Thursday, December 30, 2010

இம்மழைக்காலத்திலும் உதிர்ந்துவிழும் இலைகள்

எல்லாமும் விலகிப்போய்விட்டதென
உணருமிந்த‌ வேளையில்
குறையவேயில்லை இறுக்கம்

எவ்வ‌ளவு காண‌லாக‌ இருக்கின்ற‌ன‌
நீரில் ப‌டியும் பிம்ப‌ங்க‌ள‌னைத்தும்

இவ்வுலகின் ஏதோவொரு மூலையில்
உயர்ந்த தென்னைமரங்களுக்கும் பசும்வயல் மலைகளுக்குமிடையேயான
ஆளற்ற சாலையில் மிதிவண்டியுடன் காற்றைத் தழுவினாலென்ன‌
ஆழமான‌ நதியொன்றில் ஒரு மீனெனவோ
அட‌ர்ந்து பரவிய‌‌ இருளில் ஒரு ஒளியென‌வோ
பாய்ந்து ஊடுருவினாலென்ன

அல்லது குளிர்ந்து கொட்டுமிந்த ம‌ழையில்
எல்லாவற்றையும் மற‌ந்து நனைதல்

இல்லை என்னைவிட்டு
முழுவதும் நான் வெளியேறிவிட்டால்தானென்ன

தெரியவேயில்லை

எதையோ கேட்டுக் கிடைக்கப்பெறாத‌ சிறுவனின் பிணக்கத்தைப் போல‌
எதிர்கொள்ள‌ முடியாம‌ல் நிற்கிறேன்
சிறகு முளைந்ததும் பறந்துவிடும்
இளம் பறவைகளின் ய‌தார்த்த‌த்தையொத்த‌ விடைபெறுத‌‌ல்களை.

போகிற போக்கில் மீட்டி விட‌ப்படும் க‌ம்பியின் அதிர்வ‌லைக‌ள்
அதிர்ந்த‌டங்குவதேயில்லை என்னுள்
இன்ன‌மும் கூட.

Saturday, September 11, 2010

இரு ப‌டுக்கைக‌ளும் ஒரு மௌன‌மும்

ஏதாவதொரு வகையில்
நம்மைப் பயன்படுத்திக்கொள்ள மட்டும்தான இந்த‌ உறவுகள்
தீரவே தீராத குழப்பங்களுடன்
அமர்ந்திருக்குமொரு பயண‌த்தில்
எதிரே எதற்கோ புன்னகைக்கின்றனர்
சில மல்லிகைப்பெண்கள்
வெயிலின் தாக்க‌த்தைக் குறைத்து
சுக‌மாக‌த் த‌ழுவுகின்றது காற்று
பேசிக்கொள்ள‌ எதுவுமே இல்லையெனினும்
அருக‌ருகே நாம் ப‌ய‌ணிக்குமிந்த‌ப் ப‌ய‌ண‌ம்
ஏற்ப‌டுத்துகின்ற‌து ப‌த‌ற்ற‌மிக்கதொரு உண‌ர்வை

ப‌ய‌ண‌ங்க‌ளில் உற‌ங்கிப்போகும்
குழ‌ந்தைகள் ஏன் எளிதாக்க முயல்கின்ற‌ன‌
இந்த‌ப் பொழுதை
நமதிந்த ப‌ய‌ண‌த்தை

சன்னல் வழியே ர‌ம்ய‌மான‌ காட்சியொன்றைக் க‌ட‌க்கையில்
முன்னொருபோதும் பகிராத ஒரு குறிப்பை
எதார்த்தமாக மோதிக்கொள்ளும் சிறு தொடுதலின் வெப்பத்தில்
சொல்லிவிட முயல்கிறேன்.
ஒரு இடைவெளி மௌனத்தின் பின்
பெருகும் வியர்வையைத் துடைத்தபடிச் சொல்கிறாய்
கொஞ்சம் தள்ளி அமரென‌.

காற்றினில்‌ கலைய துவங்குகின்ற‌ன‌ மேக‌ங்க‌ள்.

