Wednesday, December 30, 2009

நீரான‌து

கைகளில் அள்ளித் தெளிக்கையில்
உடைந்து சிதறுவனவாய்
மென்சாரல் மழையில் தூர்வனவாய்
அல‌ம்பிய கையை உயர்த்தி பிடிக்கும்
சிறுமியின் விரல் நழுவி சொட்டுவனவாய்
மழைக் கண்ணாடிகளில் வழிவனவாய்
வெளிச்சத்தை பிரதிபலிக்கையில் ஒளிர்வனவாய்
தேங்குவனவாய் ஓடுவனவாய்
அடை மழையென‌ பொழிவ‌ன‌வாய்
எந்நிற‌மாயினும் அந்நிற‌மாய்
இடத்திற்கு தகுந்தாற்போல்
மாற்ற‌ங்கொள்கின்ற‌து இந்த நீரான‌து.

வெகுநேரம்
மூடியக் கதவொன்றைப் பார்த்திருந்து
மெல்ல திரும்பும் என்னைப்போல‌ல்ல.
- நன்றி உயிரோசை

Friday, December 18, 2009

பயணக் குறிப்புகள் - வாழச்சால்


தெளிந்த ஓடையில் உதிர்ந்து விழுந்த
மஞ்சள் நிற இலைகளிரண்டு
மீன்களாகி மறைகின்றன.
புல் நிறைந்த ப‌சும் நதிக்க‌ரையினிலே
சிதறிக்கிட‌கின்ற‌ன‌ கொஞ்ச‌ம் கூழாங்க‌ற்கள்.
வ‌ளைந்த‌ சாலைகளின் ஓரம்
வில‌கி நிற்கும் உய‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ளின் மேல்
மோக‌ம் கொள்கின்ற‌ன‌ ப‌னிமேகக்கூட்ட‌‌ங்கள்.
எதையுமே பொருட்படுத்தாமல்
வண்ணப்பூக்களைக் கூடையில் நிறைத்து
சாலையைக் கடக்கிறாள் புன்னகையின் சிறுமியொருவ‌ள்.
நீண்டு பரவி கிடக்குமந்த சோழையாற்று ஏரியை
அடர்மழைத்துளிகள் சத்தமிட்டுத் துளையிட
சலசலத்து நிற்காம‌ல் ஓடிக்கொண்டேயிருக்கிற‌து
சாலக்குடி ஆறு.
வால்பாறையை நோக்கி விரையும்
வாகன சக்கரங்கள் அனைத்திலும் சிக்கித் தெறிக்கும்
குளிர்ந்த‌ நீர்த்துளிகளிலேதுமில்லை
வ‌ன்மையின் முகமெதுவும்.

மனிதர்கள் நடமாட்டம் அதிகமில்லாமல்
செழித்த அடர்வனங்களுடன்
இயற்கை இங்கு
இயற்கையாகவே இருகின்றது.

தழுவும் ஈரக்காற்றில் உடல் குளிருகையில்
ரோபெர்டா ஃப்ளாகின் வசீகர குரலில்
எங்கோ ஒலிக்கும் அப்பாடல்
உணர்வுகளை மெல்ல‌ வருடி
ஏதோ ஒருவகை இதமெனப் பரவ
ச‌ட்டென‌ ஒரு ப‌ற‌வையாகி உயரே ப‌ற‌ந்து
சிலிர்த்துச் சித‌றுகிறேன்
இப்பிர‌ப‌ஞ்ச‌மெங்கும்.

- ந‌ன்றி அக‌நாழிகை

Monday, December 14, 2009

அவ‌ர்க‌ளுக்கு தெரியாது

கண்ட‌வுடனே புறக்குறைகளைச் சுட்டும்
அற்பமனிதர்களைக் கடந்துப்போகையில்
ஒரு சலனமும் இருப்பதில்லை

அவ‌ர்க‌ளால் என‌க்கு எவ்விதப் பயனுமில்லை
அவ‌ர்க‌ளுக்காக‌ ஒரு புன்ன‌கையைச்
செல‌விடுவ‌தில் கூட‌ என‌க்கு விருப்பமேதுமில்லை

அவ‌ர்க‌ளிட‌ம் பேசுவ‌தைவிட‌
சும்மாவே இருக்க‌லாம் என்ப‌துபோன்றதான
என் ம‌ன‌நிலையை மாற்றியமைத்த‌து
அவ‌ர்க‌ளின் வ‌ஞ்ச‌க‌மானப் பேச்சுக்கள்தானே

அவ‌ர்க‌ளுக்கென்னத் தெரியும்
எஸ‌ன்சிய‌ல் ட்ரெம‌ர் வியாதியைப் ப‌ற்றியோ
சின்ன‌ஞ்சிறு வ‌ய‌தில்
உட‌லெங்கும் சூடிட‌ப்ப‌ட்ட‌தையோ
யாருமில்லாத தனியறையில் அழுதிருக்கையில்
ஒரு பிரிய‌மான‌ தொடுத‌லுகாக‌ ஏங்கிய‌தையோ

என்னத் தெரியும் அவ‌ர்க‌ளுக்கு

அவ‌ர்க‌ளால் என‌க்கு எவ்விதப் ப‌ய‌ன‌முமில்லை
அவ‌ர்க‌ளுக்காக‌ ஒரு புன்ன‌கையை
செல‌விடுவ‌தில் கூட‌ என‌க்கு விருப்பமேதுமில்லை.

Saturday, December 5, 2009

மீளாதவை

சிறு வயது மழைக்காலங்களில்
மிக இனிமையான அந்த ஓசைக்காக காத்திருப்பேன்
முற்றத்து சன்னலருகே.

எனது எதிர்பார்ப்புகளினூடே
சன்னமாய்த் தூரி
இலைகளில் ஒட்டாது நழுவி
என் வீட்டுக் கூரைகளில் வழிந்து
வீதிகளில் ஓடுமதன் ஓசையை
இனமறியா புன்னகையொன்றுடன்
பார்த்திருப்பேன் அக்காவுடன்.

மழை விட்ட நேரத்தில்
சாலைப் பள்ளங்களில் தேங்கிய
மீத மழையில் உற்சாகமாய் குதித்து களித்திருப்பேன்
நண்பர்களுடன்

குடை பிடித்து பள்ளிச் செல்கையில்
குமிழிகளுகிடையே காகித கப்பல் விடுகையில்
திட்டியபடி அம்மா தலை துவட்டுகையில்
விரல்நீட்டி வானவில் பார்க்கையில்
பாசி படர்ந்த சுவரருகே நடக்கையில்
வெள்ளை நட்சத்திரங்களாய் கம்பியில்
தொங்கும் மழைத்துளிகளைத் தொடுகையில்
ஒரு ஈரம்
ஒரு சிலிர்ப்புடனே
நகரும் அந்நாட்கள்

எங்கு போயின அந்நாட்களெல்லாம்?

உள்ளுக்குள் அழுதிருக்கையிலும்
துளி புன்னகையொன்றை இதழோரம் ஒட்டிக்கொள்ளச்செய்யும்
இக்காலங்களிலும் வருகின்றன மழைக்காலங்கள்.
பால்யத்திலிருந்தே என்னுள் முழுவதும் நிறைந்திருந்த
அதன் வசீகரத்தில் மிச்சங்களேதுமில்லாமல்.

- ந‌ன்றி உயிரோசை

Thursday, November 26, 2009

...............வெளியூர் சென்று திரும்பிய அப்பா
தனக்கு என்ன வாங்கி வந்திருக்கிறாரென
ஆவலுடன் அவர் பையை திறந்துபார்க்கும்
சிறார்களைப் போல
எதிர்பார்த்திருக்கிறேன்.

எனது எதிர்பார்ப்புகள் மிக எளியவை.
தேவையானவையும்கூட.

மழை நின்ற சாலைகளில்
வாகன‌ப் புகையென‌ மேலெழும்பும‌வற்றை
ந‌கரும் நதியொன்றில்
மஞ்சணத்திப்பூக்களாக்கி மெல்ல‌ விடுகின்றேன்.

த‌னிமை தளும்பும் பின்னிரவு பொழுதுகளில்
திரும்ப என்னிடமே வ‌ந்துவிடுகின்றன
வாடி கசங்கியப் பூக்களாய்
காலி ம‌துக்கோப்பைக‌ளாய்
அல்லது சிதறிய க‌ண்ணாடித் துண்டுக‌ளாய்.

