Monday, December 19, 2011

குறிஞ்சிப்ப‌ண்

மிளகுக்கொடிகள் படர்ந்த முற்றத்து மரத்தடியில்
புறாக்க‌ளுக்கு தானியவிதைகளை வீசிக்கொண்டிருந்த
குறிஞ்சி நிலத் தலைவி

நாட்களுக்குப் பிறகு
மலைப்போன்ற தோள்க‌ளுடைய முல்லை நிலத் தலைவன்
குளம்பொலிகளதிர‌ குறிஞ்சி நிலம் நோக்கி
வருகிறானென்கிறக் குறிப்பை
மலைகளின் மார்புகளுக்கிடையே வழிந்து
சலசலத்தோடும் குளிரோடை நீரைக் கொத்திப்பறக்கும்
இருவாச்சிப் பறவை உணர்த்தி போக
மீளாமகிழ்வுற்று மானென துள்ளித் திரிந்தவள்
இன்றைய‌ இர‌வு விருந்தில்
அவ‌ருட‌ன் உன‌து இசையைக் கேட்க விரும்புகிறேனென்றாள்

தூசுப் ப‌டிந்த‌
யாழையெடுத்து துடைத்துத் தூய்மைப‌டுத்தினேன்

இர‌வு நோக்கி மாலை ந‌கர‌
ந‌றிமிக்க குளவி மலர்ச்சூடி
விள‌க்கொளிகளும்
செருவிளைக்கொடிகளும் நிறைந்த‌ மாட‌த்தில்
காற்று க‌லைக்கும் குள‌த்து நிலவை
விடாது வெறித்திருந்த‌ த‌லைவி
எனது வ‌ருகைய‌றிந்து திரும்பினாள்

மலைத்தேனைக் காட்டிலும்
சுவைமிக்க‌ உண‌வொன்றை செய்திருப்ப‌தாக‌வும்
அது அவருக்கு மிகப் பிடிக்குமெனச் சொல்லி
நாணம் கொண்டாள்

இந்த நடுகை காலத்தில்
காற்றில் அலைந்து அலைந்து பற்றி எரிகிறது தீ
தகிகும‌தன் வெம்மையில் குளிர்காய்ந்தபடி
காத்திருந்தோம்

நிசி தேய தேய‌
த‌லைவ‌ன் வ‌ராத‌ கார‌ண‌ம‌றியாது அவள் வ‌ருத்தங்கொள்கையில்
துயர்மிக்க‌
மழைக்காலக் குறிஞ்சிப்ப‌ண்ணை மீட்டினேன்

வெகுநேர‌ம் கேட்ட‌ப‌டியிருந்து
விழியோர‌ம் நீர்த்துளிர்த்த‌வ‌ள்
ஏன் நிறுத்திவிட்டாய்
தொடர்
நான் க‌வ‌னித்துக்கொண்டுதானிருக்கிறேனென்கையில்
அவள் கன்ன‌த்திலிருந்து நழுவித் தரையில் உடைந்து சிதறியது
ப‌கிரயியலாத‌‌வொரு முத்த‌ம்.

Wednesday, December 14, 2011

..........

ஒரு சலனமுமின்றி
வெளியேறினேன்

ஒரு கசப்பான முடிவென்பது
அத்தனை சிறப்பானதாக இருக்கிறது
முடிவற்ற கசப்பைக் காட்டிலும்

Friday, October 28, 2011

ஒரு மழைக்கால‌ வினா

வலுவாகவே வீசுகிறது காற்று

கம்பி வேலியில் மாட்டிக்கொண்ட
சிதைந்த பாலித்தீன் பையைப்போல
அலைவுறுகிறது நிலை

அத்தனை ஆழமாய் என்னுள் படர்ந்துவிட்டநிலையில்
உன்வேர்களை முழுவதும் களைந்தெறிய
முடிவாக‌ ஒரு வழியேதுமில்லையெனினும்
நேற்று என்னையும் மீறி படர்ந்துவிட்ட‌ உன் கொடிகளை
ரத்தம் சிதற சிதற வெட்டியெறிந்தேன்