Monday, August 23, 2010

ஞாயிற்றுக்கிழமைகள்

ஞாயிற்றுக்கிழமையானால்
கூட்டப்படும் பக்கத்துக் கிராமச் சந்தையில்
எனது பாட்டி நறுமணப் பொருட்களை விற்று வந்தாள்.
ஞாயிறன்று விடுமுறை நாளானதால்
தன்னுடன் துணைக்கு வருமாறு எனை
ஒவ்வொரு முறையும் அழைப்பாள்.
நண்பர்களுடன் விளையாடுவதை விட்டு விட்டு
போக மனமில்லாமல்
சலித்துக்கொண்டே நானும் போவேன்.
பனைமரங்கள் உயர்ந்து நிற்கும்
புறச்சாலையை மெல்ல மெல்ல நடந்து கடந்து அடைவோம்
பக்கத்து கிராமத்தை.
ஏனோ எத்தனையோ முறை சொல்லியும்
பொருள் மூட்டையை அவளே சுமந்து வந்தாள்.
வழியெங்கும் வண்ணத்து பூச்சிகளைத் துரத்திக்கொண்டும்
வண்ணப் பூக்களை சேகரித்துக்கொண்டும்
தாமதிக்கும் நான் ஓடிச்சென்று
அவளுடன் இணைந்துகொள்வேன் ஒவ்வொரு முறையும்.
எந்த ஒரு உதவியும் செய்யாதபோதும்
நான் அவளுடன் வருவது
அவளுக்கு மகிழ்ச்சியையே அளித்திருக்கின்றது.
சேகரித்த பூக்களை அவளிடம் தரும்போது மட்டும்
புன்னகைத்துக்கொள்வாள்.
சந்தையை அடைந்ததும்
உடன் கொணர்ந்த கோணிப்பையை விரித்து
பொருட்களை வரிசையாக அடுக்குவாள்.
விற்பனையில் அவள் மும்முரமாகயிருக்கையில்
நான் பொட்டலம் கட்டப் பயன்படும்
பழைய புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பேன்.
விற்பனை முடிந்ததும்
நான் விரல் நீட்டும் பழங்களையும் திண்பன்டங்களையும்
வாங்கிக் கொடுத்து என்னை மகிழ்விப்பாள்.
பின்னர் இருவரும்
பொடி நடையாக வீடு திரும்புவோம்.
பால்யத்தின் பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகள்
இதுபோலதான் நகர்ந்தன.
ஒரு கடுமையான வெயில் நாளொன்றில்
காலை முதல் இருள் சூழும் வரை அமர்ந்திருந்தும்
கொணர்ந்த‌பொருட்களில்
ஒன்று கூட விற்கப்படவேயில்லை.
மிக நிசப்தமாக வீடு திரும்பினோம்.
அன்று அவள் எதுவும் வாங்கிக் கொடுக்கவேயில்லை.
நானும் எதுவும் கேட்கவேயில்லை.

Monday, August 16, 2010

ஒரு மழைநாளும் திங்கட்கிழமையும்

மனம் கசந்து உறக்கமின்றி நீளுமிந்த
தொலைதூர இரவுப் பயணத்தில்
எல்லோரை காட்டிலும் மிக‌ ஆறுதலாக
எனை ஏந்தி இருக்கின்றது இந்த இருக்கை

இந்நேரத்தில் வானொலியில் வழியுமொரு குரல்
அழுத்தமாக மீட்டுகின்றது
எஞ்சிய எனதுயிரை வ‌லியை.

இன்றைய மழைக்காற்றிலில்லை எந்த ஒரு குளுமையும்.

பெருகும் மழையில் ஓயாது அலைக்கழிக்கின்றது
கண்ணாடியில் மழைத்துடைப்பான்.

சட்டென நிகழ்ந்துவிட்டது
ஒரு மரணம்.
மீளவே முடிய‌வில்லை.
இனி ஒருபோதும் காணக் கிடைக்காது அதுபோலொரு புன்னகை.
எந்தவொரு குரலும் இருக்கப் போவதில்லை அந்த‌ வசீகரத்துடன்.

என்னெதிரே இன்மையொன்று மிதக்கையில்
உனை நினைத்துக்கொள்கிறேன்.

