Thursday, September 25, 2008

மழைக் குறிப்புக‌ள்


கேட்பார‌ற்று
எங்கோ கசியும் பாணனின் இசை
அலையாய் வ‌ருடிச் செல்கின்றது மனதை

நேற்று வ‌ந்த ப‌ட்டாம்பூச்சியை
எதிர்பார்த்திருக்கின்றேன்
குழ‌ந்தைக‌ளின் ந‌ம்பிக்கையோடு

இங்கு நிகழ்ப‌வை எல்லாம்
ஏதோ ஒரு தேவையை
மையப்படுத்தியே நிகழ்கின்றன
என்பதைப் புரிந்துகொள்வ‌த‌ற்குள்
என்னை விட்டு வெகுதூரத்தில் நீ

என் த‌னிமையின் பக்கங்களில்
இம்மழைப் பயணங்கள் எழுதுகின்ற
பாவனைகள் நன்றாகதான் இருக்கின்றன
உடலை குளிர்த்துச் சிலிர்ப்பூட்டி
ம‌ன‌தை சற்று இல‌குவாக்கி
ஒருவித வரையறையற்ற மென்மையாக ‌

சிறுவ‌ய‌தில் இருந்த‌தைவிட‌
ம‌ழை இன்று ந‌ல்ல சினேகித‌மாகியிருக்கின்ற‌து
உன்னையும்விட‌

உன் அலட்சியங்களால்
என்னுளேயே மெளன‌மான‌ உண‌ர்வுகளும்
இம்மழைப் போன்ற‌தே

இடையூறுக‌ளின்றி
தொட‌ர்ந்து பொழியும் மழையானது
என்றேனும் பெரும் வெள்ளமாய் உருவாகி
காண்ப‌வை அனைத்தையும் சிதைக்க‌க்கூடும்
எவ்விதப் பாகுபாடுகளுமின்றி

- நன்றி திண்ணை மற்றும் கீற்று

Tuesday, September 23, 2008

காட்டுப் பூக்கள்


மென்மையாய் தடவி ரசிப்பதற்கும்
வ‌ன்மையாய் பற்றிப் பறிப்பதற்கும்
எவருமில்லையெனினும்
பூத்து உதிரத்தான் செய்கின்றன
காட்டுப் பூக்கள்

##

நீ இப்படி இருக்கலாமென நானும்
நான் இப்படி இருக்கவேண்டாமென நீயும்
நினைப்பதில் தவறொன்றுமில்லை
எதிர்பார்ப்பதுதான்
மனித இயல்பு என்றானப்பின்

##

வேகமாக நடப்பதாக எண்ணி
மெதுவாக நடக்கும் எருமையை எள்ளுகின்றேன்
கர்வத்தில் மிதக்கும் எனக்கு
ஒருபோதும் தெரியபோவதில்லை
அதன் வேகம் அவ்வளவுதானென‌

Thursday, September 18, 2008

நான் தனிமை


இங்கு யவருமில்லை
என் யவ்வனத்தின் புனைவுகளைப் பேச
புரளி பாடித் திரிய
உறவுகளனைத்தையும் மறந்துவிட்டு
இருக்கின்றேன் இந்த பச்சை காட்டுக்குள்
அமைதியாய் ஆரவாரமற்று
மிக இயல்பாய்
இன்று நான்
தனித்தப் பறவை
கடைசி இலையும் உதிர்ந்துவிட்ட மரம்
எஞ்சிய மழைத்துளி
வ‌ற‌ண்ட ஏரியின் உடைந்த‌ப் பிள‌வு
மெளனத்தின் பிரதிபலிப்பு
கொஞ்சம் இயற்கை
ஓர் புதிய‌ வ‌ண்ண‌ம்
ஓர் அசையும் உயிரினம்
எப்போதும் கேட்டிராத‌ இசை
எரியும் ஒற்றைச் சூரிய‌ன்
நான் தனிமை

Tuesday, September 16, 2008

.............


ச‌மாதான‌மில்லாம‌ல்
ப‌சித்துக் கொண்டிருக்கின்ற‌து வ‌யிறு
எங்கோ நிற‌மில்லாக் காட்டுக்குள்
ம‌ர‌மொன்று உதிர்த்திருக்க‌க்கூடும்
ப‌ழுத்தக் க‌னியொன்றை

#

ஆட்சேபனைகள் இல்லாத ஒருநாளில்
சூரிய‌னை கைநீட்டிப் ப‌ரித்து
விழுங்கிவிட‌ப் போகின்றேன்
இனி நீங்க‌ள் பொழுதுகளைப் பிரித்து
காலம் ந‌க‌ர்த்துவ‌து க‌டின‌மே!

#

காற்று பலமாய் அடிக்கையில்
என் உடல் வந்து ஒட்டிகொண்ட
காய்ந்த இலையை
உதரிச் செல்ல‌ மனமில்லை
எடுத்துச் செல்கின்றேன் என்னுடன்

Wednesday, September 3, 2008

.............


ஒரு நீண்ட‌ துக்க‌ இர‌விற்குப் பிற‌கு
சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்த விழைகின்றது
சாம்பல் நிற முகில்கள் போர்த்தியவாறு
உறங்கும் குழ‌ந்தையை போல
அமைதியான அழகான
இம்மழைக்காலைப் பொழுது

தூரலாய் விழுந்து ஓடையாய் வளைந்து
அருவியாய் வீழ்ந்து நதியாய் நகர்ந்து
கடலெனத் திரள முயலும் மழைத்துளிகள் சில
என் முன் உடைந்துத் தெறிக்கின்றன

கொஞ்ச‌ம் த‌ய‌க்க‌த்தோடு
க‌ண்ணாடியில் பார்கின்றேன்
நேற்றையப் புல‌ம்ப‌ல்க‌ள் அனைத்தும் ம‌றைந்திருந்தும்
அறையெங்கும் சிதறிக்கிடக்கின்றது என் காதல்
எழுதி அனுப்பாத மடல் குவியலாய்

கையசைவுகளுடன் மென்மையாய் கதைக் கூறும்
ஜெனாவிட‌ம் போலிப் புன்னகைகளை
பகிர்ந்துகொள்கின்றேன்
சுழன்றுகொண்டேயிருக்கும் மின்விசிறிக்கு
ஓய்வளித்து என் இறுக்கங்களைத்
த‌ளர்த்திக் கொள்கின்றேன்

இக்காலங்களில்
எல்லாவ‌ற்றையும் ஏற்க‌ க‌ற்றுகொண்ட‌தாய்
என்னையே சமாளித்தாலும்

ப‌த்து கேட்டு
ஒன்றும் கிடைக்க‌வில்லை எனும்போது
ஏமாற்ற‌மில்லையென‌
சொல்வ‌த‌ற்கில்லை