Tuesday, February 16, 2010

கண்ணாடியின் முன்

அம்மா அழுகையில்
காரணமறியாது தானும் அழும்
சிறுபிள்ளைகளின் மனம் போன்றவனவன்

தற்சமயம்
ம‌ழைக்கு ஏங்கி வாடிய
குறுஞ்செடியொன்றை ஒத்திருக்கிறானென
இசைப்ப‌ற‌வைக‌ளிர‌ண்டு ஊரெங்கும் சொல்லித் திரிந்த‌தை
யாரும் குறிப்பெடுக்க‌வே இல்லை

ஒரு சிறிய சந்திப்போ
ஒரு யதார்த்தமான நலம் விசாரிப்போ
அல்லது
ஒரு ஐந்து நிமிட சம்பாஷனையோ
அவனுக்கு ஆறுதலளித்திருக்கலாம் என்றாலும் கூட‌
யாதொன்றும் நிக‌ழவேயில்லை

நிலம் வெடிக்கச் செய்யும் வறண்ட கோடையொன்றில்
கடும் பாலையொன்றை தனியே கடந்து திரும்பியவனை
வெகு நாட்களுக்குப் பிறகு
நேற்றுதான் பார்க்க நேரம் கிடைத்தது

தெளிந்த நீரின் பிரவாகமாய் இருந்த
அவனது கண்களை சற்று தயக்கத்தோடு எதிர்கொண்டு
நட்சத்திரங்களின் ஓளியென மின்னும்
புன்னகைகள் சிலவற்றை நீட்டினேன்.

பெற்றுக்கொள்ளும் ஆர்வமோ
நிராகரிக்கும் தயக்கமோ ஏதுமின்றி
வெறுமென வாங்கிகொண்ட அவனிடம்
புன்னகைகள் புன்னகைகளாகவே இல்லை.

Tuesday, February 2, 2010

நீல‌ நிறத்தை அடைதலென்பது

எவ்வித‌ பிரத்யேக‌முமின்றி
கடந்தபடி இருக்கும்
இந்த தின‌ங்க‌ளில் இல்லை
பெரிதாய் யாதொரு ஈர்ப்பும்

அழுவதைக் காட்டிலும்
மௌனங்கள்
மிக‌ அழுத்தமானவையாக‌ இருக்கும்
இந்த தருணங்களில்
முணுமுணுக்க‌ ஏற்றதாக இல்லை
எந்த ஒரு பாடலும்

மிக நீண்ட காத்திருப்பின் பின்
ஒலிக்கும் இந்த வயலினின் இசை
உருவாக்கும் வலிமிகுந்த‌ உணர்வை
எதிர்கொள்ள எந்தவொரு வழியுமில்லை

எதையோ நினைத்த‌ப‌டி
எதையோ மெல்ல‌ இழ‌ந்த‌ப‌டி
நிசப்தங்கள் உடைந்து சிதறியபடி இருக்கும்
இந்த குளிகால பின்னிரவின் கீழ்
தனியே நிற்கிறேன்.

நீங்கள் நினைப்பதுபோல்
நீல‌ நிறத்தை அடைதலென்பது
அத்தனை எளிதானதாக இல்லை.

- நன்றி உயிரோசை

Monday, February 1, 2010

...................

மகிழ்ச்சியும்
மாவிலை தோரணங்களும் தொங்கும்
ஒரு திருவிழா நாளில்
முதலில் அம்மா
பிறகு அப்பா
அடுத்து பாட்டி, தாத்தாவென

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ரூபாய் ஆகிவிட்டது

இம்முறை என்னை நெருங்கினான்
ஒரு ரூபாய்த் தாவென
கை நீட்டியபடி சாதுரியமாகப் புன்னகைத்தான்
எதற்கு என்ற எனது இமையசைவை
சிறிதும் பொருட்படுத்தாமல் சட்டைப்பையில்
எனது விரல்களின் கடைசி அசைவுகள் வரை
உற்று கவனித்தவாறு இருந்தவனிடம்
ஒரு ரூபாயை நீட்டினேன்

பறித்துக்கொண்டு வேகமாக ஓடி மறைந்தவன்
கொஞ்சம் நேரம் கழித்து
ஐஸ் கேண்டியொன்றை சுவைத்தபடி
வீடு திரும்பிக்கொண்டிருந்தான்.

நம்மை போன்று சிக்கலானதல்ல குழந்தைகளின் உலகம்
மிக எளியது
அவர்களின் விருப்பங்களைப் போல‌.

- நன்றி உயிரோசை