தூரத்து வெளிச்சங்கள்
எதையோ நினைவூட்டி விலகுகின்றன.

இரு குறிப்புகள்

1.

சில இரவுகளில்
அழகாய் ஒளிர்கிறதெனவும்
கீற்று போல மின்னுகிறதெனவும்
விரல் நீட்டி ரசிக்கின்றீர்கள்
குழந்தைகளிடத்தில்
நண்பர்களிடத்தில்
காதலரிடத்தில்
சமயங்களில் மற்றவர்களிடத்திலும் கூட.

பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்.


2.

சாலையில் அடிபட்டு இறந்த விலங்கொன்று
பெரும் நாற்றமெடுத்து வெளிப்படுத்துகின்றது
தனக்கு நேர்ந்த அவலத்தை
அதன் மரணத்தை.
சில எளிய மனிதர்களால்தான்
இயலவேயில்லை.

Wednesday, June 30, 2010

காரணங்களறிதல்

காற்றில்
மெல்ல விழுகின்றது
ஒரு இலை.
உதிர்க்கப்பட்டதா
உதிர்ந்துகொண்டதா
என்பதறியாமல்
எதைக் குறைச் சொல்வது?

- நன்றி உயிரோசை

நெஞ்சோடு கிளர்தலில்

மதிய வேளைகளில்
சக மாணவர்கள் உணவுண்பதை
வெறுமனே வேடிக்கை பார்த்திருந்திருக்கையிலெல்லாம்
எழுந்ததேயில்லை
எப்போதும் சமைத்துக் கொடுத்திட‌ இயலாத
அம்மா மீது வருத்தங்களேதும்

எத்தனையோ முறை கேட்டும்
கிடைத்திடாத ஒன்றென‌
சைக்கிளை நினைவு கூர்கையில்
இல்லை
அப்பா மீது கோபங்களேதும்

கிழிந்த சட்டையால்
இகழ‌ப்பட்ட‌போதெல்லாம் கூட
எவ்வித பிரக்ஞையுமின்றி
மௌனம் காத்திருந்திருக்கிறேன்

ஒப்பீடுகளற்ற‌ பின்னாட்களில்
பழகியிருந்தன‌
யாவும்.

எப்போதும்
அழித்தகற்றவியலாத வலிகளை
மெல்ல‌ கிளர்ந்தெழச் செய்யும்
இம்மாலையில்
தெரிந்திருக்கின்றது
முகங்களுக்கு எதிராக
எங்கனம் பேச வேண்டுமென்பதும்
எவ்வளவு புன்னகைக்க வேண்டுமென்பதும்.

- நன்றி உயிரோசை

Tuesday, June 15, 2010

தன்மை

தெரியவேயில்லை
ஏன் இவ்வளவு
இறுக்கம் கடின‌மென்று.
மிக மிருதுவாக தொடுகிறேன்
இல‌கி வழிகிறது இரும்பு.

- நன்றி உயிரோசை

இய‌ல்பு

எல்லா வேளைகளிலும்
இதமாக வீசுவதில்லை காற்று
சில நேரம்
புழுதியாய் கண்கலங்கச்செய்கிறது

எல்லா வேளைகளிலும்
சுகமாய்ப் படர்வதில்லை வெயில்
சில நேரம்
முகத்தில் அறைகிறது

எல்லா வேளைகளிலும்
சன்னமாய்த் தூறுவதில்லை மழை
சில நேரம்
உடலுடைகிறது

எல்லா வேளைகளிலும்
சுடரென ஒளிர்வதில்லை தீ
சில நேரம்
எல்லாவற்றையும் எரிக்கின்றது.

