Thursday, November 26, 2009

...............வெளியூர் சென்று திரும்பிய அப்பா
தனக்கு என்ன வாங்கி வந்திருக்கிறாரென
ஆவலுடன் அவர் பையை திறந்துபார்க்கும்
சிறார்களைப் போல
எதிர்பார்த்திருக்கிறேன்.

எனது எதிர்பார்ப்புகள் மிக எளியவை.
தேவையானவையும்கூட.

மழை நின்ற சாலைகளில்
வாகன‌ப் புகையென‌ மேலெழும்பும‌வற்றை
ந‌கரும் நதியொன்றில்
மஞ்சணத்திப்பூக்களாக்கி மெல்ல‌ விடுகின்றேன்.

த‌னிமை தளும்பும் பின்னிரவு பொழுதுகளில்
திரும்ப என்னிடமே வ‌ந்துவிடுகின்றன
வாடி கசங்கியப் பூக்களாய்
காலி ம‌துக்கோப்பைக‌ளாய்
அல்லது சிதறிய க‌ண்ணாடித் துண்டுக‌ளாய்.

மனம் ஒடுங்கி மீளும்
உறக்கமற்ற‌ இக்க‌ண‌ங்களில்
ஏதோ ஏமாற்றமொன்று என்மீதேறி இழைய
வேறேதும் செய்வதற்கில்லை.

அமைதி கொள்கிறேன்.

ந‌ம்பிக்கையான‌ப் புன்னகையொன்றில்
முகிழ்ந்திருக்கும் அர்த்தங்கள் சிதைந்து போக
இயல்பாய் நீளுமிவ்விரவு
வேண்டுமானால் உங்களுடைய‌தாக‌ இருக்க‌லாம்
என்னுடைய‌தல்ல‌.

- நன்றி உயிரோசை

Tuesday, November 24, 2009

...............

பள்ளி ஆண்டு விழாவில்
"அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்"
பாடல் இனிதே துவ‌ங்கியது

 
விழாக்கூட்ட‌த்திலிருந்த
பெரும்பாலோனோர் முன்வ‌ரிசை
சிறுமிகளின் ஆட்ட‌த்தை ர‌சித்துக்கிட‌க்கையில்
நான் ம‌ட்டும் க‌டைசி வ‌ரிசையில்
ஆடிக்கொண்டிருந்த அவளின் அசைவுகளை
இமைகொட்டாது வெறித்திருந்தேன்

பாட‌ல் முடிந்த‌தும் நெருங்கிய‌வ‌ள்
முன்னெப்போதும் பார்த்திராத‌ ஒரு புன்ன‌கையுட‌ன் 
மூச்சு வாங்கியபடிக் கேட்டாள்
எப்படி இருந்ததென‌

ந‌ன்றாக‌ இருந்த‌தென‌
ப‌திலுக்குப் புன்ன‌கைத்தேன்

பின்ன‌ர் இருவ‌ரும்
புத்தகப்பையைச் சுமந்துகொண்டு
அப்பொன்னிற‌ ஒளியில் வீடு திரும்பினோம்.

Monday, November 23, 2009

.......

மிகத் தேவையான ஒரு சமயத்தில்
தருவதாய்ச் சொன்னாய்.
கிடைக்குமா கிடைக்காதோவென்ப‌தில்
நிச்ச‌ய‌ங்களேதுமில்லையெனினும்
இப்போதைக்கு
உனதிந்த‌ வார்த்தைக‌ளே போதுமான‌தாக இருக்கின்ற‌து

- நன்றி கல்கி வார இதழ்

Monday, November 16, 2009

.....................

புல்வெளியில் மாடு மேய்த்திருக்கும்போதுதான்
முதலில் கண்டேன் கிராமப் புறச்சாலையொன்றில்
நகர்ந்த ஒற்றை வெண்ணிற காரை
அப்பொழுது வெறுமென
வேடிக்கை மட்டும் பார்த்திருந்தேன்.
மற்றொருமுறை அது நிகழ்கையில்
துரத்தி ஓடித் தொட முடியாமல்
மூச்சிரைக்க நின்றேன்.
செங்களில் கார் செய்து மணலில் ஓட்டுவது
கைகளை ஸ்டேரிங்காகவும்
கால்களைச் சக்கரங்களாகவும் பாவனை செய்து
தெருக்களில் ஒலி எழுப்பி ஓடுவது
திருவிழாவில் அம்மாவிடம் அடம்பிடித்து வாங்கிய
நீலநிற‌ பிளாஸ்டிக் காரென
பின்னாட்களில் கார்கள் மீதான மோகம்
அதிகமாகியே இருந்தது.
பெரிய‌வ‌னாகிய‌தும் என்ன‌வாக‌ வ‌ருவாய‌ன‌
கேட்ட கேள்விக்கு நா கார் ஓட்ட‌ போறேனென
சொல்லித் திரிந்த‌தை
இப்போதும் அப்பாவிட‌ம் சொல்லிச் சிரித்திருப்பாள் அம்மா.
நகரத்திற்கு பெற்றோருடன் திரைப்படத்திற்கு செல்கையில்
வண்ண வண்ணமாய் நகரும்
பல கார்களை வெகுளியாய்ப் பராக்கு பார்த்து
தொலைந்து திரும்பிய கதைக்கூட உண்டு.
முதல் முறை ராதா வீட்டு காரில்
பயணம் செய்கையில் அடைந்த பூரிப்பும்
சன்னல் வழி தலை எட்டி வேடிக்கைப் பார்க்கையில்
புன்னகைத்து மகிழ்ந்த நிமிடங்களும்
இன்னமும் மீதமிருக்கின்றன.
இப்பொழுது கார்களென்றால்
நினைவிற்கு வருவது ஆடம்பரமோ
அல்லது செல்வந்தர்களுக்கு மட்டுமேயானதெனவோ
அவ்வளவே
இம்மாலையில்
கைகளை ஸ்டேரிங்காகவும்
கால்களை சக்கரங்களாகவும் பாவனை செய்து
தெருக்களில் ஒலி எழுப்பி ஓடுமொரு
சிறுவனைப் பார்க்கையில் நினைத்துக்கொள்கிறேன்
கார்கள் மீதான மோகம் தொலைந்துபோக
அவனுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகலாமென‌

Tuesday, November 3, 2009

..........

ஆயிரமுறை உடலடித்தும்
சிறிதும் சிலிர்க்கச் செய்யவேயில்லை
மொட்டை மாடி தரையில்
முகங்கொடுத்து அழுதிருக்கையில்
ஓயாது பெய்து தீர்ந்த நேற்றிரவு மழை.

- நன்றி உயிரோசை