எல்லோரும் இயல்பிலிருக்க
தனித்த பயணங்களில் மனம் எங்கோ போகும்

இக்கணம் இலகுவாக வீசுகிறது காற்று
ஆனந்தம்
ஒருசேர சலசலத்து
அற்புதமாக அசைகின்றன மழைக்கால மரங்கள்

பவிழம் மணக்கும்
இவ்விரவில் அருகில் யாருமில்லையெனினும்
இருக்கவே இருக்கிறது பசி
உணவகமொன்றில் உணவுப்பட்டியலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்

சிறிது நேரம் கழித்து
அருகில் நெருங்கிய சேவைப்பெண் கேட்கிறாள்
'தீர்மானித்துவிட்டீர்களா உங்களுக்கென்ன வேண்டுமென?'

இப்பொழுது வீசவேயில்லை காற்று.

Monday, August 29, 2011

நெருக்கமற்றப் பாடல்

எல்லாவற்றையும் மீறி
குறைவதேயில்லை எதிர்பார்ப்புக்கள்

சற்றுமுன் நிகழ்ந்திட்ட
கசப்பான உரையாடலொன்றின் முடிவில்
க‌ல்லிட்டப்பின் மீளும் குள‌த்தின் பாசியைப் போல‌
ந‌ம்மை சுற்றி சூழ்கிற‌தொரு மௌனம்
பெரும் மௌனம்

இறுக்கம் நிரம்பிய இவ்வேளையில்
இவ்வுல‌கின் யாரேனுமொருவர்
ஒரு ம‌ழ‌லையென‌ பாவித்து
த‌ன் மார்போடெனை அணைத்துக்கொண்டாலென்ன‌

விட்ட மழையென
த‌ய‌க்க‌ம் தளர்ந்திருந்தது மாலை
நீர் மிதக்கும் கண்களுடன்
கொஞ்சம் பேசவேண்டுமென்றேன்

நீர் தழும்பும் குவளையொன்றை வெறித்தப்பின்
அலட்சியமிக்க குரலொன்றில் நீ வெளியேறுகையில்
மிக எளிதாகவே அங்குமிங்கும் சுழ‌ன்ற‌ப‌டியிருந்த‌து
அறையின் ஒற்றை மீன்

யார் யாரோ அருகிலமர
எத்தனையோ இருக்கைகளிருந்தாலும்
ஏன் யாருமற்ற இருக்கையொன்றே என் கவனமீர்க்கின்றது

இந்த பயணமெங்கிலும்
குளிர்ந்த‌ காற்று

கடந்துபோகின்றன ப‌ட்டாம்பூச்சிக‌ள்

மண்டொலினின் இசை
அத்த‌னை இதமெனினும்
ஒரு நெருக்க‌முமற்று நேற்று பெய்த இரவின் பாடலொன்றை
வெறுமென கேட்டுக் கொண்டிருக்கிறேன்
மீண்டும் மீண்டும்.

Tuesday, July 19, 2011

..............

வெகுகால‌மாக‌ அவ்விட‌த்தில்தானிருந்தாலும்
க‌வ‌ன‌மீர்த்த‌தேயில்லை
பால்ய‌நாளொன்றில்
மாட்டிக்கொண்ட‌ என் ப‌ட்ட‌மொன்றை விடுவிக்க‌வே
முதன்முறை ஏறினேன் அத‌ன்மேல்
அத‌ன் பின்ன‌ர்
த‌ன்னிட‌த்தே தின‌மும் வ‌ர‌ச்செய்யும்
வ‌சீக‌ர‌த்தை கொண்டிருந்த‌து அந்த‌ ம‌ர‌ம்

க‌ட்டிக்கொள்ள‌ ஏதுவாக‌ இருக்கும‌த‌ன்
உய‌ர்ந்த‌ கிளையில‌ம‌ர்ந்து
க‌ண்டுக்கொண்டிருப்பேன்
தூர‌த்து வ‌ய‌ல்வெளிக‌ளை
ம‌லைக‌ளை
சின்ன‌ஞ்சிறுவென‌ மாறிப்போகும் ம‌னித‌ர்க‌ளை
கூட்டிற்குத் திரும்பும் ப‌ற‌வைகளை அதன் குஞ்சுகளை
நிற‌ம் மாறும் அந்தியை
அதன் ஒளியை

