Sunday, September 27, 2009

.............
பயண அவசரத்தில்
இழுத்துச் செல்லப்படும் பொழுதும்
பிடிக்காத உணவை
உதட்டில் திணிக்கும்போதும்
சிறு தவறுக்கு
வைய்யப்படும் போதும்
வேடிக்கைப் பார்க்க
சன்னலோரம்
இடம் கிடைக்காதபோதும்
ஆசையாய் கேட்ட ஒன்று
கைசேராத‌ போதும்
சினங்கொள்வதில்லை மழலைகள்.
அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்
அமைதியாக இருக்கவோ
அழகாய்ச் சிரிக்கவோ
மீறினால் அழவோ மட்டுமே.

Saturday, September 26, 2009

இருப்பு

பழகிய நிர்வாணங்களுகிடையே
மெல்லத் தொலையும் சுவாரசியங்களைப் போன்றதானது
சமயங்களில் இந்த இருப்பு.

அறிமுகங்களில் கிடைக்கும்
முதல் புன்னகையைப் போன்று இருப்பதில்லை
பின்வரும் மற்றப் புன்னகைகள் யாவும்.

நானும் முயன்றுதான் பார்க்கிறேன்
தெளிந்த நீரைக் கொத்திச்செல்லும்
தாகம் மிகுந்த பறவைகளைப் போலவோ
எவ்வித வருத்தங்களின்றி
தன்னில் ஒட்டியிருந்த இலைகளை உதிர்க்கும்
மரங்களைப் போலவோ
இயல்பாக இருப்பதற்கு
ஆனால் ஒவ்வொரு முறையும்
ஓடிச்சென்று பார்ப்பதற்கு முன்னரே
காணாமல் போய்விடுகின்றன
இந்த வானவில்கள்.

நிட்சயங்களேதுமின்றி
நீளும் இந்நாட்களில்
வருவதையெல்லாம் எப்படி அப்படியே ஏற்றுக்கொள்ள?

துயர்மிக்கச் சமாதானங்களில் உடன்பாடில்லை என‌க்கு.

இல்லாத‌ ஒன்றை
இருப்ப‌தாக‌ நினைத்துக்கொள்வ‌தில் மட்டும்
என்ன‌ இருக்கின்ற‌து?

Thursday, September 24, 2009

...........

இந்நாட்களில்
புலாலுண்ணப் பழகிக்கொண்டாலும்
ஏதோ காரணத்தால்
கூனிக் குறுகிச் சுருண்டு
இறந்துப்போகும் இறால்களையுண்ண
ஏனோ மனமிருப்பதேயில்லை.

Wednesday, September 23, 2009

அம்மா

எனக்கு நினைவிருக்கின்றது
சிலசமயம் சமைக்க பத்துரூபாய் கூட இல்லையென
அழுதிருந்திருக்கிறாள்
மல்லிப்பூச் சூடி
செவ்வானம் இருளும்வரை
வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருக்கும்
அப்பாவின் வரவெண்ணி வாசலில் காத்திருந்திருக்கிறாள்
கொஞ்சம் மனமிளகியவள்
கொஞ்சம் கோபக்காரியும்கூட
தண்ணீருக்காக தெருச்சண்டைப் போட்டு பார்த்திருக்கிறேன்
அன்றாட காரியங்களில் ஈடுபட்டவாறே
இரவு பகல் பாராமல்
தையல் இயந்திரம் மிதித்திருப்பாள்
ஈரவிறகை எரியவைக்கும் முயற்சியிலும்
ஏழ்மையின் அவமதிப்புகளில்
கண்கலங்கி மனம் குமுறும் வேளைகளிலும்
இவ்வாழ்க்கையைப் பற்றி
மிகவும் அலுத்துக்கொள்வாள்
மழையில் நனைந்த அடுத்தநாள் காய்ச்சலில்
நெற்றி ஈரத்துணியும்
அவளின் தலைக்கோதலும்
எப்பொழுதாவது
அதிசயமாய் வாய்விட்டுச் சிரிப்பாள்
சமயங்களில்
மழைக்குப் பின்னரான பொழுதென 
மௌனம் கொள்வாள்
பெருமழைக்காலங்களில்
ஒழுகும் வீட்டின் ஒழுகாத மூலையோரம்
என்னையும் எனதக்காவையும்
முலையழுந்த அணைத்தபடி
அப்படியே உறங்கிப்போவாள்.

