைப் போல
உறங்கிப்போனான்

எதையோ கொடுக்கும்பொருட்டு
கை நீட்டி நின்றிருந்தவனை
வெளியேறுமுன் திரும்பிப்பார்த்தேன்

நெருங்கியபோது

தன் பிஞ்சு விரல்களைப் பிரித்து
எனக்கு கொடுக்க நீட்டினான்
தான் வைத்திருந்த ஒற்றை நாணயத்தை

நான் சொன்னேனல்லவா
நான் போவதில்
அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை.

Monday, October 14, 2013

..............


காற்றில் நிரம்புகிறது இசை

பேருந்தில்
ஒயர் கூடையில் நாய்க்குட்டியைத் தூக்கி போகும்
இச்சிறுவன் நினைவுறுத்துகிறான் எனது சிறுவயதை

இந்நாட்களில்
நான் வேண்டுபவை எவையெனத் தெரியவில்லை
ஆனால் தெரிந்துவைத்திருக்கிறேன்
எனக்கு வேண்டாதவைகளைப்பற்றி

இந்த பருவத்திலும்
மாறிக்கொண்டே இருக்கிறேன்
சென்ற அதற்கு முந்தைய பருவங்களைப் போலவே

முன்னெப்போதைக்காட்டிலும்
இந்த பருவத்தில் தான்
தற்கொலையைப் பற்றியாதான சிந்தனைகள்
சற்று மேலோங்கியே இருக்கிறன

உறக்கமில்லா இரவொன்றில்
கண்களை இறுக்கி கனவுக்குள் மூழ்கிப்போதலைப் போல
மரணத்தை நினைத்துக்கொள்கிறேன்

பெரும்பாலும்
தற்கொலைக்கு இரு காரணங்கள் இருக்கிறன
சட்டென ஒரு கோபம்
அல்லேல் வெகுகாலமாய் மனதில் தேங்கியிருந்த ஒரு தீர்மானம்

எனக்கென்னவோ
அது ஒரு வகை விடுபடல்

எல்லாவித துன்பங்களிலிருந்தும் நீங்குதல்

இவ்வாழ்வோடு பொருந்தி
ப்போகவியலாத
ஒரு கணம்

மற்றும்

ஆயிரமாயிரம் ஆண்டுகால‌ நாகரீகத்தின் பின்னும்
அன்பு செய்வதெங்கனமென
அறிந்திராத உங்களின் இச்சமூகத்தை புறக்கணித்தல்

Tuesday, September 24, 2013

............

பேருந்திற்குள் மாட்டிக்கொண்ட
வண்ணத்துப்பூச்சியொன்று
அது வெளியேறும் திசையறியாது அங்குமிங்கும் அலைகிறது

மூடிக்கிடக்கும் சன்னல்களில்
மோதி மோதி திரும்புகிறது

எனக்குத் தெரியும்
அதன் திசையை
வெளியேறியாக வேண்டியதன் தேவையை

வெளியேறினால்
இம்மழையில் எங்கனம் பறக்குமென்பதென் கவலை
மற்றும்
இவ்வண்னத்துப்பூச்சிகள்
எப்போதும் அந்நியரை நம்புவதில்லை

ஒருவேளை
அது என்னை நம்பினால்
விரல் மூடிய என்கையிலேந்தி
மழை நின்றப்பின் அதனை
இக்குளிர் காற்றோடு காற்றாக பறக்க‌ விட
நான் தயார் 

Wednesday, August 14, 2013

...................

அன்றொரு நாள்
அத்தனை சிறப்பான‌ உடையணிந்திருந்தாய்
லேசான உதட்டுச்சாயத்துடன்
ஒரு சிகரெட்டை புகைத்தவண்ணம்
இளம்முலை அசைய
அந்த வீதிகளில் மெல்ல‌ நடந்தாய்
இல்லையா?
கடப்போர் அனைவரின் கண்ணும் உன்மீதிருந்தன

சிறு கல்லிடரி நீ தடுமாற
அவர்கள்
கவனம் கொள் கண்ணாடிச்சிலையே என்கையில்
கேலிக்கு சொல்லப்படுவ‌தாக நினைத்தாய்
பின்வேளையில் அதை
நினைத்துப் புன்னகைத்துக்கொண்டாய்

ஆனால்
இப்பொழுதெல்லாம் நீ அதிகம் பேசுவதில்லை
அதிகம் சிரிப்பதுமில்லை
இப்போதைய உனது எண்ணமெல்லாம்
அடுத்த வேளை உணவுக்கு என்ன‌செய்வதென்பதான‌து