மனம் ஒடுங்கி மீளும்
உறக்கமற்ற‌ இக்க‌ண‌ங்களில்
ஏதோ ஏமாற்றமொன்று என்மீதேறி இழைய
வேறேதும் செய்வதற்கில்லை.

அமைதி கொள்கிறேன்.

ந‌ம்பிக்கையான‌ப் புன்னகையொன்றில்
முகிழ்ந்திருக்கும் அர்த்தங்கள் சிதைந்து போக
இயல்பாய் நீளுமிவ்விரவு
வேண்டுமானால் உங்களுடைய‌தாக‌ இருக்க‌லாம்
என்னுடைய‌தல்ல‌.

- நன்றி உயிரோசை

Tuesday, November 24, 2009

...............

பள்ளி ஆண்டு விழாவில்
"அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்"
பாடல் இனிதே துவ‌ங்கியது

 
விழாக்கூட்ட‌த்திலிருந்த
பெரும்பாலோனோர் முன்வ‌ரிசை
சிறுமிகளின் ஆட்ட‌த்தை ர‌சித்துக்கிட‌க்கையில்
நான் ம‌ட்டும் க‌டைசி வ‌ரிசையில்
ஆடிக்கொண்டிருந்த அவளின் அசைவுகளை
இமைகொட்டாது வெறித்திருந்தேன்

பாட‌ல் முடிந்த‌தும் நெருங்கிய‌வ‌ள்
முன்னெப்போதும் பார்த்திராத‌ ஒரு புன்ன‌கையுட‌ன் 
மூச்சு வாங்கியபடிக் கேட்டாள்
எப்படி இருந்ததென‌

ந‌ன்றாக‌ இருந்த‌தென‌
ப‌திலுக்குப் புன்ன‌கைத்தேன்

பின்ன‌ர் இருவ‌ரும்
புத்தகப்பையைச் சுமந்துகொண்டு
அப்பொன்னிற‌ ஒளியில் வீடு திரும்பினோம்.

Monday, November 23, 2009

.......

மிகத் தேவையான ஒரு சமயத்தில்
தருவதாய்ச் சொன்னாய்.
கிடைக்குமா கிடைக்காதோவென்ப‌தில்
நிச்ச‌ய‌ங்களேதுமில்லையெனினும்
இப்போதைக்கு
உனதிந்த‌ வார்த்தைக‌ளே போதுமான‌தாக இருக்கின்ற‌து

- நன்றி கல்கி வார இதழ்

Monday, November 16, 2009

.....................

புல்வெளியில் மாடு மேய்த்திருக்கும்போதுதான்
முதலில் கண்டேன் கிராமப் புறச்சாலையொன்றில்
நகர்ந்த ஒற்றை வெண்ணிற காரை
அப்பொழுது வெறுமென
வேடிக்கை மட்டும் பார்த்திருந்தேன்.
மற்றொருமுறை அது நிகழ்கையில்
துரத்தி ஓடித் தொட முடியாமல்
மூச்சிரைக்க நின்றேன்.
செங்களில் கார் செய்து மணலில் ஓட்டுவது
கைகளை ஸ்டேரிங்காகவும்
கால்களைச் சக்கரங்களாகவும் பாவனை செய்து
தெருக்களில் ஒலி எழுப்பி ஓடுவது
திருவிழாவில் அம்மாவிடம் அடம்பிடித்து வாங்கிய
நீலநிற‌ பிளாஸ்டிக் காரென
பின்னாட்களில் கார்கள் மீதான மோகம்
அதிகமாகியே இருந்தது.
பெரிய‌வ‌னாகிய‌தும் என்ன‌வாக‌ வ‌ருவாய‌ன‌
கேட்ட கேள்விக்கு நா கார் ஓட்ட‌ போறேனென
சொல்லித் திரிந்த‌தை
இப்போதும் அப்பாவிட‌ம் சொல்லிச் சிரித்திருப்பாள் அம்மா.
நகரத்திற்கு பெற்றோருடன் திரைப்படத்திற்கு செல்கையில்
வண்ண வண்ணமாய் நகரும்
பல கார்களை வெகுளியாய்ப் பராக்கு பார்த்து
தொலைந்து திரும்பிய கதைக்கூட உண்டு.
முதல் முறை ராதா வீட்டு காரில்
பயணம் செய்கையில் அடைந்த பூரிப்பும்
சன்னல் வழி தலை எட்டி வேடிக்கைப் பார்க்கையில்
புன்னகைத்து மகிழ்ந்த நிமிடங்களும்
இன்னமும் மீதமிருக்கின்றன.
இப்பொழுது கார்களென்றால்
நினைவிற்கு வருவது ஆடம்பரமோ
அல்லது செல்வந்தர்களுக்கு மட்டுமேயானதெனவோ
அவ்வளவே
இம்மாலையில்
கைகளை ஸ்டேரிங்காகவும்
கால்களை சக்கரங்களாகவும் பாவனை செய்து
தெருக்களில் ஒலி எழுப்பி ஓடுமொரு
சிறுவனைப் பார்க்கையில் நினைத்துக்கொள்கிறேன்
கார்கள் மீதான மோகம் தொலைந்துபோக
அவனுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகலாமென‌

Tuesday, November 3, 2009

..........

ஆயிரமுறை உடலடித்தும்
சிறிதும் சிலிர்க்கச் செய்யவேயில்லை
மொட்டை மாடி தரையில்
முகங்கொடுத்து அழுதிருக்கையில்
ஓயாது பெய்து தீர்ந்த நேற்றிரவு மழை.

- நன்றி உயிரோசை

Thursday, October 8, 2009

ஒரு பொழுது - 2

எந்தவொரு எதிர்பார்ப்புமற்று
நானிருந்த ஒரு மழைவேளையில்
முன்னொரு தினம்
நான் ப‌ரிச‌ளித்திருந்த‌ உடைய‌னிந்து
நீயாக‌ என் வாச‌ல் வருவதென்பது
தற்செயலாய் நிகழ்கிறது

வேண்டிய‌தென்ன‌வொ
ஒரு பார்வையோ
ஒரு புன்ன‌கையோ
ஒரு க‌வ‌னமோ
ஒரு இனிய‌ சொல்லோ
அல்ல‌து போலியாக‌வேனும் கொஞ்ச‌ம் பிரிய‌ங்கள் ம‌ட்டுமே.
ஆயினும் பார்வையை உன் மீதிருந்து விலக்கி
சில நொடிகள் மௌன‌ம் கொள்கிறேன்

சற்று யோசித்து
வெறுமெனத் திருப்பிய‌‌னுப்ப‌ ம‌ன‌மின்றி
வாவென உள் அழைக்குமுன்னே
நீயாக‌ உள் நுழைகிறாய்
இம்ம‌ழைக்கால‌த்தினும் இத‌மான‌ பார்வைக‌ளுட‌ன்
பேசுகின்றாய்
புன்ன‌கைகின்றாய்
புருவம் உயர்த்துகின்றாய்
ஏனோ திரும்ப‌வும் மௌனம் மட்டுமே ப‌ட‌ர்கின்றதென்னில்

ந‌ம் ந‌ட்பு தொட‌ர‌ வேண்டியும்
நான் ம‌கிழ்வோடிருக்க‌ வேண்டியும்
செந்தாம‌ரைக‌ளும் அக‌ல் விள‌க்கொளியும் நிறைந்த‌
வெங்க‌ல‌த்த‌ட்டில் பிரியங்களைத்தூவி
ப‌ரிவுட‌ன் நீட்டுகின்றாய்

விழியோரம்
காரண‌மற்று திரள்கிறது கண்ணீர்

ச‌ல‌ன‌மேயின்றி
விடைகொடுத்துச் செல்லும் உற‌வுகளுக்கிடையில்
உன‌திந்த‌ அன்பு ஒருவிதச் சிலிர்ப்பை ஏற்ப‌டுத்தினாலும்
நானிதை பெற்றுக்கொள்ள‌
இப்பொழுது த‌யாராக‌ இல்லை.

Sunday, September 27, 2009

.............
பயண அவசரத்தில்
இழுத்துச் செல்லப்படும் பொழுதும்
பிடிக்காத உணவை
உதட்டில் திணிக்கும்போதும்
சிறு தவறுக்கு
வைய்யப்படும் போதும்
வேடிக்கைப் பார்க்க
சன்னலோரம்
இடம் கிடைக்காதபோதும்
ஆசையாய் கேட்ட ஒன்று
கைசேராத‌ போதும்
சினங்கொள்வதில்லை மழலைகள்.
அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்
அமைதியாக இருக்கவோ
அழகாய்ச் சிரிக்கவோ
மீறினால் அழவோ மட்டுமே.