அப்போது நினைத்துக்கொள்வேன்
இவ்வுல‌கின் மிக‌ உய‌ர‌த்திலிருப்பது நானென

இவ்வாழ்வின் அழகியதொரு நாளில்
காற்றின் பாடலொன்றிர்க்கு இலைகள் சிலிர்க்க
அது நடனமாடுவதை ர‌சித்திருக்கிறேன்
பின்னொருநாளதன்
சிறப்பை பாட்டி கூறக்கேட்டிருக்கிறேன்

ஒரு நாள்
ப‌ள்ளிச் சென்று திரும்பிய‌ மாலையில்
அம்மரம் வெட்டப்பட்டு
அவ்விடத்தில் நிரம்பியிருந்தது வேறொன்று

கோப‌த்தில் விரைந்து பெற்றோரிட‌ம்
ஏனென கேட்டேன்
யாரோ புதிய வீடு கட்டப்போவதாக சொன்னார்கள்
ஏன் என்னிடம் கேட்க‌‌வில்லையென்றதிற்கு
ப‌திலேதும் சொல்லாம‌ல் சிரித்த‌னர்

அன்றிர‌வு அழுதபடியே உறங்கிப்போனேன்
அடுத்த‌ சில‌ தின‌ங்க‌ள்
யாரிட‌மும் பேச‌வில்லை
ச‌ரியாக‌ சாப்பிட‌வுமில்லை
வ‌குப்ப‌றையிலும் கூட‌
ச‌தா அதைப்ப‌ற்றியே இருந்த‌ன‌ என‌து எண்ண‌ங்க‌ளைனைத்தும்

ம‌ற்றொரு இர‌வு
அருகில் நெருங்கிய‌ அம்மா
பிண‌க்க‌த்தில் திரும்பிப் ப‌டுத்த‌ப‌டியிருந்த‌
என் தலைக்கோதிய‌படிப் பேசிக்கொண்டிருந்தாள்
அது வெறும் ம‌ர‌ம், வெறும் ம‌ர‌மென‌

நான் எதுவும் பேச‌வேயில்லை

Friday, May 27, 2011

........

அசைவற்று இருக்கிறது இவ்வெளி
ஒரு வானம்
கொஞ்சம் மரங்கள்
மேக‌ங்க‌ளிட‌ம் கூட‌ ஒரு ச‌ல‌ன‌முமில்லை
நீர்ப்பரப்பிற்கு அருகே நீளும் இம்ம‌ண் சாலையில்
நான் ம‌ட்டும் அசைகிறேன்.
இதோ இப்பொழுது இரு வ‌ண்ண‌த்துப்பூச்சிக‌ள்
வ‌ளைந்து வ‌ளைந்து
வ‌ளைந்து வ‌ளைந்து

Wednesday, May 25, 2011

.......

எப்பொழுதும் போலவே
மிகக் கடுமையாகவே இருக்கிறது இந்த கோடையும்
எதிர்கொள்ளவே முடியாமல்
சிறுந்தளிர்கள் கருகி மடிய
நானோ கணவ மரத்தின் நிழல் தேடி ஒதுங்குகிறேன்
இக்கோடை த‌கித்து தணியும் வரை
என்னால் காத்திருக்க இயலுமெனினும்

நீ கேட்டதேயில்லை
நான் நிரம்பியப் பாடலை
அவ்வளவு துயர்மிக்க‌ எனதிசையை.