எப்படி உணருகிறாய்
இந்த வாழ்வை
இது எத்திசையென அறியாதிருப்பதை

முன்பெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பாய்
தான் சமாதானங்களுக்கு அப்பாற்பட்டிருப்பதாய்
எவ்வித‌ எதிர்வித உடன்பாடுகளுக்கும் பொருத்துக்கொள்ள இயலாதென

இதோ கடைசி கெஞ்சலின் போதும்
போதைப்பொருள் இல்லை என்பவனிடம்
கொஞ்சம் யோசித்துப் பின்
வெறுமை நிரம்பிய கண்களுடன் கேட்கிறாய் ஒரு வினாவை
வேறெதேனும் எதிர்பார்க்கிறாயா?

எப்படி உணருகிறாய்
இந்த வாழ்வை
இது எத்திசையென அறியாதிருப்பதை
இருளும் முன்  வீடு திரும்பியாகவேண்டுமென்ற
கட்டாயமேதுமில்லாமலிருப்பதை

நகரத்திற்கு வருவதற்கு முன்
பலமுறை அறிவுறுத்தப்பட்டிருக்கிறாய்
கயவர்களிடம் கவனம் தேவை
கவனம் தேவையென
அதனால்
பெரும்பாலான அழைப்புகளுக்கு கதவை மூடியே வைத்திருந்தாய்
பார்த்து பார்த்து பழகினாய்
ஆனால் இப்பொழுது உனக்கு தெரிய வருகிறது
நீ ஒன்றுவிடாமல் ஏமாற்ந்ததென்னவோ
மிகவும் நம்பிக்கை வைத்திருந்த‌வர்களிடம் மட்டுமேயென‌

எப்படி உணருகிறாய்
இந்த வாழ்வை
இது எத்திசையென அறியாதிருப்பதை
இருளும் முன்  வீடு திரும்பியாகவேண்டுமென்ற
கட்டாயமேதுமில்லாமலிருப்பதை
முற்றிலும் வேறு ஒருவராக இருப்பதை

ஒளிகள் அலைந்த‌திரும்
இவ்விரவு மதுவிருந்தில்
இதோ ஒரு அழகிய‌ புதியவன்
வெகுநேரம் உன்னை மட்டுமே கவனித்தபடி இருக்கிறான்
சில சமயம் நீயும் அவனை பார்க்கிறாய்
அதோ அவன் இப்பொழுது உன்னை அழைக்கிறான்
போ. உன்னால் மறுக்க இயலாது
கடைசியாக நீ வைத்திருக்கும்
ஒரேயொரு விலையுயர்ந்த அந்த
பொருளை அவனுக்குப் பரிசளி
முத்தங்களை பரிமாறு
இருளில் தொலை. புணர்.

எப்படி உணருகிறாய்
இந்த வாழ்வை
இது எத்திசையென அறியாதிருப்பதை
இருளும் முன்  வீடு திரும்பியாகவேண்டுமென்ற
கட்டாயமேதுமில்லாமலிருப்பதை


குறிப்பாக
நீ நீயாக இருப்பதை

Wednesday, April 17, 2013

..........


ஒரு தொலைதூர மலைப்பயணத்தில்
உன் நினைவுகளினூடே
எடுத்து வந்தேன்
உனக்கே உனக்கென
சின்னஞ்சிறிய பரிசொன்றை

அந்த ஞாயிறன்று
அதை உனக்கு கொடுக்க நினைத்திருக்கையில் தான்
அது நிகழ்ந்தது
எல்லாவற்றையும் போல

எதிரே
அவர்கள் நீட்டிய
விலைமிக்க பொருட்களினூடே
வெளிபட்ட உன் களிப்பொன்றில்
எனது உயிர் ஒடுங்கி மீள

கொண்டுவந்ததை
யாருமே பார்த்திராதவண்ணம்
ஒளித்து வைத்துக்கொண்டேன்

Friday, March 29, 2013

இலைகளில் அதிரும் மழை

நீ அருகிலில்லாத‌ இன்று
எல்லா வேளைகளிலும் பெய்கிறது மழை
எல்லா வேளைகளிலும்

இந்த மழை நாளில்
தொலைபேசியில் என் மனமதிரச்செய்யும்
உன் குரலுக்காக காத்திருக்குமிவ்வேளையில்
கண்ணாடிகளில்
உடைகிறது இக்காலநிலை

