Monday, August 23, 2010

ஞாயிற்றுக்கிழமைகள்

ஞாயிற்றுக்கிழமையானால்
கூட்டப்படும் பக்கத்துக் கிராமச் சந்தையில்
எனது பாட்டி நறுமணப் பொருட்களை விற்று வந்தாள்.
ஞாயிறன்று விடுமுறை நாளானதால்
தன்னுடன் துணைக்கு வருமாறு எனை
ஒவ்வொரு முறையும் அழைப்பாள்.
நண்பர்களுடன் விளையாடுவதை விட்டு விட்டு
போக மனமில்லாமல்
சலித்துக்கொண்டே நானும் போவேன்.
பனைமரங்கள் உயர்ந்து நிற்கும்
புறச்சாலையை மெல்ல மெல்ல நடந்து கடந்து அடைவோம்
பக்கத்து கிராமத்தை.
ஏனோ எத்தனையோ முறை சொல்லியும்
பொருள் மூட்டையை அவளே சுமந்து வந்தாள்.
வழியெங்கும் வண்ணத்து பூச்சிகளைத் துரத்திக்கொண்டும்
வண்ணப் பூக்களை சேகரித்துக்கொண்டும்
தாமதிக்கும் நான் ஓடிச்சென்று
அவளுடன் இணைந்துகொள்வேன் ஒவ்வொரு முறையும்.
எந்த ஒரு உதவியும் செய்யாதபோதும்
நான் அவளுடன் வருவது
அவளுக்கு மகிழ்ச்சியையே அளித்திருக்கின்றது.
சேகரித்த பூக்களை அவளிடம் தரும்போது மட்டும்
புன்னகைத்துக்கொள்வாள்.
சந்தையை அடைந்ததும்
உடன் கொணர்ந்த கோணிப்பையை விரித்து
பொருட்களை வரிசையாக அடுக்குவாள்.
விற்பனையில் அவள் மும்முரமாகயிருக்கையில்
நான் பொட்டலம் கட்டப் பயன்படும்
பழைய புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பேன்.
விற்பனை முடிந்ததும்
நான் விரல் நீட்டும் பழங்களையும் திண்பன்டங்களையும்
வாங்கிக் கொடுத்து என்னை மகிழ்விப்பாள்.
பின்னர் இருவரும்
பொடி நடையாக வீடு திரும்புவோம்.
பால்யத்தின் பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகள்
இதுபோலதான் நகர்ந்தன.
ஒரு கடுமையான வெயில் நாளொன்றில்
காலை முதல் இருள் சூழும் வரை அமர்ந்திருந்தும்
கொணர்ந்த‌பொருட்களில்
ஒன்று கூட விற்கப்படவேயில்லை.
மிக நிசப்தமாக வீடு திரும்பினோம்.
அன்று அவள் எதுவும் வாங்கிக் கொடுக்கவேயில்லை.
நானும் எதுவும் கேட்கவேயில்லை.

Monday, August 16, 2010

ஒரு மழைநாளும் திங்கட்கிழமையும்

மனம் கசந்து உறக்கமின்றி நீளுமிந்த
தொலைதூர இரவுப் பயணத்தில்
எல்லோரை காட்டிலும் மிக‌ ஆறுதலாக
எனை ஏந்தி இருக்கின்றது இந்த இருக்கை

இந்நேரத்தில் வானொலியில் வழியுமொரு குரல்
அழுத்தமாக மீட்டுகின்றது
எஞ்சிய எனதுயிரை வ‌லியை.

இன்றைய மழைக்காற்றிலில்லை எந்த ஒரு குளுமையும்.

பெருகும் மழையில் ஓயாது அலைக்கழிக்கின்றது
கண்ணாடியில் மழைத்துடைப்பான்.

சட்டென நிகழ்ந்துவிட்டது
ஒரு மரணம்.
மீளவே முடிய‌வில்லை.
இனி ஒருபோதும் காணக் கிடைக்காது அதுபோலொரு புன்னகை.
எந்தவொரு குரலும் இருக்கப் போவதில்லை அந்த‌ வசீகரத்துடன்.

என்னெதிரே இன்மையொன்று மிதக்கையில்
உனை நினைத்துக்கொள்கிறேன்.

தூரத்து வெளிச்சங்கள்
எதையோ நினைவூட்டி விலகுகின்றன.

இரு குறிப்புகள்

1.

சில இரவுகளில்
அழகாய் ஒளிர்கிறதெனவும்
கீற்று போல மின்னுகிறதெனவும்
விரல் நீட்டி ரசிக்கின்றீர்கள்
குழந்தைகளிடத்தில்
நண்பர்களிடத்தில்
காதலரிடத்தில்
சமயங்களில் மற்றவர்களிடத்திலும் கூட.

பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்.


2.

சாலையில் அடிபட்டு இறந்த விலங்கொன்று
பெரும் நாற்றமெடுத்து வெளிப்படுத்துகின்றது
தனக்கு நேர்ந்த அவலத்தை
அதன் மரணத்தை.
சில எளிய மனிதர்களால்தான்
இயலவேயில்லை.