Wednesday, December 30, 2009

நீரான‌து

கைகளில் அள்ளித் தெளிக்கையில்
உடைந்து சிதறுவனவாய்
மென்சாரல் மழையில் தூர்வனவாய்
அல‌ம்பிய கையை உயர்த்தி பிடிக்கும்
சிறுமியின் விரல் நழுவி சொட்டுவனவாய்
மழைக் கண்ணாடிகளில் வழிவனவாய்
வெளிச்சத்தை பிரதிபலிக்கையில் ஒளிர்வனவாய்
தேங்குவனவாய் ஓடுவனவாய்
அடை மழையென‌ பொழிவ‌ன‌வாய்
எந்நிற‌மாயினும் அந்நிற‌மாய்
இடத்திற்கு தகுந்தாற்போல்
மாற்ற‌ங்கொள்கின்ற‌து இந்த நீரான‌து.

வெகுநேரம்
மூடியக் கதவொன்றைப் பார்த்திருந்து
மெல்ல திரும்பும் என்னைப்போல‌ல்ல.
- நன்றி உயிரோசை

Friday, December 18, 2009

பயணக் குறிப்புகள் - வாழச்சால்


தெளிந்த ஓடையில் உதிர்ந்து விழுந்த
மஞ்சள் நிற இலைகளிரண்டு
மீன்களாகி மறைகின்றன.
புல் நிறைந்த ப‌சும் நதிக்க‌ரையினிலே
சிதறிக்கிட‌கின்ற‌ன‌ கொஞ்ச‌ம் கூழாங்க‌ற்கள்.
வ‌ளைந்த‌ சாலைகளின் ஓரம்
வில‌கி நிற்கும் உய‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ளின் மேல்
மோக‌ம் கொள்கின்ற‌ன‌ ப‌னிமேகக்கூட்ட‌‌ங்கள்.
எதையுமே பொருட்படுத்தாமல்
வண்ணப்பூக்களைக் கூடையில் நிறைத்து
சாலையைக் கடக்கிறாள் புன்னகையின் சிறுமியொருவ‌ள்.
நீண்டு பரவி கிடக்குமந்த சோழையாற்று ஏரியை
அடர்மழைத்துளிகள் சத்தமிட்டுத் துளையிட
சலசலத்து நிற்காம‌ல் ஓடிக்கொண்டேயிருக்கிற‌து
சாலக்குடி ஆறு.
வால்பாறையை நோக்கி விரையும்
வாகன சக்கரங்கள் அனைத்திலும் சிக்கித் தெறிக்கும்
குளிர்ந்த‌ நீர்த்துளிகளிலேதுமில்லை
வ‌ன்மையின் முகமெதுவும்.

மனிதர்கள் நடமாட்டம் அதிகமில்லாமல்
செழித்த அடர்வனங்களுடன்
இயற்கை இங்கு
இயற்கையாகவே இருகின்றது.

தழுவும் ஈரக்காற்றில் உடல் குளிருகையில்
ரோபெர்டா ஃப்ளாகின் வசீகர குரலில்
எங்கோ ஒலிக்கும் அப்பாடல்
உணர்வுகளை மெல்ல‌ வருடி
ஏதோ ஒருவகை இதமெனப் பரவ
ச‌ட்டென‌ ஒரு ப‌ற‌வையாகி உயரே ப‌ற‌ந்து
சிலிர்த்துச் சித‌றுகிறேன்
இப்பிர‌ப‌ஞ்ச‌மெங்கும்.

- ந‌ன்றி அக‌நாழிகை

Monday, December 14, 2009

அவ‌ர்க‌ளுக்கு தெரியாது

கண்ட‌வுடனே புறக்குறைகளைச் சுட்டும்
அற்பமனிதர்களைக் கடந்துப்போகையில்
ஒரு சலனமும் இருப்பதில்லை

அவ‌ர்க‌ளால் என‌க்கு எவ்விதப் பயனுமில்லை
அவ‌ர்க‌ளுக்காக‌ ஒரு புன்ன‌கையைச்
செல‌விடுவ‌தில் கூட‌ என‌க்கு விருப்பமேதுமில்லை

அவ‌ர்க‌ளிட‌ம் பேசுவ‌தைவிட‌
சும்மாவே இருக்க‌லாம் என்ப‌துபோன்றதான
என் ம‌ன‌நிலையை மாற்றியமைத்த‌து
அவ‌ர்க‌ளின் வ‌ஞ்ச‌க‌மானப் பேச்சுக்கள்தானே

அவ‌ர்க‌ளுக்கென்னத் தெரியும்
எஸ‌ன்சிய‌ல் ட்ரெம‌ர் வியாதியைப் ப‌ற்றியோ
சின்ன‌ஞ்சிறு வ‌ய‌தில்
உட‌லெங்கும் சூடிட‌ப்ப‌ட்ட‌தையோ
யாருமில்லாத தனியறையில் அழுதிருக்கையில்
ஒரு பிரிய‌மான‌ தொடுத‌லுகாக‌ ஏங்கிய‌தையோ

என்னத் தெரியும் அவ‌ர்க‌ளுக்கு

அவ‌ர்க‌ளால் என‌க்கு எவ்விதப் ப‌ய‌ன‌முமில்லை
அவ‌ர்க‌ளுக்காக‌ ஒரு புன்ன‌கையை
செல‌விடுவ‌தில் கூட‌ என‌க்கு விருப்பமேதுமில்லை.

Saturday, December 5, 2009

மீளாதவை

சிறு வயது மழைக்காலங்களில்
மிக இனிமையான அந்த ஓசைக்காக காத்திருப்பேன்
முற்றத்து சன்னலருகே.

எனது எதிர்பார்ப்புகளினூடே
சன்னமாய்த் தூரி
இலைகளில் ஒட்டாது நழுவி
என் வீட்டுக் கூரைகளில் வழிந்து
வீதிகளில் ஓடுமதன் ஓசையை
இனமறியா புன்னகையொன்றுடன்
பார்த்திருப்பேன் அக்காவுடன்.

மழை விட்ட நேரத்தில்
சாலைப் பள்ளங்களில் தேங்கிய
மீத மழையில் உற்சாகமாய் குதித்து களித்திருப்பேன்
நண்பர்களுடன்

குடை பிடித்து பள்ளிச் செல்கையில்
குமிழிகளுகிடையே காகித கப்பல் விடுகையில்
திட்டியபடி அம்மா தலை துவட்டுகையில்
விரல்நீட்டி வானவில் பார்க்கையில்
பாசி படர்ந்த சுவரருகே நடக்கையில்
வெள்ளை நட்சத்திரங்களாய் கம்பியில்
தொங்கும் மழைத்துளிகளைத் தொடுகையில்
ஒரு ஈரம்
ஒரு சிலிர்ப்புடனே
நகரும் அந்நாட்கள்

எங்கு போயின அந்நாட்களெல்லாம்?

உள்ளுக்குள் அழுதிருக்கையிலும்
துளி புன்னகையொன்றை இதழோரம் ஒட்டிக்கொள்ளச்செய்யும்
இக்காலங்களிலும் வருகின்றன மழைக்காலங்கள்.
பால்யத்திலிருந்தே என்னுள் முழுவதும் நிறைந்திருந்த
அதன் வசீகரத்தில் மிச்சங்களேதுமில்லாமல்.

- ந‌ன்றி உயிரோசை