Wednesday, July 30, 2008

நானும் ம‌ழையும்


இந்த மழைக் காலங்களில்
தூரத்தில் தெரிகின்ற‌து மழை

அருகில் வர‌லாம்
காற்றைப் பரப்பி காய்ந்தத் துணிகளை
பறக்கவிட்டு தயார்படுத்தலாம்
மண் வாசனையை அறைக்குள் நுழைக்கலாம்
கூரைகளிலிருந்து நிலத்தில் கொட்டலாம்
இலைகளில் வழிந்து சிதறலாம்
எல்லா திசைகளிலும் வீதியை நிரப்பலாம்
ஒரு குடைக்குள் அடையும்
இரு நண்பர்களின் தருணத்தை இனிதாக்கலாம்
காகித கப்பலுடன் காத்திருக்கும்
என் மகளின் கனவுகளை மகிழ்விக்கலாம்
எனை சிறிது நனைத்து
ஆறுதலளிக்கலாம்
உன் புதிய‌ செய்தியை சுமந்தவாறும்
வண்ணங்கள் தெளித்தவாறும்
வாசல் வரும் வண்ணத்துப்பூச்சியுடன் சேர்ந்து
என் மனமுடைக்கலாம்

ம்ம்... காத்திருக்கின்றேன்
மழைக்கும்
நீ அனுப்பாத‌ செய்திக்கும்

Tuesday, July 22, 2008

நீயும் அக‌ல‌ ம‌ஞ்ச‌ள் நிற‌ ம‌ல‌ர்க‌ளும்


பெரிய வட்டக் குவளை நிறைய நீரில்
மிதந்து கொண்டிருந்தன
அகல மஞ்சள் நிற‌ ம‌ல‌ர்க‌ள்

தேவைக‌ளேதுமின்றி
விர‌லால் நீரை அலம்பிக்கொண்டிருக்கையில்
தள்ளும் விசையின் திசையிலேயே
நகர்ந்த‌ன கேள்விகள் ஏதும் கேட்காமலே

எழும் சலசலப்புகள்
அறையின் அமைதியை உடைக்க
பின்னும் தொடரவில்லை என் செயலை.

உன் சிறு புன்ன‌கைக்காய் காத்திருக்கும்
என் குவிந்தப் பிரிய‌ங்களை
நீட்டும் ஒரு சாயங்கால வேளையில்
அலட்சியமாய் தட்டி விடுகின்றாய்
காரணங்களேதுமின்றி

உன் அர‌வ‌ணைப்புக‌ள்
போதுமானதாகயில்லாதப்
பின்னும் தொட‌ர்கின்றேன் என் மீத‌ பொழுதுக‌ளை

நீ நானாகும் பின்னிரவு நேரங்களில்
நான் அகல மஞ்சள் நிற‌ ம‌ல‌ர்களாகி
மிதக்கின்றேன் அதே குவளையில்.

Sunday, July 20, 2008

முடியாதவை

குறிஞ்சி மலரென திடீரென
உன் கரிசனம் த‌ளிர்த்து
நலம் வினவிய‌போது
சிறிது யோசனைக்குப் பின்
பதிலளிக்க விரும்பவில்லை

வெளியேற்றியும் போகாத ஒன்று
அறையில் அடைபட்டிருக்க‌
கத்தி கிழித்துப் பாயும் குருதியில்
வழியும் சில மெளனங்களை
வெறித்து நின்றேன்

உன் செயல்கள் கொஞ்சமும்
பிடிக்கவில்லையென
உதறி த‌ள்ளி போய்விடவோ
அல்லது முக‌த்தில் அறைந்தால் போல் பேசிட‌வோ
சற்றும் ம‌ன‌மில்லை

எனை போலவே
உருமாறிக்கொண்டேதானிருக்கின்ற‌து பொழுதுக‌ள்
ச‌ன்ன‌ல்வ‌ழி தெரியும் வெளிச்ச‌ங்க‌ளில்

கழுவிய முகத்தை
துணிக்கொண்டு உலர்த்திய போது
பார்த்தேன்

ஆயிர‌ம் முரண்களிருந்தும்
அழ‌காய்தானிருகிறது.
அடிவ‌யிற்றில் குழ‌ந்தையை அம‌ர்த்தி
நீ கொஞ்சி விளையாடும் இத்த‌ருண‌ம்.

Friday, July 4, 2008

.........................


மீறி வழிந்த ஒரு சொட்டு
கண்ணீரைத் துடைத்து பின்
சிதறி வெளிறிக் கிடந்த என் நெஞ்சை
சேர்த்து ஒட்டிக் கொண்டேன்.

ப‌ல‌ மைல் தாண்டி வரும்
அழைபேசி ம‌ழ‌லையின்
குறும் பேச்சிலும்
பெயர்தெரியாத‌ சிறுமி
என் விர‌ல் பிடித்து ந‌ட‌க்கையிலும்

ம‌ற‌ந்து கிட‌ப்பேன் உன் முத்த‌ங்க‌ளை.