- நன்றி உயிரோசை

Tuesday, June 8, 2010

வெளிச்சங்களில் உதிரும் இரவு

மெலிதாகத் தளும்புகின்ற
தொட்டி நீரில் மின்னி மின்னி மிதக்கின்றன
சில வெண்ணிற ஒளிகள்

இந்தக் கோடைக்காலத்தில்
வழிதவறிப் பறக்கின்றன
சில மழைக்காலப் பறவைகள்

காற்றிலலைந்து
மெல்ல நில‌ம் சேர்கின்ற‌ன‌
சில‌ இற‌குக‌ள்

வெளிச்சங்களில் உதிரும் இரவைத்
தாங்கிப் பிடித்தலென்பது இயலாத காரியமென
கைவிட்டதொரு வேளையில்
படபடக்கின்றன
சில‌ வெளிர்நீலநிற வண்ணத்துப்பூச்சிகள்

ஏனோ
தவிர்க்கவே இயலாமல்
என்னில் படர்ந்துவிடுகின்றன
உனது நினைவுகள்
ஒவ்வொரு பொழுதுகளிலும்.

- ந‌ன்றி உயிரோசை

குறுங்கருப்பெறும்புகள்

அதிகாரத்திற்குரிய
வஞ்சகமான புன்னகையுடன்
அவற்றை நெருங்குகிறேன்
தீங்கில்லாததாய்
பரிவு கலந்திருப்பதாய்
நுனி விரலளவு
சர்க்கரைத் துகள்களை மெல்லத் தூவுகிறேன்
கிசுகிசுத்து கூட்டம் கூட்டமாய்ச் சேர்ந்தபின்
நசுக்கி உருத்தெரியாமல்
அழித்துவிட விழையுமென்னை
எப்படிதான் எதிர்கொள்ளப்போகின்றன
சிறிதாகக் கடிக்கக்கூடத் தெரியாத
இந்தக் குறுங்கருப்பெறும்புகள்.

- ந‌ன்றி உயிரோசை

Tuesday, June 1, 2010

கரிசனம்

எவ்வளவோ முயற்சித்தும்
புன்னகைக்கவே முடியாது அமர்ந்திருந்தேன்
மெல்ல‌ மார்த்தழுவிப் போனது
ஈரக்காற்றொன்று.

- ந‌ன்றி உயிரோசை

Tuesday, May 18, 2010

..................

மென்காற்றில் சுடர்கள் படபடக்க
எங்கோ சன்னமாய் உதிர்ந்து கொண்டிருக்கின்ற‌து
ஒரு பாடல்

விடைபெறும் தருணமொன்றில்
விழிகளைப் பார்த்தபடியிருக்கின்றோம்

தொடுதலின்
மெல்லிய உணர்வோ
நெருங்கி விசும்பிய‌ணைத்து
முகமெங்கும் முத்த‌மிடுதலோ
கரம் கோர்த்துப் பின் மெல்ல‌ விடுவித்த‌லோ
அல்லது வேறெந்த வகையான கட்டாயங்களோ
இல்லாத பட்சத்தில்
இனியொருபோதும் பிரிவதற்கில்லை
என்கிற உத்திரவாதத்தையாவது தருமோ
நமதிந்த சந்திப்புகள்.

- ந‌ன்றி உயிரோசை

புகைப்படங்கள்

திருமண வரவேற்பின்
புகைப்படம் எடுக்கும் நிகழ்வொன்றைப் பார்த்திருந்தேன்

பரிசுப் பொருட்களின் அளவைப் பொருத்தும்
கொணர்ந்தவர்களின் உறவைப் பொருத்தும்
நீள்கின்றன புன்னகைகள்

சிறு இமையசைவில்
சேமிக்கப்படுகின்றன எல்லாப் புகைப்படங்களும்

ஒளி நிறைந்த அவ்விடத்தில்
கடைசியாக
மிக நீண்ட தயக்கத்தின் பின்
பரிசுப் பொருளேதுமின்றி
மேடையில் ஏறிய வறிய பெண்ணொருவள்
மன‌ப்பெண்ணின் கைப்பிடித்து வாழ்த்துச்சொல்லியவாறு
வேகமாக வெளியேற‌
அவளைப் பின்தொடர்ந்த அவளின் இரு குழந்தைகள்
சில நொடிகள் கேமிராவையே ஏக்கமாய்ப் பார்த்திருந்தனர்

எந்த இமையும் அசைக்கப்படவுமில்லை
அவர்களின் எதிர்பார்ப்புகளோ
மேடையை விட்டு இறங்கிப் போவதாகயில்லை.