Saturday, September 26, 2009

இருப்பு

பழகிய நிர்வாணங்களுகிடையே
மெல்லத் தொலையும் சுவாரசியங்களைப் போன்றதானது
சமயங்களில் இந்த இருப்பு.

அறிமுகங்களில் கிடைக்கும்
முதல் புன்னகையைப் போன்று இருப்பதில்லை
பின்வரும் மற்றப் புன்னகைகள் யாவும்.

நானும் முயன்றுதான் பார்க்கிறேன்
தெளிந்த நீரைக் கொத்திச்செல்லும்
தாகம் மிகுந்த பறவைகளைப் போலவோ
எவ்வித வருத்தங்களின்றி
தன்னில் ஒட்டியிருந்த இலைகளை உதிர்க்கும்
மரங்களைப் போலவோ
இயல்பாக இருப்பதற்கு
ஆனால் ஒவ்வொரு முறையும்
ஓடிச்சென்று பார்ப்பதற்கு முன்னரே
காணாமல் போய்விடுகின்றன
இந்த வானவில்கள்.

நிட்சயங்களேதுமின்றி
நீளும் இந்நாட்களில்
வருவதையெல்லாம் எப்படி அப்படியே ஏற்றுக்கொள்ள?

துயர்மிக்கச் சமாதானங்களில் உடன்பாடில்லை என‌க்கு.

இல்லாத‌ ஒன்றை
இருப்ப‌தாக‌ நினைத்துக்கொள்வ‌தில் மட்டும்
என்ன‌ இருக்கின்ற‌து?

Thursday, September 24, 2009

...........

இந்நாட்களில்
புலாலுண்ணப் பழகிக்கொண்டாலும்
ஏதோ காரணத்தால்
கூனிக் குறுகிச் சுருண்டு
இறந்துப்போகும் இறால்களையுண்ண
ஏனோ மனமிருப்பதேயில்லை.

Wednesday, September 23, 2009

அம்மா

எனக்கு நினைவிருக்கின்றது
சிலசமயம் சமைக்க பத்துரூபாய் கூட இல்லையென
அழுதிருந்திருக்கிறாள்
மல்லிப்பூச் சூடி
செவ்வானம் இருளும்வரை
வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருக்கும்
அப்பாவின் வரவெண்ணி வாசலில் காத்திருந்திருக்கிறாள்
கொஞ்சம் மனமிளகியவள்
கொஞ்சம் கோபக்காரியும்கூட
தண்ணீருக்காக தெருச்சண்டைப் போட்டு பார்த்திருக்கிறேன்
அன்றாட காரியங்களில் ஈடுபட்டவாறே
இரவு பகல் பாராமல்
தையல் இயந்திரம் மிதித்திருப்பாள்
ஈரவிறகை எரியவைக்கும் முயற்சியிலும்
ஏழ்மையின் அவமதிப்புகளில்
கண்கலங்கி மனம் குமுறும் வேளைகளிலும்
இவ்வாழ்க்கையைப் பற்றி
மிகவும் அலுத்துக்கொள்வாள்
மழையில் நனைந்த அடுத்தநாள் காய்ச்சலில்
நெற்றி ஈரத்துணியும்
அவளின் தலைக்கோதலும்
எப்பொழுதாவது
அதிசயமாய் வாய்விட்டுச் சிரிப்பாள்
சமயங்களில்
மழைக்குப் பின்னரான பொழுதென 
மௌனம் கொள்வாள்
பெருமழைக்காலங்களில்
ஒழுகும் வீட்டின் ஒழுகாத மூலையோரம்
என்னையும் எனதக்காவையும்
முலையழுந்த அணைத்தபடி
அப்படியே உறங்கிப்போவாள்.

- நன்றி உயிரோசை

Monday, September 7, 2009

இர‌ண்டாம் வ‌குப்பு ஈ வ‌ழிப்போக்க‌ன்

மிச்சமின்றி
அழுதுமுடித்த ஒரு மாலை வேளையில்
க‌ட‌ற்க‌ரையிலிருந்து விடைபெறுகிறேன்
நகர்ந்து பேருந்தில்
க‌ச‌ங்கும் நெரிச‌ல்க‌ளினூடே ஏறுகையில்
ஒரு இருக்கை கிடைத்துவிட்ட‌து எனக்கேவென்று
அம‌ர்ந்துகொண்டேன்
அருகே சன்னலோரம்
வேடிக்கை பார்த்தவாறு அம‌ர்ந்திருந்தான்
சிறு பொடியன் ஒருவன்
பார்கையில் திரும்பி மிக‌ அழ‌காகப் புன்ன‌கைத்தான்
தனது ப‌ழுப்புநிறப் பிர‌காச‌மான‌ விழிகளில்
நானும் மெல்லிய கேவலினூடேப் புன்ன‌கைத்தேன்.
ஏதோ நினைவுகள் பெருக
அடங்காது வழியும் கண்ணீர்த்துளிகளை
விரல் அழுத்தித் துடைத்தப்பின்
சற்று அமைதியாகி பெய‌ரென்னவென்றேன்
அக்த‌ர் ப‌ர்வேஸ் என்றான்
தான் இரண்டாம் வகுப்பு ஈ படிப்பதாகவும்
புதுக்கோட்டையிலிருந்து
பாட்டி வீட்டிற்கு வ‌ந்திருப்ப‌தாக‌வும்
கேட்காம‌லேயே சொன்னான்
மேலும் க‌ட‌ற்க‌ரையில்
பாட்டி வாங்கி த‌ந்ததென‌ பொம்மையொன்றை
என‌க்கு காட்டினான்
ஊதாநிற‌ உடைய‌னிந்த அது
புன்ன‌கைத்த‌வாறே எனைப் பார்த்த‌து
இன்னும் பேச்சுக்கொடுக்கையில்
அழகாய்ப் பேசிக்கொண்டேயிருந்தான்.
அவனது மழலை மொழியில்
ம‌ன‌ம் சற்றே லேசாகி இருந்த‌து.
சிறிது நேரத்தில் கேள்விகளை அவன் ஆரம்பிக்க
நான் பதிலளித்தபடி இருந்தேன்.
இதற்கிடையே
ஈர‌ச்சாலையின் மஞ்சள் தெருவிள‌க்கொளியில்
இலக்கை நோக்கி விரைந்த‌ப‌டி இருந்தது எங்களின் அந்தப் பேருந்து.
ஒரு தருணத்தில்
ஏன் அழுதீர்க‌ள்
என மெல்ல கேட்ட‌வ‌னுக்கு பதிலென்ன கூற‌‌?
மனம் கனத்து மௌனமாகிவிட்டேன்.

அழுவதற்கான காரண‌ங்கள்
குழந்தைகளைப் போல
ப‌சிப்ப‌த‌ற்கும்
ப‌க்க‌த்தில் யாரும் இல்லாத‌ற்கும் ம‌ட்டும் இருந்திருந்தால்
வாழ்க்கை எவ்வ‌ள‌வு நன்றாக‌ இருந்திருக்குமென‌
முணுமுணுத்த‌வாறே வீடு திரும்பினேன்.

- நன்றி உயிரோசை

Thursday, August 27, 2009

இந்த‌ மரங்கள்

பறக்கின்றார்கள்
விரைகின்றார்கள்
ஓடுகின்றார்கள்

விமானத்தில்
இரயிலில்
பேருந்தில்
மற்ற வாகனங்களிலும்

ஓயாத அந்தரத்துடன்
நேர‌த்தை சேமிக்கும் பொருட்டு.

சாலையோர‌ ஊதாப்பூக்களை
த‌டவிய‌வாறு மெல்ல‌ நடந்தபடி இருக்கின்றோம்
நானும் சாய்னாவும்.

நகர்வதேயில்லை இந்த‌ மரங்கள்.

Wednesday, August 26, 2009

........

அப்படி என்ன பெரிதாக வாழ்ந்துவிடப்போகிறீர்கள்
எவறொருவருக்கும் உதவாமல்.

##

என்னைவிட
ஆழ்ந்து அடர்ந்து அழுகிறது மழை.
ஏதேனும் காரணமிருக்கலாம்.

