Tuesday, March 31, 2009

நீல நிற மௌனங்கள்

நிலைகொள்ளாத
நொடிப் பார்வைக‌ளில்
வான் தொட்டுத் தோற்கின்றன
பகிரயிய‌லாத நம‌து புரிதல்கள்

நழுவி நதியெனக் கரைபுரளும்
மௌனங்கள் எழுப்ப முயலும்
நம்மிடையே பெரும்
திரையொன்றை

நான் அர்த்தப்ப‌டுத்திக்கொள்வேன்
உனதிந்த‌ மௌனங்களை
இருள் கவியும் வானமொன்றில்
மிளிரும் வெண் மின்னலெனவோ
அல்லது
சிறு கல்பட்டு உடைந்த
கண்ணாடி குளத்தின் குறு அலைகளெனவோ.

வெகுதினங்களுக்கு பிறகு
இன்று வயல்வெளியில் நடக்கையில் காண்கிறேன்

அருக‌ருகே தொங்க‌விட‌ப்பட்டும்
எதுவும் பேசிக்கொள்வதில்லை
இரு சோள‌க்காட்டு பொம்மைகள்

நம்மை போலவே
அவற்றிற்குள்ளுமிருக்கலாம்
சொல்லாது அமிழ்ந்துபோன
வெறுமையின் வார்த்தைகள்

யாதொரு செய்தியும்
இல்லாது கைவிரிக்க
சலிப்புடன் நகர்ந்துவிட்டன
மாலையின் மேகங்கள்

உணர்த்த முடியாத மொழிகள்
தடுமாறி விழும் இப்பொழுதுகளில்
மெல்ல தன் வண்ணங்களை இழக்கின்றது
எனதிந்த வாழ்க்கை.

Tuesday, March 24, 2009

.......................

சன்னலோரப் பயணங்களில்
சன்னலுக்கு வெளியே
மென்காற்றோடு காற்றாக
மேலும் கீழும்
அலைபாயும் விரல்களை

மழைத்துளிகளை
வாயிலேந்தும் முகங்களை

எத்துனை முறைச் சொல்லிக்கொடுத்தும்
செருப்பை மாற்றிப்போடும் கால்களை

இரு சக்கர வாகனங்களில்
பிடித்துக்கொள்ளும்படி பின்னே அமர வைக்கப்படுகையில்
எட்டாது எட்டாது நீளூம் கைகளை

இமைகளை மடித்து
மழலைகளை அச்சமுறச்செய்வதாக நினைத்து
புன்னகைக்கச் செய்பவர்களை

எனக்குத் தெரியும்

இன்னும் பணம் கட்டாததால்
பெற்றோரை அழைத்து வரும்படி
வகுப்பறைகளை விட்டு வெளியேற்றப்படும் உடல்களை

பொன்னகை இல்லாத காரண‌த்தினால்
விழாக்களைப் புறக்கணித்து
வீட்டிற்குள் பதுங்கும் அம்மாக்களை

வந்த இடத்தில்
ஆடம்பரமான உணவு கிடைக்க நேர்கையில்
வீட்டை நினைத்துக்கொள்ளும் அப்பாக்களை

பயணங்களில் எதார்த்தமாக அருகருகே அமர நேர்கையில்
எனக்கும் அவளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லையென
பார்ப்போர் அறியும்வண்ணம்
கால்களையோ முகத்தையோ திருப்பிக்கொள்ளும் திருமண‌மானவளை

இந்த பேருந்து எங்குப் போகும்
எங்குப் போகுமென
நிறுத்ததில் வருவோர் போவோரிடமெல்லாம்
கேட்டபடியிருக்கும் எழுத்தறிவில்லா முதியவர்களை

இரயில் பயணங்களில்
முன்பதிவில்லாதப் பெட்டிகளில்
பயணம் செய்ய நேர்கையில்
உட்கார இருக்கைகளிருந்தும் தவிர்த்து
கீழோ கழிவறைக்கருகிலோ அமர்ந்துகொள்ளும் வறியவர்களை

