Wednesday, August 5, 2009

சிக‌ப்பு ந‌ட்ச‌த்திர‌ம்

நாட்கள் பல கழித்து
மனமிள‌கும் மெல்லிய குரலுடன்
ஆரம்பிக்கிறாய் தொலைபேசியில் ஓர் உரையாடலை
கடந்தமுறை
ஏற்பட்ட மனக்கசப்பை
புரித‌லில் ஏற்ப‌ட்ட‌ இடைவெளியை
மறக்கச்செய்யதாக இருக்கின்றது உன் பேச்சு
வசீகரிக்கும் வார்த்தைகள்
சுவடுகளேதுமின்றி
மெல்லக் கரையச் செய்கின்றன
என் நெஞ்சை
துளிர்த்து வழியுமுன் பிரியங்கள்
இமைகளை மூடி மென்மையாக‌
ம‌யிலிற‌கால் முக‌ம் கோதுகின்றன
என் கோபங்களையெல்லாம்
எளிதில் களைய‌ச் செய்யும்
த‌ந்திர‌ங்க‌ள் தெரிந்திருகின்றது உன் குரலுக்கு
ஆனாலும்
விட்ட‌ இட‌த்திலேயே
தொட‌ங்க விரும்புகிற‌தென் ம‌ன‌ம்
ஆம் தேவை எனக்கிருகின்றது
பேசியே ஆக‌ வேண்டும்
ந‌ம‌க்கிடையேயான‌ புரிதலை
சூழ்நிலைகளில் நேர்ந்த ம‌ன‌க் க‌சப்புகளை
முன்னெப்போதும் சொல்லிக்கொள்ளாத நமது புகார்களை
வலியுடனான‌ இருத்தலை
என‌திந்த‌ நீண்ட‌ த‌னிமையை
உனது நினைவுகளை நிறுத்தும் வழியொன்றை
இன்ன பிற‌ ப‌ற்றியும்
உள்ளுக்குள்ள‌ கோபங்களெல்லாம் கிளர்ந்தெளச்செய்யும் வகையில்.
இனி உன‌த‌ன்பு தேவையில்லையென‌ நீயும்
இனி எனை எப்பொழுதும் தொட‌ர்புகொள்ளாதேவென‌ நானும்
பேசிக்கொண்ட பின்
தொலைபேசியை அணைத்து தூர எறிந்தேன்
ப‌டுக்கையை விரித்து
மொட்டை மாடியில் படுக்க
எனைச் சூழ்கிறது
அதே வானம்
நேற்றைவிட சற்றே வ‌ள‌ர்ந்த‌ நில‌வு
ஆடை தழுவும் தென்றல்
எங்கோ போகும் வவ்வால்கள்
தூர‌த்து தெருநாயின் ஊளை
கொஞ்ச‌ம் ந‌ட்ச‌த்திர‌ங்கள்
மற்றும் வெறுமைகள் சிலவும்.
நேற்றிரவு வானை
நீங்க‌ள் ச‌ற்று உற்று நோக்கியிருந்தால்
க‌ண்டிருக்க‌லாம்
தீராத‌ கோப‌ங்க‌ளுட‌ன் க‌ன‌ன்றுகொண்டிருந்த‌
சிக‌ப்பு ந‌ட்ச‌த்திர‌மொன்றையும்.

3 comments:

யாத்ரா said...

சிகப்பு நட்சத்திரம் மிகவும் பிடித்திருக்கிறது.

கவிதையில் பல இடங்களை மிகவும் ரசித்தேன்.

//என் கோபங்களையெல்லாம்
எளிதில் களைய‌ச் செய்யும்
த‌ந்திர‌ங்க‌ள் தெரிந்திருகின்றது உன் குரலுக்கு //

:)

இப்படி பல இடங்களை ரசித்தேன்.

kartin said...

நேற்றைவிட சற்றே வ‌ள‌ர்ந்த‌ நில‌வு :))

பூக்காரன் கவிதைகள் said...

yathaarththamaana unarvu ,,,, azhagaana velippaadu