Thursday, August 28, 2008

.........

வெட்கமொன்றுமில்லை
சிறு பதற்றமும்கூட.
பேருந்தில் மெதுவாக முத்தமிடுகின்றேன்
வைத்திருக்கச் சொல்லி கொடுக்கப்பட்ட
மழலையின் கன்னங்களில்.

***

உறங்கும் குழந்தையை முத்தமிடுதலை காட்டிலும்
இதமாக இருக்கின்றன
சலிக்காமல் உற்று நோக்கி பின்
மெலிதாக பூக்கும் உன் புன்னகைகள்.

***

Tuesday, August 26, 2008

நீல‌ நில‌வு நீல‌ ஒளியுட‌ன்


மழை நின்ற இம்மாலைக் காலங்களில்
என்னைவிட உயரம் வளர்ந்திருக்கும்
கோரைப் புற்கள் காற்றில் சல சலக்கின்றன

மழை நீரில் கரைந்த சம்பங்கி மலர்களின் வாசம்
அறையில் நுழைந்து பரவ
வண்ணங்கள் இறைந்து கிடக்கும்
நவீன ஓவியங்களை நோட்டமிடுகின்றேன்
உனக்கு புரியாத என் உணர்வுகளை ஒத்தவை

நேற்று இருந்ததை போலவே இன்றும்
சலனமற்று நீள்கின்றன‌ இப்பொழுதுகள்

கித்தாரை மெல்ல‌ எடுத்து
அதன் நீண்ட கம்பிகளை மீட்டுகின்றேன்
உயிர் நாளங்களில் ந‌ழுவி வழியும் இசை
வாஞ்சையுடன் அழைக்கின்றது என் இரவை

சுடர்விட்டு ஒளிரும்
அக‌ல்விள‌க்குக‌ளின் வெளிச்சத்தை அணைக்க
தேங்கிய உன் பிரியங்க‌ள் ம‌ட்டும்
போதுமான‌தாக‌ இல்லை என‌க்கு

முற்றத்து வாச‌லில் த‌னியே நிற்கின்றேன் நான்
வ‌ர‌க்கூடும் நீல‌ நில‌வு நீல‌ ஒளியுட‌ன்

Wednesday, August 20, 2008

மழையின் பாட‌ல்


மழைச் சாலைக‌ளில் ஒழுங்கின்றி க‌லைந்து ஒதுங்கும்
பல‌ வ‌ண்ணங்கள் தோய்த்த‌ ம‌னித‌ர்க‌ளை
அமைதிட‌ன் நோக்குகின்றேன்
தேனீர் கோப்பையுட‌ன்

நினைக்கும்போதெல்லாம் வருவதில்லை
இந்த மழையின் பாட‌ல்
சில நேரங்களில் கேட்க விருப்பமில்லையெனினும்
செவிக‌ளில் விழுந்துகொண்டுதானிருக்கின்ற‌து
குளிர்ந்தக் குரலுடன்
என் வெளிகளில் பரவும‌தை
காற்று நுரைகுமிழியாய் ஊதி உடைக்கின்றேன்
தெறித்துச் சிதறி மறைகின்றன அதன் மெல்லிய‌ வரிகள்
பின் இரத்தம் படிந்த வார்த்தைகளைத் திரட்டி
மீண்டும் பெருகுகின்றது எதிரே க‌டலை போல
மந்திரமாய் கைகளில் அள்ளி எடுத்து
தெளித்து உலர்த்துகின்றேன்
வராண்டாவில் அமர்ந்தவாறு

கடைசி இரு துளிகளில்
உன் இயலாமையை வரைய‌ முய‌ன்ற‌து
உனக்கு ஆச்சரியமளித்திருக்கலாம்

மழை நின்ற ஒரு பிந்தய‌ கணத்தில்
வீதியில் தேங்கிய மீத‌ வரிகளை மிதித்தும்
யாரிடமோ கூவிக்கொண்டும் ஓடுகின்றாய்
பாடல் என்னுடையதென