நடுங்கிக்கிடக்கிறன பறவைகள்

சாம்பலும் கருமையிலும் நிரம்பிய வீதிகளில்
கணத்த நெஞ்சுடன் சும்மா நடக்கிறேன்
பின்
கொட்டும் மழையில்
பாசிப்படர்ந்த மொட்டைமாடி படியில் அமர்ந்திருக்கிறேன்

எனைப் பற்றி படர்கிறது குளிர்

கடல் மீனின் உலகென மிகவும் சிக்கலானதிவ்வாழ்வெனினும்
நான் இன்னும் மீதமிருப்பது உனதன்பால் மட்டுமே

வெகுதூரமிருக்கும் நீ
இக்கணம்
என்னை நினைத்துக்கொள்வாயா

நேற்றைய நமது கசப்பான உரையாடலை
நினைத்தபடி பார்த்திருக்கிறேன்
ஏதுமற்ற ஒன்றை.

மழையின் குரல்
இலைகளில் அதிருகிறது

Thursday, August 16, 2012

...................இல்லை
எவ்வித‌ வருத்தமுமில்லை

நேற்றையப் பயணத்தில்
தவிர்க்க இயலாது வெளிபட்ட
எனது விசும்பலை யாரோ கவனித்தார்கள்

அசௌகரியமாய் இருந்தது

கேட்காதீர்கள்
நன்றாயினும் தீங்காயினும்  அவை என்னாலானது
யாரையும் குறைக்கூற விரும்பவில்லை

கணக்குகள் தீர்த்தாகிவிட்டது
குறிப்புகள் நீக்கப்பட்டுவிட்டன
இனி ஒன்றுமில்லை
கடந்தவைகளைப் பற்றிப் பேச
எனக்கு விருப்பமுமில்லை

இன்று ஒரு பரத்தையைப் போல
மிக சுதந்திரமாக இருக்கிறேன்
விழுந்த‌ இறகொன்றைப் போல
எளிதாக சுற்றித் திரிகிறேன்

காலம்
நம் அனைவரையும்
பின்தொடர்கிறது இல்லையா?

சாம்பல் மினுங்கும் வானம்
இத்தனிமையின் சுவைக்கூட்டுகிறது

முன்னறியாத‌
இசைத்தட்டைச் சுழலவிட்டுவிட்டு
தேனீர் கோப்பையுடன் தாழ்வாரத்தில் நிற்கிறேன்

படபடத்தபடி
காற்றிலாடும் புளியங்கிளைகளை
ஆழ‌ப்பற்றுகிறன நீர்க்காக்கைகள்

மழை வரும் போலிருக்கிறது

Friday, June 29, 2012

இடம்பெயர்தல்

காற்றில் சிலிர்க்கிறது நீரின் மேற்பரப்பு

எப்பொழுதும்
ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நகர்தலென்பது
பயணங்களைப் போன்று இருப்பதில்லை

மனிதர்களை
செல்லப் பிராணிகளை
தொட்டிச் செடிகளை
பிடுங்கிய தோட்டதுச் செடிகளை
லட்சோபலட்சம் அசையாப்பொருட்களை
வண்டியில் ஏற்றியாகிவிட்டது

ஆயினும்
மீந்துவிடுகிறன சில நினைவுகள்

வெறுமை நிரம்பிய முகத்தோடு
கடைசியாய் ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன்

புதிய வீட்டில்
கொணர்ந்தப் பொருட்களை வகைப்படுத்தியப்பின்
முதல் வேலையாக
பிடுங்கி வந்த தோட்டத்துச்செடிகளை
குழி தோண்டி நட்டு மண்ணனைத்து
நீரூற்றினேன்

அவை தலைசாய்த்தபடியிருந்தன

வீட்டிற்கும் புதிய பள்ளிக்குமான
இடைபட்டப் பயணத்தில்
ஆறாவது முறையாக கேட்கிறாள் சாய்னா
அத்தா ஜீவிதாவும் வருவாளாவென

ம் என்றேன்

புதிய‌ வகுப்பறைக்கு முன்
அழுகைத் ததும்பும் முகத்துடன்
கால்களை கட்டிக்கொண்டு போகவேண்டாமென்ற‌வளை
அவள் உயரத்திற்கு குதிகாலிட்டு அமர்ந்து
வழியும் நீரை விரலழுத்தித் துடைத்து முத்தமிட்டு
திரும்பி பார்க்காது அவள் பிடி நழுவி வெளியேறினேன்

