Friday, October 17, 2008

மழைக் குறிப்புக‌ள் - 2


ம‌ர‌ங்க‌ள் சூழ்ந்த‌
வ‌ன‌ம் இன்று செழித்துக் கிட‌க்கின்ற‌து
வழக்கத்தைக் காட்டிலும் அதிகப் ப‌சுமையாய்
அருவியின் குளிர்ந்த‌ நீர்துளிகள் கரும் பாறைகளிலிலும்
என் முகத்திலும் விழுந்து உடைகின்ற‌ன
எதையோ முணுமுணுத்த‌வாறு
மலையுச்சியிலிருந்து வ‌ழியும் ஓடை
சில்லென்று பாடிச் செல்கின்ற‌து
பிரிவின் இர‌க‌சியப் பாட‌லொன்றை
இலைக‌ள் சேக‌ரித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌
எண்ணில‌ட‌ங்கா மழைத்துளிக‌ளை
மிகவும் அமைதியாக‌
பொழிந்த‌து போதுமெனக் க‌லைந்தோட‌ முய‌லும்
கார்மேகங்களை இழுத்து உலுக்குகின்றேன்
கொட்டிவிட்டு போகின்ற‌ன
மீத‌மிருந்த நம் பிரிய‌ங்க‌ளை

நானும்
இவ்வ‌ன‌மும் இன்று செழித்திருக்கின்றோம்
இம்ம‌ழையால்

சாலைகளில்
சேறும் சகதியுடனும்
அழுகிய காய்கறிகளின் விரும்பத்தகாத‌ வாசனையுடனும்
போக்குவ‌ர‌த்து நெரிச்சலில் பொறுமையிழ‌ந்தவாறும்
கையில் கறுப்புக் குடையை பிடித்தபடியும்
பெரும் இடையூறாய்த் தொட‌ர‌க்கூடும்
ந‌க‌ரத்துவாசிக‌ள்

இதே மழைகால‌ப்பொழுதை

-நன்றி கீற்று

Tuesday, October 14, 2008

ஒரு மாலை


முதன் முறை கடலைப் பார்த்தபோது
ஏற்பட்ட பூரிப்பும் உற்சாகமும் இன்று இல்லை
வ‌ழ‌க்க‌ம்போல‌ கரைத் த‌ழுவி விலகு‌ம் அலைக‌ள்
அவைகளில் ஓடி கால் ந‌னைத்துக் குதுக‌லிக்கும் சிறார்க‌ள்
க‌வ‌லைகளற்று மேலே பறக்கும் ப‌ட்ட‌ங்க‌ள்
என எதையும் பொருட்ப‌டுத்தாம‌ல்
மண‌லில் அமர்ந்தவாறு
பார்த்திருக்கின்றேன் இம்மாலைப் பொழுதை

எல்லாவ‌ற்றையும்விட
என்னுடன் தின‌மும் இருக்கின்ற‌து இப்பொழுது
சீராய் வண்ணங்களை நிலைகுலையச் செய்து அனைத்தையும் ப‌ற்றுகின்றது
நீராய் காற்றாய் படர்கின்ற‌து என் வெளியெங்கும்

இப்பொழுதில்தான்
நினைவுக‌ள் அசைபோடுகின்ற‌ன‌
க‌ட‌ந்த‌வைகளைப் ப‌ற்றி
அறுந்துவிழும் நிலையிலிருக்கும்
ந‌ம் உற‌வின் மிச்ச‌ங்க‌ளை ப‌ற்றி

ச‌ம‌ய‌ங்க‌ளில்
சிறிதும் ஒத்துப்போகச் செய்வ‌தில்லை
யாதொன்றும்

தொடர்ந்து
ம‌ண‌ல் துக‌ளாய் உதிரும் எனது மௌன‌ங்க‌ள்
மேலும் க‌டின‌மாக்குகின்ற‌ன இப்பொழுதை

கால் ந‌னைக்க‌ எவ‌ருமில்லாதப் போதும்
அலைகள் அடித்துக்கொண்டேதானிருக்கின்றன

- நன்றி திண்ணை மற்றும் கீற்று

Sunday, October 12, 2008

................


இதுவரை என்னைத் த‌விர
எவருமறியாரென நினைத்திருந்த எனக்கு
சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது
இக்க‌ண‌ம் படபடத்துப் ப‌ற‌க்கும்
வெளிர்நீலநிறப் ப‌றவையொன்று
மிக‌ அழ‌காகப் பாடிச் செல்கின்ற‌து
என் காதலை அதன் மொழியில்.

##

இப்பொழுதெல்லாம்
சிரித்து மகிழும் நிமிடங்களிலேயே
சிறுகத் துளிர்த்துவிடுகின்றன
எதிர்வரும் கவலைகளின் பச்சை இளம் நுனிகள்
எவரும் காணாதபடி

##

சம‌யங்களில்
மௌனமே போதுமானதாக இருக்கின்றது
எல்லாவற்றிர்க்கும் பதிலாக

Friday, October 3, 2008

உடைவதில்லை வெறுமைகள்


இம்மழை நாட்களில்
உன்னிடம் பேசுவதற்கென்று
ஏதுமிருப்பதில்லை

எங்கு சென்றாலும்
பின்தொடர்கின்றன
ஈடுசெய்ய‌ முடியாத சில இழப்புகள்
எதையோ நினைவுறுத்தியவாறு

அவற்றை தவிர்த்து
இயல்பாக இருக்க முனைகின்றேன்

பழைய‌ நினைவுகளில் புதைந்து
மெதுவாய் ந‌ட‌க்கையில்
முற்ற‌த்துத் தூணில்
சுயமற்றுச் சாய்ந்துக் கிடக்கையில்
அசைவ‌ற்றக் குள‌த்தில்
த‌னியேக் க‌ல்லெறிகையில்
நின்று போன‌ ம‌ழையை வெறிக்கையில்
ம‌ங்கிய‌ மாலையில்
மொட்டை மாடியில் தேனிர் அருந்துகையில்
என‌ எக்கணத்திலும்
வெறுமையை நிறைக்கக்கூடும் இக்கால‌ம்

எனினும் அடுத்து நடப்பவைகளுக்கு
எவர்க்கும் நிட்சயங்களில்லையென
நீட்டுகின்றேன் இப்பொழுதை.

இங்கு
இல்லாமலிருப்பதில்
எவ்விதப் பிரச்சனைகளுமிருப்பதில்லை
இருந்து பின் இல்லாமல் போவதைவிட

- நன்றி திண்ணை மற்றும் கீற்று