Monday, May 3, 2010

ஆறுதல்

அந்த மாலையில்
மனம் மிகவும் குழம்பிப்போயிருப்பதாகச்
சொன்னவனை மெல்லப் பார்த்தேன்

அலைகள் தவழ்ந்தபடியிருந்த‌ அந்தக் கடற்கரையில்
இருள் சூளும்வரை பேசிக்கொண்டேயிருந்தோம்
தாங்க முடியாத‌ துயரமொன்றைப் பகிர்கையில்
அடக்கமுடியாது
பெருங்குரலெடுத்து வாய்விட்டு அழுதவன்
எனது மடியில் படுத்தபடியே உறங்கிப்போனான்.

சின்னஞ்சிறு அசைவில்
துயில் கலைந்துவிடுவானென நினைத்து
வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தேன்

- நன்றி உயிரோசை

மீளுதல்

எந்தவித சலனங்களுமின்றி
அறுத்தெறியப்பட்ட‌து
மிக‌ உயர்ந்த‌ மரமொன்று.

எல்லாவித வலிகளுடன்
மெல்லத் துளிர்கின்றது
அதன் அடிக்கிளை நுனியொன்று.

- நன்றி உயிரோசை

Tuesday, April 20, 2010

.........

எப்பொழுதும்
யாரோ ஒருவர் இருக்கிறாரென்பது
எவ்வளவு பெரிய ஆறுதல்
மாறாக‌
எப்பொழுதும்
யாருமே இல்லையென்பது
எவ்வளவு பெரிய விடுபடல்.

- நன்றி உயிரோசை

Monday, April 19, 2010

இரவுகள் அழகானவை

அசையவிடாது
நாணலையும்
உறங்கச்செய்கிறது தென்றல்
எல்லோரும் தன்னிலை மறந்தபின்னும்
இன்னும் எரிந்துகொண்டிருக்கின்றது சிம்னி சுடர்
ஏதோவொரு நெகிழ்வில்
ஒளிர்ந்து மறைகின்றன‌
இதுவரை தீராத ஏக்கங்களின் பச்சைநிற‌ வெளிச்சங்கள்
தாழம்பூ ம‌ன‌ந்திருக்க
இம்பீரியல் புளு மதுவின் மயக்கத்தில்
மெல்ல நகர்கின்றது
கடக்கவே முடியாதென நினைத்த இந்த இரவு

துயர்களெல்லாம் ஒன்றுகூடி
நிலவென‌ மேலெழ
லொரீனா மெக்னெண்டின் எகிப்தியன் இசை
பாடலைக் கேட்டபடி இருக்கிறேன்

பின் எதையோ வெறித்த‌ப‌டியிருக்க‌
விழி இறுக்காமலேயே மீறி வழிகின்றது
நிறமற்ற இரத்தம்

முன்னெப்போதுமிருந்ததில்லை
இதயத்தில்
இவ்வளவு வலி.

என்ன இருக்கின்றது
தனிமையைப் பெருகச்செய்யும் இந்த இருளிடம்
இந்த நட்சத்திரங்களெல்லாம் யாருக்காக மின்னுகின்றன.

- ந‌ன்றி உயிரோசை

Tuesday, March 9, 2010

நீலப்பூக்கள்

மிகுந்து பசித்திருக்க‌
தெருமுனை உணவகமொன்றை முகர்ந்தப‌டி நகரும்
இந்த‌ மாலையில்
சற்றும் எதிர்பாத்திருக்கவேயில்லை
உன்னைப் பார்ப்பேனென்று

இந்த‌ மாலையில்
எவ்வ‌ள‌வு அழ‌காக‌ மிளிர்கின்ற‌துன் முக‌ம்
எவ்வ‌ள‌வு இத‌மாக‌ இருக்கின்ற‌து
உனது பார்வை
உனதிந்த‌ பேச்சு

கேட்ட‌படி இருக்கின்றேன்

பேசி பேசி பின்
சொற்க‌ள் தீர்ந்துபோய்
வெற்றிடம் பரவிய‌ க‌ண‌மொன்றில்
வின‌வுகின்றாய்
காரணந்தெரியாத எனது நிசப்த‌நிலைப் ப‌ற்றி.