##

யாவும் சுயமாகிப் போனபின்
நீங்கள் செய்வதிலென்ன சரி
அவர்கள் செய்வதில்தானென்ன தவறு?

##

த‌ரையில் துடி துடித்த‌ மீனை
கையில் அள்ளியெடுத்து நீரில் விட‌
நீந்தி மறைகிறது இலகுவாக‌.
யாருக்குத் தெரியும்
அதுவும் முய‌ன்றிருக்க‌லாம்.
த‌ற்கொலைக்கு.

##

வரையறைகளை மாற்றுவதில்
தவறொன்றுமில்லைதான்.
உண்மை ஒருவரின் மனமுடையச்செய்யும் போதும்
பொய்மை பலரை மகிழச்செய்யும் போதும்.

Wednesday, August 19, 2009

உதிர்ந்த இலையொன்றை பற்றியதானவை

நரியனூரா
ரவியின் பாட்டியின் பெயர்
தோல் சுருங்கங்களும் தெளிவற்ற பார்வையும்
அவளின் ஐந்து தலைமுறை வயதையும்
தொங்கும் காதுக‌ள்
முன் கால‌ங்களில் அவ‌ள் க‌ன‌மான‌
தோடு அணிந்திருந்த‌தையும்
வெள்ளை உடை அவளின்
நீண்ட தனிமையையும்
பார்க்கும் பொழுதே நமக்கு உணர்த்திவிடும்.
முத‌ன்முறை எனைக் கண்ட‌போது
நெருங்கி த‌ன் த‌ள‌ர்ந்த‌ கைக‌ளால் எனைத் தொட்டு
ராரா ர‌மேஷு பாவுண்ணாவா? என்றாள்
நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்
நா ர‌மேசு காதுவா குட்டி.
ஒவ்வொருமுறை நான் ர‌வி வீட்டிற்கு செல்லும்போதும்
அவ‌ளென்னை ரமேஷ் என்ற‌ழைப்ப‌தும்
நான் ம‌றுதலிப்ப‌தும் வாடிக்கையாகியிருந்தது.
பின் வ‌ந்த‌ நாட்க‌ளில்
எவ்வித‌ ஆட்சேபனைகளுமற்று
அவ‌ளுக்கு நான் ர‌மேஷாகியிருந்தேன்.
எத‌ற்காக‌ என்னை அப்ப‌டி அழைக்கிறாளென்கிற‌ குழ‌ப்ப‌த்தை
இதுநாள்வரை அவ‌ளிட‌ம் தெளிவுப‌டுத்தியதேயில்லை.
ஏதாவ‌து கார‌ண‌மிருந்திருக்க‌லாம்.
நான் ர‌மேஷாகி போன‌தில் அவ‌ளுக்கும்
மிக்க‌ ம‌கிழ்ச்சி தான்.
வ‌ருவோர் போவோரிட‌மெல்லாம்
சொல்லியிருக்கிறாள் தான் ரமேஷை பார்த்ததாக
ர‌மேஷிட‌ம் பேசிய‌தாக‌.
ஒரு ப‌க்க‌த்தைப் புர‌ட்டும் ய‌தார்த்த‌தோடு
க‌ழிந்துவிடுகின்ற‌ன‌ இந்த‌ நாட்க‌ள்.
சில மாதங்க‌ளுக்கு முன்
பாட்டி த‌வறிவிட்ட‌தாக ர‌வி தொலைபேசியபோது
ம‌ர‌முதிர்த்து
காற்றில் மித‌ந்து
நில‌ம் சேரும்வ‌ரை
ஒற்றை இலையொன்றை வெறித்திருந்தேன்.

இப்பொழுதெல்லாம்
யாரும் என்னை ரமேஷென்று அழைப்பதில்லை.

- நன்றி உயிரோசை

என்னிடமிருக்கின்றது ஒரு பொய்

அம்மா அப்பா எப்பொழுது வருவார்?
இம்முறையும் பதிலேதுமில்லை
அவளிடமிருந்து.
நேற்று ஏரிக்கரையில்
சேகரித்துவந்த பனை மட்டைகளோடு
புகைந்து கொண்டிருந்தவளை
மேலும் எதுவும் கேட்கவில்லை.

வெளியேறி
முற்றத்தில் கீழே கிட‌ந்த ப‌ந்தை எடுத்து
வீட்டின் முன்புற சுவருடன்
உள்ளங்கை டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தேன்.
ஒவ்வொருமுறை தோற்கும்போதும்
ஆட்டத்தை முதலிலிருந்து துவங்க
முடிவில் சலித்துப்போய்
நாய்க்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்தேன்
அதே பந்தைக்கொண்டு.

உச்சியும் தொண்டை வற‌ண்டும் தாகமும்
பெரும் அயர்ச்சியொன்றை உருவாக்கிய‌தில்
உள்சென்று பித்த‌ளை அண்டாவில்
ஒரு கோப்பை த‌ண்ணீர் பிடித்துக்குடிக்க
த‌வ‌றி சித‌றிய‌ நீர் ச‌ட்டையை ந‌னைத்து
மார்பை குளிர்வித்த‌ வேளையில்
தாழ்ந்த குரலில் அம்மா சொன்னாள்
வெளிப்புற‌ம் தாழிட்டு
முற்ற‌த்துலேயே விளையாடிக்கிட்டிருடா...
க‌ந்துகார‌ன் வந்து கேட்டாகா அம்மா க‌டைக்கு வெளிய‌
போயிருக்கிற‌தா சொல்லிடுடா குட்டி.

குடிப்ப‌தை நிறுத்திவிட்டு
ஒரு க‌ண‌ம் அசையாது அவளைப் பார்த்தேன்.
அவ‌ளும் அப்ப‌டியே.

இப்பொழுதும் என்னிட‌மிருக்கின்ற‌து
அந்த ஒரு பொய்.


(பால்ய‌த்து விடுமுறை நாளொன்றின் ந‌ண்ப‌க‌ல் பொழுதில்)

- ந‌ன்றி உயிரோசை

Tuesday, August 11, 2009

ந‌ம்பிக்கை

உன‌து நினைவுக‌ள் எனை வாட்டுமொரு
மாலைப் பொழுதொன்றில்
அருகே வ‌ந்து
பின்கழுத்தை அணைத்தவாறு
பூதம் என்றாலென்ன‌
கேட்டாள் குழ‌ந்தை

முன்புறமிழுத்து
போர்வை சூழ‌ இறுக்கி கன்னத்தில் முத்தமிட்ட‌வாறு
அத‌ற்கு காதுவ‌ரை ப‌ற்க‌ளிருக்குமென‌வும்
பானை போன்ற‌ த‌லையுடன்
ம‌ஞ்சள் அல்லது வெள்ளை நிற‌த்தில் உடைய‌ணிந்து
பார்க்க‌ ப‌யங்கரமாக‌ இருக்குமென‌வும்
காட்டுப் ப‌க்க‌ங்க‌ளில் அதை காண‌லாமென‌வும்
சொல்லி வைத்தேன்

பின்னொரு நாள்
சன்னலோர பேருந்து ப‌ய‌ணமொன்றில்
சோளக்காட்டு பொம்மையொன்றை சுட்டி
ஃஓ பூத‌மென‌
உத‌டு குவித்து
விய‌ப்பின் புருவ‌ங்க‌ளுட‌ன்
கை நீட்டிய‌வ‌ளை
சற்றே ஆச்ச‌ரிய‌த்துட‌ன் பார்த்தேன்

ஆம்
எப்பொழுதும்
மிக‌ எளிதான‌தாக‌வே இருந்திருக்கின்ற‌து
இள‌கிய‌ ம‌ன‌ங்க‌ளை ஏமாற‌ச் செய்வ‌தென்ப‌து.