எங்கோ போகின்றன
சில பறவைகள்

மாலை
மீண்டும் காண்கிறேன்
இன்னமும் தலைசாய்த்தபடியேயிருக்கிறன‌
நடப்பட்ட தோட்டத்துச்செடிகள்

Thursday, May 3, 2012

பறவைகளைப் போல இருப்பதில்லை நீங்கள்

முதன் முதலாக பறக்க முயலும் பறவைகளைப் போல இருக்கிறார்கள்
தத்தி தத்தி நடக்க முயலும் மழலைகள்

பறக்க இயலாமல்
அவைகள் கிளைகளைப் பற்றுகையில்
அவர்கள்  சுவர்களைப் பிடித்துக்கொள்கிறார்கள்


தூக்கியணைத்து கொஞ்சி மகிழும்
இந்நாட்களில்
நீங்கள் எப்பொழுது கேட்டாலும் கிடைக்கிறன முத்தங்கள்
கன்னங்களில்
நெற்றியில்
பெரும்பாலும் உதடுகளில்

புணர்ச்சி வேண்டா சமயங்களில்
உங்களிடயே தலைமுட்டிக் குடைந்து
உங்களுக்குள் புதைந்துப்படுக்கும்
அவர்களைத் தடவிக்கொடுத்தபடி உறங்கிப்போகும் நீங்கள்
மற்றொருப் பொழுதில் அவர்களை வாளியில் நிற்க வைத்து குளிப்பாட்டுகையில்
முதுகில் சிறியதாக சிறகு வளர்ந்திருப்பதைக்கண்டு
மெல்ல அதிர்வுறுகிறீர்கள்

மார்போடு தூங்கும் அவர்களின் சிறகுகளை
வலிக்காமல் ஒவ்வொரு இறகாய் வெட்டியெறிந்தப்பின் 
பெருமூச்சொன்று நிகழ்ந்து மறையும்
இப்பொழுதில்தான் உங்களுக்கு நிம்மதி

சக பறவையுடனான
குழப்பங்களில் சிறகுகளை வெட்ட‌ மறந்துவிடுகையில்
முன்பைவிட வலிய‌
புதிய சிறகுகள் வளரத்துவங்குகிறன
இனி அவைகளை களைந்தெறிவது
ஒருபோதும் எளிதான‌தல்ல என்பதையறிந்த நீங்கள்
அவர்களுக்கான எல்லைகளைத் தீர்மானிக்கிறீர்கள்
தெருக்களில் மெல்ல மெல்லப் பறந்து திரும்புமவர்களை
கண்டுப் புன்னகைக்கிறீர்கள்
அணைத்துக்கொள்கிறீர்கள்
சில சமயம் எல்லை மீறுமவர்களை எச்சரிக்கையும் செய்கிறீர்கள்

எல்லா வேளைகளிலும் விழிப்புடனே இருக்கிறீர்கள்
விட்டுப் பறந்துவிடாதபடி

இருந்தாலும்
உங்களுக்குத் தெரியும்
தன் உணவை தானே தேடுவதையறியாத பறவைகள்
கூட‌டைந்தே ஆக‌ வேண்டுமென

மொழியறிந்த அவர்கள்
இப்பொழுது நன்றாக பறக்கிறார்கள்
மற்ற பறவைகளையும் விட உயரம் உயரம் பறப்பதைஎண்ணி
பெருமிதம் கொள்கிறீர்கள்

இம்முறை
கடலின் அக்கரைக்கு பறக்கும்
அவர்களின் விருப்பத்திற்கு தலையசைத்து
விடைகொடுத்துப்பின் வந்து அமர்கிறீர்கள்
இலைகளற்ற‌ கூதிர்கால மரமொன்றில்

ஒவ்வொரு நாளும்
தோன்றும் மறைவதுமாய் இருக்கிறது
ஒளி

இப்பொழுதெல்லாம்
உங்களால் அதிகம் பறக்க முடிவதில்லை

உங்கள் சிறகுகளிலிருந்து இறகுகள்
உதிர்ந்துகொண்டேயிருப்பதையெண்ணிக்கவலைக்கொள்ளும்
இம்முதுவேனிற் காலத்தில்
பழைய முத்தங்களில் நெகிழ்ந்து நனைகிறீர்கள்

தொலைதூரம் சென்றுவிட்ட பறவைகளின்
மீள்வருகைக்காய் காத்துக்கிடக்கும் நீங்க‌ள்
என்றாவது ஒருநாள்
அது நிகழ்கையில்
அவர்கள் கொடுப்பதாக இருந்தாலும்
நீங்கள் கேட்பதாக இல்லை.


