Saturday, November 29, 2008

வனத்தின் தனிமரம்


அட‌ர்ந்து பொழிகின்ற‌து
சில‌ தின‌ங்க‌ளாய்
பருவம் தப்பிய இம்மழை

வ‌லுவான‌ காற்றுட‌ன்
வ‌ரும் அத‌ன் நோக்க‌ம் அறிய‌யிய‌லாத‌து
வரவேற்க விரும்பாதது

ம‌ழையாலும் காற்றாலும்
பிடிப்பினை ஏதுமற்ற என் கிளைக‌ள்
ஒடிந்துவிழாமல் இருக்க
தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றேன்

இலைகளற்று
நிர்வாணமாக்கபட்ட பிறகு
கவலை கொள்ள ஒன்றுமில்லைதான் எனினும்
மனதை கணக்கச்செய்கின்றன
தொடர் போராட்டத்திற்கிடையே
கரைந்து வழியும்‌ மழையுடனான
எனது பழைய நெருக்கங்க‌ள்

ஏனிந்த மாற்றமென வியப்பளிக்கையில்
மேலும் அதி தீவிர‌மாகி
எனை முற்றும் சாய்க்க‌ முய‌ல்கின்ற‌து
அத‌ன் கோர‌ முகங்காட்டி

என் சுய‌ங்க‌ள் வ‌ழியே
எனது கிளைகளை விரிய‌ச் செய்கின்றேன் இவ்வெளியெங்கும்
வேர்களை பரவச் செய்கின்றேன் மிக‌ ஆழமாக

இப்பொழுது
சமாளிக்கக் கற்றுகொண்டிருக்கின்றேன்
இம்ம‌ழையை

அரவணைப்பதாயினும்
அடித்து வீழ்த்துவதாயினும்


- நன்றி உயிர்மை

Saturday, November 22, 2008

நிலை


தொடர்ந்து பேசுவதற்கு
ஒன்றுமில்லையெனினும்
உனது மௌனம் தருகின்றது
தாங்க முடியாத வலிகளை

நீளும் நிசப்தமுடைத்து
இயல்பாகக் கேட்கின்றாய்
இந்நாட்களில் ஏன் எப்பொழுதும்
அமைதியாகவே இருக்கின்றாயென

உன்னிடம் பதிலென்று சொல்ல
ஏதுமிருப்பதில்லை

நிலையில்லாத‌ க‌ண்ணாடியில்
பிம்ப‌ங்க‌ள் ச‌ரியாக‌ விழுவ‌தில்லைதான்

சருகெனத் தூக்கி தூர வீசினாலும்
உன் கதவுகளைச் சட்டென்று மூடிவிட்டாலும்
திரும்ப உன் கால்சுற்றியே வருவேனென்றும்
உன்னைவிட்டால் எனக்கு உறவென்று
வேறு எவருமில்லை யெனவும்
உனது நம்பிக்கைகள்
இவ்வளவு வலிதாக உருவாகியிருப்ப‌து
எனது பிரியங்களால் மட்டுமே

எனக்கு தெரியும்
அதை பெற்றுக்கொள்ளத் தயங்கினாலும்
ஒருபோதும் வெறுக்கமாட்டாயென


ஆயினும்
என‌த‌னுமான‌ங்க‌ள் தேய்ந்து
காணாமல் போகுமொரு தின‌த்தில்
என் கூட்டை உடைத்து
எங்கோ ப‌ற‌ந்துவிடப் போகிறேன்

Sunday, November 16, 2008

நிலையின்மை


வெண்மேக‌ங்க‌ள்
பிறை த‌ழுவி ந‌க‌ரும் இவ்வேளையில்
தொலைதூர‌த்தில் கொஞ்சம் பரிவுக‌ளுடன் ‌
க‌சியத் துவ‌‌ங்குகின்றது
இந்த இரவுக்கான பாட‌ல்
இன்னும் ஈர‌ம் காயாத‌ தார்சாலைக‌ளில்
மனமற்று உதிர்ந்து கிடக்கின்றன
சில புன்னகைப் பூக்கள்
காற்றை மறுத்து அணையும்
மெழுகுவர்த்தி சுடர் உருவாக்குகின்றது
அதன் சோகமானப் புகை உருவங்களை

தெரியவில்லை
இந்நேரத்தில் எனை நினைவுக்கூற
உனக்கு ஏதேனும் காரணமிருக்குமாவென

சில‌ மழை நாட்க‌ளும்
சில‌ ம‌கிழ்ச்சி கிழ‌மைக‌ளும்
என்னில் ஏற்ப‌டுத்திய‌ தாக்க‌ங்க‌ளை
ஏதொன்றாலும் ச‌ம‌ன்ப‌டுத்த‌ இய‌ல‌வில்லை

இருந்தும்
கடந்துகொண்டேதான் இருக்கின்றது காலம்
நினைவுக‌ளை ம‌ற‌க்க‌ச்செய்த‌ப‌டி

இவ்விரவு பகலாகும் பொழுதொன்றில்
நிறம் மாற்றித்தானேகொள்ளும் வானம்.

Sunday, November 9, 2008

ஏதுமற்ற வானம்


இந்நாட்களில்
எப்பொழுதும் எதையாவது
எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்
வாகனங்களற்று நீளும்
சாலையின் தனிமையுட‌ன்

கசப்பான நினைவுகள்
நிறைந்ததாக இருக்கின்றது இவ்வாழ்க்கை

அவைக‌ளை
ஒவ்வொறுமுறை கிள‌ரும்போதும்
மீண்டுமொறுமுறை என்னில்
வ‌லிக‌ளை ஏற்ப‌டுத்த‌ த‌வ‌றுவ‌தில்லை
காகிதமாக்கி க‌ச‌க்கி எறிய‌வோ
முற்றிலும் அழித்துவிட‌வோ முய‌லும்
என் முயற்சிக‌ள் அனைத்தும்
தோல்வியையே த‌ழுவுகின்ற‌ன‌

ஒருபோதும்
உன் வெளிச்ச‌ங்க‌ளால்
நெருங்க‌ முடியாத‌ என் இரவுகளோடு

இன்றும் கூட‌ நிக‌ழ‌லாம்
ஏதேனுமொரு க‌ச‌ப்பான‌ நிக‌ழ்வு
என்னாலும் த‌டுத்துநிறுத்த‌ இய‌லாத‌ப‌டி

-நன்றி திண்ணை