"ப‌ண‌மேதுமில்ல
யாருகிட்டையும் கேட்க‌ தோன‌ல‌
சாப்பிட்டு ரெ‌ண்டு நாளாச்சி
ரொம்ப‌ ப‌சிக்குது
ஏதாவ‌து வாங்கித்தாயேனென்று"
எங்கோ வெறித்த‌படி தழும்பிய குரலில்
உதிர்த்த‌ எனது வார்த்தைக‌ளின் கன‌மறிந்து
உறைந்து போகின்றாய்
உணவகமொன்றிர்க்கு அழைத்துச்சென்று
க‌ண்க‌ல‌ங்கியபடி
தாய்மை பெருக‌ ஊட்டுகின்றாய்.

கரைந்து வழிந்த‌படி இருக்கின்றேன் நான்.

மெல்ல வேர்விட்டு கிளைத்து
விருட்ச‌மான‌ அந்த‌ இர‌வின் க‌ன‌வில்
ஏனோ பூக்க‌வேயில்லை
வழமையான‌ நீலப்பூக்கள்.

........

அவசரமேதுமில்லை
அமருங்கள்.
ப‌ற்றி எரிவது உங்கள் வீடல்ல.

Monday, March 1, 2010

கிடைத்த‌லுக்கும் கை ந‌ழுவிபோவ‌த‌ற்குமான‌ இடைவெளி

எங்கிருந்தோ வந்தபடியிருக்கின்றன
சில குரல்கள்

கெஞ்சுபவையாக
துய‌ர்மிக்க ஒலியாக
நீண்டதொரு கேவலாக
சிறிதும் எதிர்க்க வ‌லுவில்லாதவைகளாக

ஓயாத பணிகளுக்கிடையில்
காதோரம் ஒலித்தபடியே இருப்பது
சற்றே அயர்ச்சியூட்டுவதாக பேசிக்கொள்கின்ற‌ன‌ர் சில‌ர்
சில‌ரோ அவற்றை செய்திகளாக்கி
தேனீர் சுவைக்கின்ற‌ன‌ர்
வருத்தம் கொள்கின்றனர்
சில எளிய மனிதர்கள்
மற்றவர்களெல்லாம்
கேட்பதாகவோ
கவலைகொள்வதாகவோ இல்லை

இடையிடையே
கதறியபடி
குழ‌ந்தைக‌ளின் அழுகைக் குர‌லும் கேட்ப‌து
ம‌ன‌தை ஏனோ ச‌ஞ்ச‌ல‌மூட்டுகின்ற‌து
சிறு பூவொன்றைக் கிள்ளியெறியவே ம‌ன‌மில்லாத‌ நான்
வாச‌லில் சென்று சென்று பார்க்கிறேன்
யாதும் செய்வ‌த‌றியாது நிற்கிறேன்
ம‌ன‌முடைந்து ச‌லித்துக்கொள்கின்றேன்
சமயங்களில்
கண்களை மூடி இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

இப்பிர‌ப‌ஞ்ச‌மெங்கும் மிக‌க் க‌டுமையாகவே
ஒலிக்கின்ற‌ன அந்த‌ குர‌ல்கள்

இம்முறையும்
உத‌விடக் கூடிய எவ‌ரும்
கேட்பதாகவோ
கவலைகொள்வதாகவோ இல்லையென்பது
எத்தனை பெரிய அபத்தம்

மின்ன‌ல்க‌ள் கீறி மறைந்த நேற்று மாலை
க‌டைசியாய்க் கேட்ட‌து
சிதறித் தெறித்த சிக‌ப்புக் குரலொன்று.

கடந்த சில‌ மாத‌ங்க‌ளாக‌
ஒலிப்ப‌தில்லை அந்தக் குர‌ல்க‌ள்.

