Tuesday, May 18, 2010

புகைப்படங்கள்

திருமண வரவேற்பின்
புகைப்படம் எடுக்கும் நிகழ்வொன்றைப் பார்த்திருந்தேன்

பரிசுப் பொருட்களின் அளவைப் பொருத்தும்
கொணர்ந்தவர்களின் உறவைப் பொருத்தும்
நீள்கின்றன புன்னகைகள்

சிறு இமையசைவில்
சேமிக்கப்படுகின்றன எல்லாப் புகைப்படங்களும்

ஒளி நிறைந்த அவ்விடத்தில்
கடைசியாக
மிக நீண்ட தயக்கத்தின் பின்
பரிசுப் பொருளேதுமின்றி
மேடையில் ஏறிய வறிய பெண்ணொருவள்
மன‌ப்பெண்ணின் கைப்பிடித்து வாழ்த்துச்சொல்லியவாறு
வேகமாக வெளியேற‌
அவளைப் பின்தொடர்ந்த அவளின் இரு குழந்தைகள்
சில நொடிகள் கேமிராவையே ஏக்கமாய்ப் பார்த்திருந்தனர்

எந்த இமையும் அசைக்கப்படவுமில்லை
அவர்களின் எதிர்பார்ப்புகளோ
மேடையை விட்டு இறங்கிப் போவதாகயில்லை.

5 comments:

Ramki... said...

//எந்த இமையும் அசைக்கப்படவுமில்லை
அவர்களின் எதிர்பார்ப்புகளோ
மேடையை விட்டு இறங்கிப் போவதாகயில்லை.//

:(

Senthil said...

காட்சியை மனதில் உருவகப்படுத்தி மனதை பிசைந்த வரிகள் நளன்...

நேசமித்ரன் said...

ம்ம் ரொம்ப நாளைக்கு அப்புறம் நளன்

நல்ல கவிதையோடு !

மக்கள் தளபதி said...

O..Man. This is really toughing. This is terrible one. I loved it. Superb da.

மக்கள் தளபதி said...

//குழந்தைகள்
சில நொடிகள் கேமிராவையே ஏக்கமாய்ப் பார்த்திருந்தனர்//

ரொம்ப பீல் ஆயிடுச்சு இத படிக்கும்போது.