- ந‌ன்றி உயிரோசை

Wednesday, August 5, 2009

சிக‌ப்பு ந‌ட்ச‌த்திர‌ம்

நாட்கள் பல கழித்து
மனமிள‌கும் மெல்லிய குரலுடன்
ஆரம்பிக்கிறாய் தொலைபேசியில் ஓர் உரையாடலை
கடந்தமுறை
ஏற்பட்ட மனக்கசப்பை
புரித‌லில் ஏற்ப‌ட்ட‌ இடைவெளியை
மறக்கச்செய்யதாக இருக்கின்றது உன் பேச்சு
வசீகரிக்கும் வார்த்தைகள்
சுவடுகளேதுமின்றி
மெல்லக் கரையச் செய்கின்றன
என் நெஞ்சை
துளிர்த்து வழியுமுன் பிரியங்கள்
இமைகளை மூடி மென்மையாக‌
ம‌யிலிற‌கால் முக‌ம் கோதுகின்றன
என் கோபங்களையெல்லாம்
எளிதில் களைய‌ச் செய்யும்
த‌ந்திர‌ங்க‌ள் தெரிந்திருகின்றது உன் குரலுக்கு
ஆனாலும்
விட்ட‌ இட‌த்திலேயே
தொட‌ங்க விரும்புகிற‌தென் ம‌ன‌ம்
ஆம் தேவை எனக்கிருகின்றது
பேசியே ஆக‌ வேண்டும்
ந‌ம‌க்கிடையேயான‌ புரிதலை
சூழ்நிலைகளில் நேர்ந்த ம‌ன‌க் க‌சப்புகளை
முன்னெப்போதும் சொல்லிக்கொள்ளாத நமது புகார்களை
வலியுடனான‌ இருத்தலை
என‌திந்த‌ நீண்ட‌ த‌னிமையை
உனது நினைவுகளை நிறுத்தும் வழியொன்றை
இன்ன பிற‌ ப‌ற்றியும்
உள்ளுக்குள்ள‌ கோபங்களெல்லாம் கிளர்ந்தெளச்செய்யும் வகையில்.
இனி உன‌த‌ன்பு தேவையில்லையென‌ நீயும்
இனி எனை எப்பொழுதும் தொட‌ர்புகொள்ளாதேவென‌ நானும்
பேசிக்கொண்ட பின்
தொலைபேசியை அணைத்து தூர எறிந்தேன்
ப‌டுக்கையை விரித்து
மொட்டை மாடியில் படுக்க
எனைச் சூழ்கிறது
அதே வானம்
நேற்றைவிட சற்றே வ‌ள‌ர்ந்த‌ நில‌வு
ஆடை தழுவும் தென்றல்
எங்கோ போகும் வவ்வால்கள்
தூர‌த்து தெருநாயின் ஊளை
கொஞ்ச‌ம் ந‌ட்ச‌த்திர‌ங்கள்
மற்றும் வெறுமைகள் சிலவும்.
நேற்றிரவு வானை
நீங்க‌ள் ச‌ற்று உற்று நோக்கியிருந்தால்
க‌ண்டிருக்க‌லாம்
தீராத‌ கோப‌ங்க‌ளுட‌ன் க‌ன‌ன்றுகொண்டிருந்த‌
சிக‌ப்பு ந‌ட்ச‌த்திர‌மொன்றையும்.

..............

அன்று ஒரு நாள் மாலை
மழைப்பறவைகளின் மொழியை
தலை கோதியவாறு விவரித்தேன்
வாய்பேச இயலாச் சிறுவனிடம்

நேற்றுக்கூட
வானவில்லின் புதிய நிறமொன்றை
பிரித்துக்காட்டினேன்
பின்தெரு பார்வையற்றவளிடம்

இதோ
உதட்டசைவுகளை
உற்று கவனிக்கும்
இந்த காது கேளாதவனுக்காக
எனது தனிமையின் பாடலொன்று

.....

விபத்தில்
ஒரு கால் இழ‌ந்த
பக்கத்துவீட்டு சிறுமியிட‌ம்
வாக்குக் கொடுத்திருக்கிறேன்
நாளை புல்வெளியில்
ஓடி விளையாட‌லாமென

கிளைகளை வளைத்து
பசுந்தளிர்களை தட‌வியதிலிருந்து
முற்றத்து மரமும்
என்னுடன் பேச ஆரம்பித்துவிட்டது

ம்ம் உங்களுக்கும் சொல்லித‌ரவா?

அன்பின் எளிய‌ வெளிப்பாடுக‌ளில்
எதையும் சாத்திய‌மாக்கும்
வித்தையொன்றை?

Monday, July 27, 2009

இயலாமை

மின்சாரம் நின்ற‌ இரவொன்றில்
ஒளிரும் அகலின் வெளிச்சத்தில்
கட்டவிழ்த்து திளைக்கிறீர்கள்
நானோ எரியும் திரியின் வேதனையில்
மௌனித்திருக்கின்றேன்.

கொடி காற்றில்
அழகாய் பற‌ப்பதாயெண்ணி உளமகிழ்கின்றீர்கள்
நான் நினைத்துக்கொண்டிருகின்றேன்
அது விடுதலையின்கண் துடிப்பதாய்.

நீங்கள் பூத்து குலுங்கும்
வண்ண மலர்களை ரசித்துக்கிட‌க்கையில்
எனது கவலைகளென்னவோ
விற்காமல் போன மலர்களை பற்றியதானவை.

எவ்வளவோ முயற்சி செய்தும்
எனதிந்த‌ வாழ்வோடோ
இல்லை உங்கள் சமூகத்தோடோ
இன்னும்கூட இண‌ங்கி போக‌ முடிவதேயில்லை.

எல்லாவ‌ற்றையும் விட்டு
எங்காவ‌து போய்விட்டால்தானென்ன‌?

இழ‌ப்புக‌ளனைத்தும்
ச‌மாதான‌த்திற்கு அப்பாற்ப‌ட்ட‌வைக‌ளென‌
புரிந்ததொரு மழை நாளில்
புதிய‌ வ‌ன‌மொன்றிற்கு
ஒரு ப‌ற‌வையாக ப‌ற‌க்க‌ எத்தனைக்கிறேன்

முக‌மறியாத‌ யாரோ சொல்லி செல்கிறார்கள்
சிறகொடிந்த பட்டாம்பூச்சிகள்
பறப்பதில்லையென.

- ந‌ன்றி திண்ணை

Friday, July 24, 2009

...............

நூறாண்டுகள் பழமையான
பசுமரங்களை வேருடன் பிடுங்கி
நடப்போகிறார்களாம்
பெரிய பெரிய கான்கிரீட் கட்டிடங்களை.
என் கண் முன்னே
எனது வனம் அழிக்கப்படுவதை
எப்படி சகிப்பேன்?
எனதெதிர்ப்பை எப்படி பதிவு செய்வேன்?

நானொன்றும் காக்கை அல்லவே?
தன் கூடொன்று கலைக்கப்படுகையில்
கூவிக் கரையவோ
அல்லது
கூட்டம் சேர்க்கவோ.

Thursday, July 23, 2009

தேன்

பல கோடி மலர்களில்
அலைந்து திரிந்து
பல ஆயிரம் தேனீக்கள்
சிறுக சிறுக சேகரித்த உழைப்பின் பல‌னை
சட்டென முழுவ‌தும் அப‌க‌ரித்துக்கொள்வ‌தைவிட‌
வேறென்ன பெரிய அபத்தம் இருந்துவிட‌ப்போகிற‌து?

Thursday, July 16, 2009

ஒரு விழா நாள்

பெரியோர்கள் நிறைந்த
உனதந்த விழாவிற்கு உன்னால் முதலாவதாக
அழைக்கப்பட்டிருந்த பெருமையுடன்
விழா அறையினுள் நுழைகிறேன்.

வாச‌னையுட‌ன் வ‌ர‌வேற்ற‌ன‌
எங்கோ பூத்து யாராலோ கோர்த்து
வாசலில் தொங்கவிடப்பட்ட
சம்பங்கி ம‌ல‌ர் தோர‌ண‌ங்கள்.

திடீரென கன்னத்தில்
ச‌ந்த‌ன‌ம் பூசிவிட்டு ஓடி ம‌றையும்
சிறுவனின் குதூகலத்தை
ஏனோ பின்தொட‌ர‌ முடியவில்லை.

ம‌ஞ்ச‌ள் விள‌க்கொளியில்
நான் ல‌யித்துக்கிட‌க்க‌
க‌ள‌ங்க‌மில்லாப் புன்ன‌கையுட‌ன்
கை பிடித்து கூட்டிச் செல்கின்ற‌ன‌ர்
ப‌ட்டாடைய‌ணிந்த‌ சிறுமியர்.

அவர்கள் விட்டு ஓட
அதே முகம் பார்க்கும் பார்வைகளுடன்
என்னெதிரே நீ.

எதுவும் பேசிக்கொள்ள‌வில்லை.

இந்த மௌனங்கள் தான் எவ்வளவு வலியவை
உணர்வுகளை அப்ப‌டியே வெளிப்படுத்துவதில்?