முத்தங்களை.


........

விருப்பங்களில்லா மரங்களின் மேல்
படர்வதில்லை கொடிகள்
என்றாலும்

வேலிகள‌ற்று  இருக்கிறது இவ்வெளி

Sunday, March 25, 2012

காற்றோடு போதல்

இந்நாட்களிலென் குழப்பங்களெல்லாம்
வ‌ழிப்போக்க‌ர்க‌ளின் புன்ன‌கையை
எங்க‌ன‌ம் எதிர்கொள்வ‌தென்பதில்தான்

வீசும் வாடை காற்றில்
உலர்த்த தொங்கவிடப்பட்டிருந்த துணிகள் பறக்கின்றன

அதிகாலை வானை
காற்றில் மிதக்கும் பறவைகளை
மழைக்கு முந்தைய மேகங்களை
நிறம் மாறும் இலைகளை
நிலவை நீர்நிலைகளை
வின்மீன்களை
இனி கானாது போவேனோ

மேலும் இல‌ந்தையின் இச்சுவை

சொல்வதற்கு எச்செய்தியுமற்ற இவ்விரவில்
திரும்ப இயலாத தூரம்
என்கிற வாக்கியம்
மிகுந்த அச்சத்தைத் தருகிறது

திரைச்சீலையை விலக்கி
சன்னல்வழியே பார்க்கிறேன்
காற்றை

இந்நேரத்தில்
எதைத் தேடி அலைகிறது இக்காற்று
இப்பொழுதென் தோட்ட‌த்துச்செடிகளை அசைக்கிறது

வெளியேறி
ஒரு புன்னகைத் ததும்ப
காற்றோடு நடக்கிறேன்

எனக்குத் தெரியும்
என்னோடுவரும் இக்காற்று
பின்னொரு நாளென்னை துடித்தடங்கச்செய்யுமென்று

Monday, December 19, 2011

குறிஞ்சிப்ப‌ண்

மிளகுக்கொடிகள் படர்ந்த முற்றத்து மரத்தடியில்
புறாக்க‌ளுக்கு தானியவிதைகளை வீசிக்கொண்டிருந்த
குறிஞ்சி நிலத் தலைவி

நாட்களுக்குப் பிறகு
மலைப்போன்ற தோள்க‌ளுடைய முல்லை நிலத் தலைவன்
குளம்பொலிகளதிர‌ குறிஞ்சி நிலம் நோக்கி
வருகிறானென்கிறக் குறிப்பை
மலைகளின் மார்புகளுக்கிடையே வழிந்து
சலசலத்தோடும் குளிரோடை நீரைக் கொத்திப்பறக்கும்
இருவாச்சிப் பறவை உணர்த்தி போக
மீளாமகிழ்வுற்று மானென துள்ளித் திரிந்தவள்
இன்றைய‌ இர‌வு விருந்தில்
அவ‌ருட‌ன் உன‌து இசையைக் கேட்க விரும்புகிறேனென்றாள்

தூசுப் ப‌டிந்த‌
யாழையெடுத்து துடைத்துத் தூய்மைப‌டுத்தினேன்

இர‌வு நோக்கி மாலை ந‌கர‌
ந‌றிமிக்க குளவி மலர்ச்சூடி
விள‌க்கொளிகளும்
செருவிளைக்கொடிகளும் நிறைந்த‌ மாட‌த்தில்
காற்று க‌லைக்கும் குள‌த்து நிலவை
விடாது வெறித்திருந்த‌ த‌லைவி
எனது வ‌ருகைய‌றிந்து திரும்பினாள்

மலைத்தேனைக் காட்டிலும்
சுவைமிக்க‌ உண‌வொன்றை செய்திருப்ப‌தாக‌வும்
அது அவருக்கு மிகப் பிடிக்குமெனச் சொல்லி
நாணம் கொண்டாள்

இந்த நடுகை காலத்தில்
காற்றில் அலைந்து அலைந்து பற்றி எரிகிறது தீ
தகிகும‌தன் வெம்மையில் குளிர்காய்ந்தபடி
காத்திருந்தோம்

நிசி தேய தேய‌
த‌லைவ‌ன் வ‌ராத‌ கார‌ண‌ம‌றியாது அவள் வ‌ருத்தங்கொள்கையில்
துயர்மிக்க‌
மழைக்காலக் குறிஞ்சிப்ப‌ண்ணை மீட்டினேன்

வெகுநேர‌ம் கேட்ட‌ப‌டியிருந்து
விழியோர‌ம் நீர்த்துளிர்த்த‌வ‌ள்
ஏன் நிறுத்திவிட்டாய்
தொடர்
நான் க‌வ‌னித்துக்கொண்டுதானிருக்கிறேனென்கையில்
அவள் கன்ன‌த்திலிருந்து நழுவித் தரையில் உடைந்து சிதறியது
ப‌கிரயியலாத‌‌வொரு முத்த‌ம்.