Tuesday, February 16, 2010

கண்ணாடியின் முன்

அம்மா அழுகையில்
காரணமறியாது தானும் அழும்
சிறுபிள்ளைகளின் மனம் போன்றவனவன்

தற்சமயம்
ம‌ழைக்கு ஏங்கி வாடிய
குறுஞ்செடியொன்றை ஒத்திருக்கிறானென
இசைப்ப‌ற‌வைக‌ளிர‌ண்டு ஊரெங்கும் சொல்லித் திரிந்த‌தை
யாரும் குறிப்பெடுக்க‌வே இல்லை

ஒரு சிறிய சந்திப்போ
ஒரு யதார்த்தமான நலம் விசாரிப்போ
அல்லது
ஒரு ஐந்து நிமிட சம்பாஷனையோ
அவனுக்கு ஆறுதலளித்திருக்கலாம் என்றாலும் கூட‌
யாதொன்றும் நிக‌ழவேயில்லை

நிலம் வெடிக்கச் செய்யும் வறண்ட கோடையொன்றில்
கடும் பாலையொன்றை தனியே கடந்து திரும்பியவனை
வெகு நாட்களுக்குப் பிறகு
நேற்றுதான் பார்க்க நேரம் கிடைத்தது

தெளிந்த நீரின் பிரவாகமாய் இருந்த
அவனது கண்களை சற்று தயக்கத்தோடு எதிர்கொண்டு
நட்சத்திரங்களின் ஓளியென மின்னும்
புன்னகைகள் சிலவற்றை நீட்டினேன்.

பெற்றுக்கொள்ளும் ஆர்வமோ
நிராகரிக்கும் தயக்கமோ ஏதுமின்றி
வெறுமென வாங்கிகொண்ட அவனிடம்
புன்னகைகள் புன்னகைகளாகவே இல்லை.

Tuesday, February 2, 2010

நீல‌ நிறத்தை அடைதலென்பது

எவ்வித‌ பிரத்யேக‌முமின்றி
கடந்தபடி இருக்கும்
இந்த தின‌ங்க‌ளில் இல்லை
பெரிதாய் யாதொரு ஈர்ப்பும்

அழுவதைக் காட்டிலும்
மௌனங்கள்
மிக‌ அழுத்தமானவையாக‌ இருக்கும்
இந்த தருணங்களில்
முணுமுணுக்க‌ ஏற்றதாக இல்லை
எந்த ஒரு பாடலும்

மிக நீண்ட காத்திருப்பின் பின்
ஒலிக்கும் இந்த வயலினின் இசை
உருவாக்கும் வலிமிகுந்த‌ உணர்வை
எதிர்கொள்ள எந்தவொரு வழியுமில்லை

எதையோ நினைத்த‌ப‌டி
எதையோ மெல்ல‌ இழ‌ந்த‌ப‌டி
நிசப்தங்கள் உடைந்து சிதறியபடி இருக்கும்
இந்த குளிகால பின்னிரவின் கீழ்
தனியே நிற்கிறேன்.

நீங்கள் நினைப்பதுபோல்
நீல‌ நிறத்தை அடைதலென்பது
அத்தனை எளிதானதாக இல்லை.

- நன்றி உயிரோசை

Monday, February 1, 2010

...................

மகிழ்ச்சியும்
மாவிலை தோரணங்களும் தொங்கும்
ஒரு திருவிழா நாளில்
முதலில் அம்மா
பிறகு அப்பா
அடுத்து பாட்டி, தாத்தாவென

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ரூபாய் ஆகிவிட்டது

இம்முறை என்னை நெருங்கினான்
ஒரு ரூபாய்த் தாவென
கை நீட்டியபடி சாதுரியமாகப் புன்னகைத்தான்
எதற்கு என்ற எனது இமையசைவை
சிறிதும் பொருட்படுத்தாமல் சட்டைப்பையில்
எனது விரல்களின் கடைசி அசைவுகள் வரை
உற்று கவனித்தவாறு இருந்தவனிடம்
ஒரு ரூபாயை நீட்டினேன்

பறித்துக்கொண்டு வேகமாக ஓடி மறைந்தவன்
கொஞ்சம் நேரம் கழித்து
ஐஸ் கேண்டியொன்றை சுவைத்தபடி
வீடு திரும்பிக்கொண்டிருந்தான்.

நம்மை போன்று சிக்கலானதல்ல குழந்தைகளின் உலகம்
மிக எளியது
அவர்களின் விருப்பங்களைப் போல‌.

- நன்றி உயிரோசை