ஏதாவது பேசியிருக்கலாம்.

சற்று நேரம் இருந்துவிட்டு
உன்னிடம் சொல்லாம‌லேயே
வெளியேறிவிட்டேன்
நீ பெற்றுக்கொள்ளாத எனது பிரியங்களுடன்.

பெரும்பாலும்
விழா முடிந்த‌தும் நிறையும்
விழா அறையின் வெறுமை
அன்று ச‌ற்று முன்கூட்டியே
என்னுள்.
மிக‌ ஆழ‌மாக.

Tuesday, July 14, 2009

.......

மிக‌ அழ‌காக‌வே இருக்கின்ற‌ன‌
எல்லா புன்ன‌கைக‌ளும்.

Monday, July 13, 2009

கோணம்

நிற்கும் பேருந்தின்
சன்னல் வழி விரியும் பார்வையில்
விழுகிறாள்
பசிக்குதென வயிறு தடவி
கையேந்தி இறஞ்சும்
ஏழைச் சிறுமியொருத்தி

கேட்டு கேட்டு
எதுவும் கிடைக்காத பட்சத்தில்
சிறிதும் தயக்கமின்றி
வேறொருவரை அணுகும்
அவளைப்போலவே
என் நெஞ்ச‌மும் இருந்திருந்தால்?

எதையோ
அமைதியாக‌ நினைக்க
ஆயத்தமாகியிருந்த‌போது
பேருந்தும் நகரத் தொடங்கியிருந்தது.

Tuesday, July 7, 2009

வ‌ழியும் மாலை நேர‌ம்

தழுவும் ஈரக்காற்றில்
இலைகளை உதிர்த்தவண்ணமிருகின்றன
மிக உயர்ந்த யூக‌லிப்டஸ் மரங்கள்.

யாருமற்ற தெருக்களில்
அலைந்து தொலைகின்றன வெள்ளை நிழல்களும்
கருத்த மழை முகில்களும்.

எங்கிருந்தோ வந்து
எனைக் கடந்தபடி இருக்கின்றன
பெரிய நீல‌ வண்ணத்துப்பூச்சிகள்.

குடைகளுக்குள்
யாரோ பேசிய‌வாறு போகிறார்கள்
எதையோ.

மழைநீர் கோர்த்த
பசுந்த கிளைகளை உலுக்க
சிதறுகிறது
குளிர்ந்த கின்னர இசையொன்று.

இன்றும் சந்திக்க நேருகிறது
நீயற்ற வேளைகளை.

யாரிடமும் பேச தோனுவதில்லை.

சூழும் தனித்த இரவை
தடுத்து நிறுத்த வழியேதுமின்றி நானிருக்க
ச‌ன்னல் கண்ணாடியில் மழைநீராய்
உருகி வழிகிறது இம்மாலை மழை நேரம்.

- ந‌ன்றி திண்ணை

Tuesday, June 30, 2009

............

தொடர்ந்து ஒலிக்கும்
உனது நான்காவது அழைப்பையும்
துண்டிக்கின்றேன்
பேச இனி என்ன இருகின்றது
உனக்குமெனக்குமிடையில்
நைந்துபோன சில‌ மௌனங்களைத் தவிர.

Wednesday, June 24, 2009

...............


தூங்கி எழுந்ததும்
நாள் கடந்துப் பார்த்த உற்சாக மிகுதியில்
அறைவிட்டோடி இரு கையை விரித்து வானேந்தி நிற்கையில்
நின்று போயிருந்தது மழை.Wednesday, June 17, 2009

தனிமையின் சித்திரம்

யாருமே அணுகாத மாலைப்பொழுது
அமைதியாய் வியாபித்திருகின்றது
இவ்வெளியெங்கும்
ஓர் முதிர்கன்னியின் முனகுதலை போல.

இந்த நாள் ஒன்றும்
சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

சலித்தப் பொழுதுகளை
அறைக்குள் நடந்து கழிக்கும்
பிரயாசையேதுமின்றி
நாள்பட்டுபோன
எனதிந்தத் தனிமையை
ஒரு இரவு
ஒரு இலை உதிர்ந்த மரம்
ஒரு மனித நிழலென
உருவகித்து சித்திரமாக வரைகிறேன்.

வெறுமைகள் வழியும்
அதன் மொழிகளுக்கு
க‌ருமையின் வண்ணமிட
ஏனோ பிரகாசமிழக்கின்றது வானம்.

நேற்றைய நட்சத்திரங்கள்
சிலவற்றை அதன்மீது பதிக்கையில்
விலகியோடிய மேகங்களிடம் காரணங்களேதுமில்லை.

பிறிதொரு மழைநாளில்
நீயதைத் தடவி ரசித்த‌போதும்
சித்திரம் சித்திரமாகவே இருந்தது.

இன்றும்கூட‌ அப்படியே.

என்றாவது ஒரு நாள்
எதார்த்தங்களின் நீட்சியாய்
மக்கி சிதைந்து மண்ணாகியே போகக்கூடும்
அச்சித்திரம்
நீயதன் பொருளுணராமலேயே.

Thursday, June 4, 2009

விருப்பம்

எல்லைகளற்ற எனது பிரியங்களை
திரை மறைவில் ஒளித்து வைத்தப் பின்
நான் எங்கும் போய்விடப்போவதில்லை
உன்னுடன் தான் இருக்கப் போகிறேனென்கிற
உனது சமாதானங்களை கேட்டபடி
சும்மா படுத்திருகிறேன்
உனது பிரிவைத் தாங்கும் திராணியற்று

அருகில் வ‌ந்து தலைகோதிய‌வாறு
உட‌ல் ந‌ல‌ம் வின‌வுகிறாய்
என‌து உத‌டுக‌ள் தாழிடப்ப‌ட்டிருக்கிற‌ன‌

என்னை காதலிப்பதாகவும்
நமதிப்பிரிவு வேதனையளிப்பதாகவும்
விரல்களை இறுகக் கோர்த்தபடி
நீ சொன்ன‌ க‌ண‌த்தில்
தெரியவில்லை எங்கனம் அழுவ‌தென

எழுந்து முக‌ங்கழுவி தயாரா‌கிவிட்டேன்

உனை சும‌ந்து
காலை இர‌யில் என் முன் ந‌கர்ந்து மறையும் வரையில்
வெறுமென கைய‌சைத்திருந்தேன்

ஒருவேளை
விடைபெறும்முன் என் முகம் பார்த்தபடி
எதார்த்தமாய் எதாவது வேண்டுமாவென கேட்டிருப்பாயானால்
யாசித்திருந்திருப்பேன்
உனதருகாமையை ம‌ட்டும்.

- நன்றி உயிரோசை

Tuesday, May 19, 2009

....................

தட்டுங்கள் திறக்கப்படுமென்றார்கள்
முடிந்தவரைத் தட்டினேன்
திறக்கப்படவில்லை.
உடைத்து விட்டேன்.

##

திருத்தி எழுதிக்கொள்ளுங்கள்
இங்கு எல்லா உயிர்களுக்கான மதிப்பும்
ஒன்றல்ல.

##

கல் பட்டு விரியும்
குளத்தின் நீர் வளையங்களை போல
மிக லேசாக இருக்கிறதென் மனம்
உன்னொரு மௌனத்தில்
உடைந்து நீள‌வும்
உன் குறுஞ்சிரிப்பொன்றில்
இயல்பு மீளவும்.

- நன்றி உயிரோசை

##

எழுதாமல் மறந்து போன
மிக நல்ல கவிதை போல
ஒரு நாள் இறந்துப்போவேன்
யாருக்கும் என்னை வெளிப்படுத்தாமல்.

Sunday, May 10, 2009

ஒரு புனைவு

பிடிலின் இசை ததும்பும்
வண்ணங்களற்ற பொழுதொன்றில்
எதிர்கொள்கிறேன் உனது பிரிவொன்றை

கட்டியணைத்தலோ
கரைதலோ ஏதுமின்றி
இம்முறையும் மௌனங்களே
நிரப்பிக்கொள்கிறன நமக்கான வார்த்தைகளை

உறுதியற்று தழுவிய விரல்களை
மெல்ல விடுத்து
கடைசி பார்வையொன்றில்
உறுதி செய்கிறாய் வெளிபடுத்தாத‌ காதலை

திசைகளைப் பிரித்து
நீ விடைபெற்ற பின்
வானம் இடிந்து விழுகிறது மழை

இம்முறை மழையில்
முழுவதும் நனைய‌ விருப்பமற்று
அறை திரும்புகிறேன்

மழையின் சப்தம் மட்டுமே
கேட்டுக்கொண்டிருக்கும்
பிறிதொரு இருண்ட‌ வேளையில்

தனித்து உருகும்
மெழுகின் மஞ்சள் சுடருடன்
பேச ஆயத்தமாகிறேன்

பிரிவின் பொருளுணர்த்தும் புனைவொன்றை பற்றி

Saturday, April 25, 2009

.....................