எனக்குத் தெரியும்
எளிய மனிதர்களை
அவர்க‌ளுக்கு கிடைக்கப்போகும் நீதியை

ஒப்பிட்டுப் பார்த்து
ஒப்பிட்டுப் பார்த்து
வருத்தங்கொள்ளும் பிஞ்சு மனங்களை

மேலும்
எத்துனை எத்துனை அவசரமிருந்தும்
ஆள் நடமாட்டம் நிறைந்தச் சாலையோரங்களில்
சிறுநீர் கழிக்க இயலாது தினறும் இந்த நகரத்துப் பெண்களை

Tuesday, March 17, 2009

ம‌ழைக் குறிப்புக‌ள் ‍‍- 3

மெதுவாய் நகர்ந்து
சன்னல் வழிக் காண்கையில்
இசையாய் கரைந்துக்கொண்டிருக்கின்றது
இம்மாலை நேரத்து மழை

க‌ம்பிக‌ளில் ஒளிர்ந்து ஒழுகும்
அத‌ன் துளிக‌ள் உருவாக்குகின்ற‌ன‌
இப்பிர‌ப‌ஞ்ச‌த்தையே சிலிர்க்கச்செய்யும்
அதிர்வான உற்சாக‌மொன்றை

குளிருமென‌
சற்று தயக்கத்தோடு
எந்த நீட்டியக் கைகளில்
சிதறுகின்றன ஒருநூறு நட்சத்திரங்கள்

மழைக்கு பிணக்கியவாறு
அறை நுழைந்த இரு வெண் புறாக்களும்
பாதி ந‌னைந்த நாய்க்குட்டியும்
என்னோடிருக்கின்றன

ம‌ழைப் ப‌ற‌வைக‌ளின்
கானத்தை கேட்க
இப்பொழுதுதான் வாய்த்திருகிறது போல

நான் த‌னித்திருக்கிறேன்
நான் இய‌ற்கையோடிருக்கிறேன்
இருந்தும்

ஏனோ
மனம் எதிர்பார்கிறது
இத்தருணத்தில்
உனதருகாமையை
உனது இதமான நெருக்கத்தை

வழியனுப்ப மனமின்றி
வாசலில் நின்றிருந்த வேளை
இம்மழையும் விலகிப்போகிறது
எவ்வித முன்னறிவிப்புமின்றி.

- நன்றி உயிரோசை

Monday, March 2, 2009

பிரிவின் பிந்தைய கணங்கள்

கதவிடுக்கின்வழிக் கசியும்
இந்நாளின் புது வெளிச்சங்கள்
சொல்ல விழைந்த‌ ஏதோ ஒன்றையும்
நிராகரித்து விட்ட‌ன
பெருகுமென‌து மௌனங்க‌ள்

என்னைவிடவும் அமைதியாக
இருக்கி்றது இந்த அறை

கதவுகள் திறந்தபடியிருந்தும்
யாதொரு புதுமையும் நிகழ்ந்துவிடவில்லை

நிர்பந்தங்களேதுமின்றி
தொடருமிந்த‌ தனிமையில்
வலிமிகுந்து சரிகின்றன
அநாவசியமாகிவிட்ட எனது உணர்வுகள்

தயார்படுத்திக் கொள்ள விழைகிறேன்
உனது பிரிவை ஈடுசெய்யும்
ஆதூரமிக்கதொரு தருணத்தை.

என்றாலும்கூட‌

ஆறுத‌ல‌ற்று விம்மி அழுத
நேற்றைய இரவை சற்றும்
மொழிபெய‌ர்க்க முடியாமல்
தோல்வியைத் தழுவுகின்றன
இப்பகல் பொழுதுகள்.

- நன்றி உயிர்மை மற்றும் திண்ணை.