- நன்றி உயிரோசை

Monday, September 7, 2009

இர‌ண்டாம் வ‌குப்பு ஈ வ‌ழிப்போக்க‌ன்

மிச்சமின்றி
அழுதுமுடித்த ஒரு மாலை வேளையில்
க‌ட‌ற்க‌ரையிலிருந்து விடைபெறுகிறேன்
நகர்ந்து பேருந்தில்
க‌ச‌ங்கும் நெரிச‌ல்க‌ளினூடே ஏறுகையில்
ஒரு இருக்கை கிடைத்துவிட்ட‌து எனக்கேவென்று
அம‌ர்ந்துகொண்டேன்
அருகே சன்னலோரம்
வேடிக்கை பார்த்தவாறு அம‌ர்ந்திருந்தான்
சிறு பொடியன் ஒருவன்
பார்கையில் திரும்பி மிக‌ அழ‌காகப் புன்ன‌கைத்தான்
தனது ப‌ழுப்புநிறப் பிர‌காச‌மான‌ விழிகளில்
நானும் மெல்லிய கேவலினூடேப் புன்ன‌கைத்தேன்.
ஏதோ நினைவுகள் பெருக
அடங்காது வழியும் கண்ணீர்த்துளிகளை
விரல் அழுத்தித் துடைத்தப்பின்
சற்று அமைதியாகி பெய‌ரென்னவென்றேன்
அக்த‌ர் ப‌ர்வேஸ் என்றான்
தான் இரண்டாம் வகுப்பு ஈ படிப்பதாகவும்
புதுக்கோட்டையிலிருந்து
பாட்டி வீட்டிற்கு வ‌ந்திருப்ப‌தாக‌வும்
கேட்காம‌லேயே சொன்னான்
மேலும் க‌ட‌ற்க‌ரையில்
பாட்டி வாங்கி த‌ந்ததென‌ பொம்மையொன்றை
என‌க்கு காட்டினான்
ஊதாநிற‌ உடைய‌னிந்த அது
புன்ன‌கைத்த‌வாறே எனைப் பார்த்த‌து
இன்னும் பேச்சுக்கொடுக்கையில்
அழகாய்ப் பேசிக்கொண்டேயிருந்தான்.
அவனது மழலை மொழியில்
ம‌ன‌ம் சற்றே லேசாகி இருந்த‌து.
சிறிது நேரத்தில் கேள்விகளை அவன் ஆரம்பிக்க
நான் பதிலளித்தபடி இருந்தேன்.
இதற்கிடையே
ஈர‌ச்சாலையின் மஞ்சள் தெருவிள‌க்கொளியில்
இலக்கை நோக்கி விரைந்த‌ப‌டி இருந்தது எங்களின் அந்தப் பேருந்து.
ஒரு தருணத்தில்
ஏன் அழுதீர்க‌ள்
என மெல்ல கேட்ட‌வ‌னுக்கு பதிலென்ன கூற‌‌?
மனம் கனத்து மௌனமாகிவிட்டேன்.

அழுவதற்கான காரண‌ங்கள்
குழந்தைகளைப் போல
ப‌சிப்ப‌த‌ற்கும்
ப‌க்க‌த்தில் யாரும் இல்லாத‌ற்கும் ம‌ட்டும் இருந்திருந்தால்
வாழ்க்கை எவ்வ‌ள‌வு நன்றாக‌ இருந்திருக்குமென‌
முணுமுணுத்த‌வாறே வீடு திரும்பினேன்.

- நன்றி உயிரோசை