வீட்டிலேயே வளர்க்கப்பட்டும்
கோழிகள் மனிதர்களோடு
நெருங்கி பழகாத‌ற்கான காரணம்
அப்பொழுதுதான் புரிந்ததெனக்கு
வேண்டுதலுக்கென கோவிலில்
அவற்றொன்றின்
தலையறுக்கப்படுகையில்.

****


இடம்பெயர்தலுக்கான
காரணங்களை
நின்று மெதுவாக
எடுத்துச் சொல்லியும்
பின் உயிருருக கெஞ்சிப் பார்த்தும்
உட‌ன் வர சம்மதிக்கவேயில்லை
தோட்டத்து மரம்.

- நன்றி உயிரோசை

****

மனமுடைந்து மௌனித்திருக்கும்
இக்கணத்தில்
முகம் தெரியாத வழிப்போக்கனின்
இந்த‌ நட்பான புன்னகைக்கு
பரிசளிக்க பெரிதாய் வேறொன்றும் இல்லை
சிறு புன்னைகையைத் தவிர.

Tuesday, April 21, 2009

மனப்பிறழ்வு

எனக்குள்ளே பேசிக்கொள்ளும்
மிக நிசப்தமான இந்த நிசியில்
மெல்ல உணர்கிறேன்
தவிர்க்க‌ முடியாத ஒரு தனிமையை

ஆந்தையொன்று படபடத்து கடக்க
மிகுந்த சலிப்புடன்
கனவுகளின் ஆழத்தில் மூழ்கி
உறங்கிப் போனேன்

காலையின் வெளிச்சம்
முகத்தில் ஒளிர்ந்து பகலான போது
வெறுமனே முடிந்துப் போயிருந்தது
ஆண்டுகள் பல தவமிருந்து
ஆவலுடன் எனைக் காண வந்திருந்தப் பொழுதொன்று

எழுந்து கண்ணாடியில் பார்கிறேன்
காணுமிடமெல்லாம் தெரிகின்றன
புறக்கணிப்பின் தட‌யங்கள்

நேசமாய் தோள்தொடும்
முற்றத்து கொடிப்பூக்களிடம்
எப்படிச் சொல்ல‌
நமத்து போய்விட்டது இந்த காதலென்று

நேற்றைய வேளைகளில்
என்னுடனிருந்தவர்களே
இப்பொழுதுகளிலும் ஊடுருவுகின்றனர்

மாலையில்
அறை நுழைந்த காற்று
எழுதிப் போகிறது
என் மனம் பற்றிய சிறு குறிப்பொன்றை

Friday, April 3, 2009

...............

மௌனமாக இருந்துவிட்டேன்
தொடுகையில் உதிர்ந்த
இளம் மொட்டிடம் சொல்ல
யாதொரு சமாதானங்களுமில்லை
என்னிடம்.

##

தனிமை என்பது
நீயற்ற வேளைகளிலல்ல
நானற்ற வேளைகளில் மட்டுமே.

##

ஒரு சிறு கல் கொண்டு
மிகுந்த‌ ந‌ம்பிக்கையுட‌ன்
க‌வ‌ணில் குறிவைக்கிறேன்
நிலவை உடைத்தெறிய‌.

Tuesday, March 31, 2009

நீல நிற மௌனங்கள்

நிலைகொள்ளாத
நொடிப் பார்வைக‌ளில்
வான் தொட்டுத் தோற்கின்றன
பகிரயிய‌லாத நம‌து புரிதல்கள்

நழுவி நதியெனக் கரைபுரளும்
மௌனங்கள் எழுப்ப முயலும்
நம்மிடையே பெரும்
திரையொன்றை

நான் அர்த்தப்ப‌டுத்திக்கொள்வேன்
உனதிந்த‌ மௌனங்களை
இருள் கவியும் வானமொன்றில்
மிளிரும் வெண் மின்னலெனவோ
அல்லது
சிறு கல்பட்டு உடைந்த
கண்ணாடி குளத்தின் குறு அலைகளெனவோ.

வெகுதினங்களுக்கு பிறகு
இன்று வயல்வெளியில் நடக்கையில் காண்கிறேன்

அருக‌ருகே தொங்க‌விட‌ப்பட்டும்
எதுவும் பேசிக்கொள்வதில்லை
இரு சோள‌க்காட்டு பொம்மைகள்

நம்மை போலவே
அவற்றிற்குள்ளுமிருக்கலாம்
சொல்லாது அமிழ்ந்துபோன
வெறுமையின் வார்த்தைகள்

யாதொரு செய்தியும்
இல்லாது கைவிரிக்க
சலிப்புடன் நகர்ந்துவிட்டன
மாலையின் மேகங்கள்

உணர்த்த முடியாத மொழிகள்
தடுமாறி விழும் இப்பொழுதுகளில்
மெல்ல தன் வண்ணங்களை இழக்கின்றது
எனதிந்த வாழ்க்கை.

Tuesday, March 24, 2009

.......................

சன்னலோரப் பயணங்களில்
சன்னலுக்கு வெளியே
மென்காற்றோடு காற்றாக
மேலும் கீழும்
அலைபாயும் விரல்களை

மழைத்துளிகளை
வாயிலேந்தும் முகங்களை

எத்துனை முறைச் சொல்லிக்கொடுத்தும்
செருப்பை மாற்றிப்போடும் கால்களை

இரு சக்கர வாகனங்களில்
பிடித்துக்கொள்ளும்படி பின்னே அமர வைக்கப்படுகையில்
எட்டாது எட்டாது நீளூம் கைகளை

இமைகளை மடித்து
மழலைகளை அச்சமுறச்செய்வதாக நினைத்து
புன்னகைக்கச் செய்பவர்களை

எனக்குத் தெரியும்

இன்னும் பணம் கட்டாததால்
பெற்றோரை அழைத்து வரும்படி
வகுப்பறைகளை விட்டு வெளியேற்றப்படும் உடல்களை

பொன்னகை இல்லாத காரண‌த்தினால்
விழாக்களைப் புறக்கணித்து
வீட்டிற்குள் பதுங்கும் அம்மாக்களை

வந்த இடத்தில்
ஆடம்பரமான உணவு கிடைக்க நேர்கையில்
வீட்டை நினைத்துக்கொள்ளும் அப்பாக்களை

பயணங்களில் எதார்த்தமாக அருகருகே அமர நேர்கையில்
எனக்கும் அவளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லையென
பார்ப்போர் அறியும்வண்ணம்
கால்களையோ முகத்தையோ திருப்பிக்கொள்ளும் திருமண‌மானவளை

இந்த பேருந்து எங்குப் போகும்
எங்குப் போகுமென
நிறுத்ததில் வருவோர் போவோரிடமெல்லாம்
கேட்டபடியிருக்கும் எழுத்தறிவில்லா முதியவர்களை

இரயில் பயணங்களில்
முன்பதிவில்லாதப் பெட்டிகளில்
பயணம் செய்ய நேர்கையில்
உட்கார இருக்கைகளிருந்தும் தவிர்த்து
கீழோ கழிவறைக்கருகிலோ அமர்ந்துகொள்ளும் வறியவர்களை

எனக்குத் தெரியும்
எளிய மனிதர்களை
அவர்க‌ளுக்கு கிடைக்கப்போகும் நீதியை

ஒப்பிட்டுப் பார்த்து
ஒப்பிட்டுப் பார்த்து
வருத்தங்கொள்ளும் பிஞ்சு மனங்களை

மேலும்
எத்துனை எத்துனை அவசரமிருந்தும்
ஆள் நடமாட்டம் நிறைந்தச் சாலையோரங்களில்
சிறுநீர் கழிக்க இயலாது தினறும் இந்த நகரத்துப் பெண்களை