Wednesday, December 14, 2011

..........

ஒரு சலனமுமின்றி
வெளியேறினேன்

ஒரு கசப்பான முடிவென்பது
அத்தனை சிறப்பானதாக இருக்கிறது
முடிவற்ற கசப்பைக் காட்டிலும்

Friday, October 28, 2011

ஒரு மழைக்கால‌ வினா

வலுவாகவே வீசுகிறது காற்று

கம்பி வேலியில் மாட்டிக்கொண்ட
சிதைந்த பாலித்தீன் பையைப்போல
அலைவுறுகிறது நிலை

அத்தனை ஆழமாய் என்னுள் படர்ந்துவிட்டநிலையில்
உன்வேர்களை முழுவதும் களைந்தெறிய
முடிவாக‌ ஒரு வழியேதுமில்லையெனினும்
நேற்று என்னையும் மீறி படர்ந்துவிட்ட‌ உன் கொடிகளை
ரத்தம் சிதற சிதற வெட்டியெறிந்தேன்

எல்லோரும் இயல்பிலிருக்க
தனித்த பயணங்களில் மனம் எங்கோ போகும்

இக்கணம் இலகுவாக வீசுகிறது காற்று
ஆனந்தம்
ஒருசேர சலசலத்து
அற்புதமாக அசைகின்றன மழைக்கால மரங்கள்

பவிழம் மணக்கும்
இவ்விரவில் அருகில் யாருமில்லையெனினும்
இருக்கவே இருக்கிறது பசி
உணவகமொன்றில் உணவுப்பட்டியலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்

சிறிது நேரம் கழித்து
அருகில் நெருங்கிய சேவைப்பெண் கேட்கிறாள்
'தீர்மானித்துவிட்டீர்களா உங்களுக்கென்ன வேண்டுமென?'

இப்பொழுது வீசவேயில்லை காற்று.

Monday, August 29, 2011

நெருக்கமற்றப் பாடல்

எல்லாவற்றையும் மீறி
குறைவதேயில்லை எதிர்பார்ப்புக்கள்

சற்றுமுன் நிகழ்ந்திட்ட
கசப்பான உரையாடலொன்றின் முடிவில்
க‌ல்லிட்டப்பின் மீளும் குள‌த்தின் பாசியைப் போல‌
ந‌ம்மை சுற்றி சூழ்கிற‌தொரு மௌனம்
பெரும் மௌனம்

இறுக்கம் நிரம்பிய இவ்வேளையில்
இவ்வுல‌கின் யாரேனுமொருவர்
ஒரு ம‌ழ‌லையென‌ பாவித்து
த‌ன் மார்போடெனை அணைத்துக்கொண்டாலென்ன‌

விட்ட மழையென
த‌ய‌க்க‌ம் தளர்ந்திருந்தது மாலை
நீர் மிதக்கும் கண்களுடன்
கொஞ்சம் பேசவேண்டுமென்றேன்

நீர் தழும்பும் குவளையொன்றை வெறித்தப்பின்
அலட்சியமிக்க குரலொன்றில் நீ வெளியேறுகையில்
மிக எளிதாகவே அங்குமிங்கும் சுழ‌ன்ற‌ப‌டியிருந்த‌து
அறையின் ஒற்றை மீன்

யார் யாரோ அருகிலமர
எத்தனையோ இருக்கைகளிருந்தாலும்
ஏன் யாருமற்ற இருக்கையொன்றே என் கவனமீர்க்கின்றது

இந்த பயணமெங்கிலும்
குளிர்ந்த‌ காற்று

கடந்துபோகின்றன ப‌ட்டாம்பூச்சிக‌ள்

மண்டொலினின் இசை
அத்த‌னை இதமெனினும்
ஒரு நெருக்க‌முமற்று நேற்று பெய்த இரவின் பாடலொன்றை
வெறுமென கேட்டுக் கொண்டிருக்கிறேன்
மீண்டும் மீண்டும்.