Thursday, August 7, 2008

சுய‌ம்பு


முற்றிலும் இருள் கரைத்துவிட்ட‌
இர‌வொன்றை சிறு வெளிச்ச‌ம்கொண்டு
க‌லைக்க‌ முயலும் ஒற்றை மின்மினிப்பூச்சியை
கையில் பிடிக்க
ஒளிருகின்றது என் உள்ளங்கை

சகிக்கவில்லையெனினும்
இன்றும் தொட‌ர்கின்ற‌து நிழல்

மூங்கிலாய் வளைந்து கொடுக்கவோ
உன் ப‌ய‌ன்பாடுக‌ளில் ஒத்துழைக்கவோ
எனக்கென ஒரு வரையறையை கட்டமைத்து
அதன் உட்புகுத்தவோ முயலும் உனை
ஒருபோதும் எதிர்ப்பதில்லை நான்

கூட‌ல் காலங்களில்
ஒவ்வொன்றாய் பார்த்து பின்னிய
என் நம்பிக்கையின் நூலிழைகள் அறுந்துவிழும்
உறக்கமற்ற ஒரு பின்னிசிப் பொழுதுகளில்
முகமூடியை கழற்றிவிடுகின்றன
என் சுயங்களின் யானை முகங்கள்

உன் குரல்வளையை இரு கையால் நெரித்த‌வாறு

Monday, August 4, 2008

.............அணைப்பில்லாத ஒரு
ஊதா இரவின் நடுவே
விழித்துக்கொள்கின்ற‌ன என் விழிகள்
அருகே உன் முகம் மட்டும் விரிந்திருக்க
பார்வைகளால் முத்தமிட்டவாறு நான்
இமைகள் மூடி சின்னதாய்
இதழ் விரித்தவாறு நீ

##

இத‌மாய் சரிந்து சாய்கையில்
ம‌லையுச்சியிலிருந்து ப‌ள்ள‌த்தாக்கில்
விழுந்து தொலைகின்றோம்
ந‌மை முத்த‌மிட‌ விரிய‌லாமொரு
தாமிர‌ பூக்க‌டல்

##


ஒரு சிறு புன்ன‌கையுடனேயே
ஆர‌ம்பிக்கின்றன பெரும்பாலான
உற‌வுக‌ளில் தூரப் ப‌ய‌ண‌ங்க‌ள்

##


இன்ப‌மானாலும் துன்ப‌மானாலும்
ந‌ன்றாக‌வே இருக்கின்றன
நீ பிண‌க்கும் த‌ருண‌ங்க‌ள்

Friday, August 1, 2008

பூக்களின் சிறுமி

இப்போது எங்கு எப்ப‌டி இருக்கிறாளென்று
தெரிய‌வில்லை

நன்கு உற‌ங்கியவாறு
விழித்திருக்கும் ஒரு காலையில்
மெதுவாக முகிலை வில‌‌க்குவாள்
தனியே ஓவிய‌ம் தீட்டிக் கொண்டிருக்கையில்
துணை வந்து வ‌ண்ண‌ங்க‌ளை தெரிவு செய்வாள்
எப்போதும் சிரித்த‌வாறு
வாய் ஓயாம‌ல் பேசிக்கொண்டிருப்பாள்
என்னை நிறைய‌ பிடிக்குமென‌
இரு கை விரித்துக் கூறுவாள்
நான் சோக‌மாய் கிடக்கும்‌ த‌ருணங்களில்
அருகே இரு பூக்களை விட்டுச் செல்வாள்
அயராமல் அங்காடிக்கு
என் விரல் பிடித்து நடக்கையில்
அருந்தியத் தேனீரில் சர்க்கரை குறைவென்பாள்
சமய‌ங்களில் வெளிபடும் அவளின்
தெத்துப்பல் புன்னகை அலாதியானது
கண்சிமிட்டும் நேரத்தில்
மின்னலைத் தோற்கடித்துவிடும் அவளை
யாருக்குதான் பிடிக்காது

வார்த்தைகளற்று நிறையும் நீயற்ற இக்காலங்களில்
பிரியாமல் பூனைக்குட்டியாய் என் கால் சுற்றியவளை
என‌க்கும் பிடிக்கும் தான்

தெரிய‌வில்லை
இப்போது எங்கே எப்ப‌டி இருக்கிறாளென்று.

- நன்றி உயிரோசை