Tuesday, March 17, 2009

ம‌ழைக் குறிப்புக‌ள் ‍‍- 3

மெதுவாய் நகர்ந்து
சன்னல் வழிக் காண்கையில்
இசையாய் கரைந்துக்கொண்டிருக்கின்றது
இம்மாலை நேரத்து மழை

க‌ம்பிக‌ளில் ஒளிர்ந்து ஒழுகும்
அத‌ன் துளிக‌ள் உருவாக்குகின்ற‌ன‌
இப்பிர‌ப‌ஞ்ச‌த்தையே சிலிர்க்கச்செய்யும்
அதிர்வான உற்சாக‌மொன்றை

குளிருமென‌
சற்று தயக்கத்தோடு
எந்த நீட்டியக் கைகளில்
சிதறுகின்றன ஒருநூறு நட்சத்திரங்கள்

மழைக்கு பிணக்கியவாறு
அறை நுழைந்த இரு வெண் புறாக்களும்
பாதி ந‌னைந்த நாய்க்குட்டியும்
என்னோடிருக்கின்றன

ம‌ழைப் ப‌ற‌வைக‌ளின்
கானத்தை கேட்க
இப்பொழுதுதான் வாய்த்திருகிறது போல

நான் த‌னித்திருக்கிறேன்
நான் இய‌ற்கையோடிருக்கிறேன்
இருந்தும்

ஏனோ
மனம் எதிர்பார்கிறது
இத்தருணத்தில்
உனதருகாமையை
உனது இதமான நெருக்கத்தை

வழியனுப்ப மனமின்றி
வாசலில் நின்றிருந்த வேளை
இம்மழையும் விலகிப்போகிறது
எவ்வித முன்னறிவிப்புமின்றி.

- நன்றி உயிரோசை

Monday, March 2, 2009

பிரிவின் பிந்தைய கணங்கள்

கதவிடுக்கின்வழிக் கசியும்
இந்நாளின் புது வெளிச்சங்கள்
சொல்ல விழைந்த‌ ஏதோ ஒன்றையும்
நிராகரித்து விட்ட‌ன
பெருகுமென‌து மௌனங்க‌ள்

என்னைவிடவும் அமைதியாக
இருக்கி்றது இந்த அறை

கதவுகள் திறந்தபடியிருந்தும்
யாதொரு புதுமையும் நிகழ்ந்துவிடவில்லை

நிர்பந்தங்களேதுமின்றி
தொடருமிந்த‌ தனிமையில்
வலிமிகுந்து சரிகின்றன
அநாவசியமாகிவிட்ட எனது உணர்வுகள்

தயார்படுத்திக் கொள்ள விழைகிறேன்
உனது பிரிவை ஈடுசெய்யும்
ஆதூரமிக்கதொரு தருணத்தை.

என்றாலும்கூட‌

ஆறுத‌ல‌ற்று விம்மி அழுத
நேற்றைய இரவை சற்றும்
மொழிபெய‌ர்க்க முடியாமல்
தோல்வியைத் தழுவுகின்றன
இப்பகல் பொழுதுகள்.

- நன்றி உயிர்மை மற்றும் திண்ணை.

Friday, February 20, 2009

ஒரு பொழுது

பற்றுதலை விடுத்துப்
பறக்க முற்படும் பறவை
உதிர்க்கச்செய்கிறது
சில பழுத்த இலைகளை

எதிர்பார்த்திருந்தும்
பெய்யவேயில்லை மழை
இன்றும்கூட‌

அவிழுமென் வினாக்களுக்கு
பதில்கூற‌ முடியாமல்
விலகிக் கொள்கின்றன
எல்லாப் பொழுதுகளும்

வ‌ராண்டாவில் மிதந்து
அலையும் வெறுமைக‌ள்
என்னிலும் முளைவிட
அனுமதிக்காம‌ல்
விரும்பிய‌படியே
காகித்தில் எதையோ
கிறுக்கியவாறு அம‌ர்ந்திருகிறேன்
முன் எப்போதுமில்லாத‌வித‌மாக

சண்டையிட்டப் பின்னும்
நீ வந்து நீட்டும் இந்த
தேனீர்க்கோப்பையை
பெற்றுகொள்வ‌தில்
ம‌றுப்பேதுமில்லை என‌க்கு

கோடைகாலத்து மழையாய்
சட்டென‌ வியப்பூட்டவேச் செய்கிற‌து
என்றாவ‌து வெளிப்ப‌டும்
உனதிந்த‌ அக்கறைகள்

Friday, February 13, 2009

..................


ஊடல் மிகுந்து
நெஞ்ச‌ம் எரிமலையாய்
கன‌ன்றுகொண்டிருக்கும்
இவ்வேளையில்

வாழுதலைப் பற்றி
ஆழ்ந்த சலிப்பொன்றை
ஏற்படுத்த ஏதுவாய்

மெல்ல
எனை வந்து சேர்கிறது
பிரிவை அறிவிக்கும்
உனது செய்தியொன்று

தீர்மானிக்க‌ எதுவும‌ற்று
ப‌ர‌வுகின்றன‌ உயிர‌ற்ற பொருட்க‌ளின்
மௌனங்கள் என்னிலும்

பின்னாட்க‌ளில் அது
நிர‌ந்த‌மாக‌வும் இருக்க‌லாமென‌
ம‌ல்லிகை இலையொன்று எழுதிப்போவ‌தை
பார்த்த‌வாறு நிற்க்கையில்

முடிவிலாத் த‌னிமையை
முன்னிறுத்திவிட்டு நழுவிப்போகிறது
எனதிந்த‌ வாழ்க்கை

Sunday, January 25, 2009

உலர்ந்த புன்னகைகள்இந்த‌
கடின வேளையையும்
மிக இலகுவாக
மாற்ற முயல்கிறது
என் முகம் பார்த்து
இதமாக புன்னகைக்கும்
சிறு குழந்தையொன்று

இந்நாட்களில்
நான் விரும்புவது மிகவும்
அமைதியாக இருக்க மட்டுமே எனினும்
மனம் சற்றும் மறுப்பதில்லை
அவ்வபோது சில‌ மௌனமான‌ப்
புன்னகைகளை

தடைகளற்று கசிந்து விழும்
ஒற்றை மழைத்துளி
உருவாக்கும் குறுஅலைகளில்
விரைந்து நதியெனப் பரவுமென்
புன்னகைகளை மகிழ்ச்சியோடு
எடுத்துச் செல்கின்றனர்
புன்னகை தீர்ந்துபோன மக்கள்

வீதிகளில் எதிர்ப்படும்
அனைவர் முகத்திலும் தென்படுகின்றது
எனது புன்னகைகளின்
மெல்லிய‌ இரகசிய ரேகைகள்

பிரவேசிக்க முடியா வெளிகளிலும்
கடும்பனியாய் பொழிகின்றன
எனது புன்னகைகள்

ஆனாலும்
என்னைத் தவிர‌ யாராலும்
காணமுடிவதில்லை
முற்றும் கறைப் படிந்துள்ள
அவற்றின் பின்முகம்தனை.

- நன்றி உயிரோசை

Saturday, January 24, 2009

.................


வழியில் எதிர்வரும்
வண்ணத்துப்பூச்சியை
ஆசையாய் பிடிக்க எத்தனிக்கும்
என் கைகளில் பிடிபடாமல்
விலகிப் போகின்றது
இந்த‌ வண்ணத்துப்பூச்சியும்
எனது எதிர்பார்ப்புகளும்

Wednesday, January 7, 2009

நீக்க முடியாதவை


யுகங்களாய்
கடலெனத் தேக்கி வைத்த எனதாசைகளை
கையளவு நீராக்கும் விதமாய்
இனி என்னிடம்
எதையும் எதிர்பார்க்காதே என்கிறாய்
வெகு எதார்த்தமாக

மௌனமாய் விழுந்து
சில்லுகளாய்ச் சிதறிபோகிறேன்

பின்னொரு
தேவப் பொழுதொன்றில்
பிரியத்தின் பசுமை பூசி
சிதறிய என்னை மெல்ல‌
சீர்ப‌டுத்த‌ முய‌ல்கிறாய்

அதில் வெற்றியும் கொண்டு
நீ வெளிப்ப‌டுத்திய‌ப் புன்ன‌கையில்

நீக்க‌ முடியாம‌ல்
நிர‌ந்த‌ர‌மாய் எஞ்சிவிடுகின்ற‌ன‌
உடைந்த‌ என் த‌ழும்புக‌ளும்
உன‌த‌ந்த கடுஞ்சொற்களும்