Monday, May 16, 2011

விடுபடல்

நினைவு தெரிந்த நாள் முதலாய்
கண்டதில்லை அவர்கள் கூடி மகிழ்வோடிருந்ததை
ஒவ்வொரு முறையும்
அவ‌ள் த‌ன‌து தேவைக‌ளை முன்வைக்கையிலும்
அவ‌ன் த‌ன‌து இய‌லாமையை விவ‌ரிப்பான்
ச‌மாதான‌ங்க‌ள‌‌ற்றப் பொழுதுக‌ளில்
நீளும் ச‌ண்டைக‌ளுக்கிடையே
நானென்னை மௌன‌ங்க‌ளில் நிர‌ப்பிக்கொள்வேன்
இல்லையேல் புத்த‌க‌த்தை மூடிக்கொள்வேன்
அல்லது ச‌ன்ன‌ல் வ‌ழியே அவர்களை வெறித்திருப்பேன்
அவர்கள் எண்ணங்களெல்லாம்
அவர்களை நினைத்துதான்
இச்சிறுவனின் உணர்வுகளை பொருட்படுத்தியதேயில்லை எவரும்
சில சமயம் அவனின் நடத்தை மிருகத்தைக் காட்டிலும் மோசமானதாக இருந்திருக்கிறது
கள்ளுண்ண‌ப் பணம் கேட்டுக் கிடைக்காது
அவ‌ன் அவளை அடித்துதைக்கும் போதெல்லாம்
அவனை எதிர்க்க முடியாமல்
அவளுடன் சேர்ந்து அழுவேன்
ஏனென‌ ச‌லி‌த்துக்கொள்வேன்
நல்ல அப்பா வேண்டி
இறைவனிடன் வேண்டிக்கொள்வேன்

காற்றின் சப்தம் மட்டுமே கேட்டதொரு
முன்பனிக்காலமொன்றில்
எங்கோ வேலைக்கு செல்வதாகக் கூறி
தொலைதூரம் எங்களை விட்டுச் சென்றவன்
வெகுநாளாகியும் திரும்பவேயில்லை

அவள் அழுதாள். நான் அழவேயில்லை.

Monday, March 14, 2011

........

பால் குடிப்பதும்
பச்சிலை மேய்வதும்
துள்ளித் திரிந்தபடியுமிருக்கின்றன
ஆட்டுக் குட்டிகள்.

இந்த இளமையில்
எல்லா ஆட்டுக்குட்டிகளும் மான் குட்டிகளாகின்றன
அல்லது அவ்வாறு எனக்குத் தெரிகின்றன‌

வேகமாக நகர்ந்துவிடாதபடி
கழுத்திலும் காலிலும் கட்டப்பட்டு பழக்கப்படுத்தப்பட்ட‌ப்பின்
ஆடுகள் எப்போதும்
மான்களாவதேயில்லை.

...........

அதை
நீயறிந்த‌ யார் வேண்டுமானாலும் செய்ய இயலுமெனினும்
என்னிடம் யாசிக்கிறாய்
பனியுதிரும் இந்த இரவில்.
நம்மிடையேயான புலவி நீண்டு கசந்துபோகும் முன்
அதை கலைந்தெறியும் பொருட்டு.

தன்னிடத்தை விட்டு
வெளியேறத் தெரியாத கிண‌ற்றுத்தவளையின் மனநிலையுடன்
உனக்காக இல்லையெனினும் எனக்காகவேனும் ஒத்துக்கொள்கிறேன்.

மூழ்குவதேயில்லை தாமரை இலைகள்.

Saturday, February 5, 2011

வ‌ழி

சாலையோரம் அடுக்கி வைத்திருந்த பழங்களை
நோக்கி நடந்த‌ பார்வையற்றவனின் கைப்பிடித்து நிறுத்தினேன்
எங்கு போக வேண்டுமென வினவியபோது
மெல்ல‌ச் சொன்னான்
ஒவ்வொரு கடையாக.
ஒவ்வொரு கடையாக.

Thursday, January 13, 2011

காரணங்களறிதல் - 2

இவ்வேளையில்
யாரையோ எதையோ நினைத்துக்கொள்ள முயல்கிறேன்
பிடிபடவேயில்லை எதுவும்

இன்றைய வானில் ஒன்றுமேயில்லை

ஒரு சூரியன்
ஒரு நிலவு
ஒரு நட்சத்திரம்
ஒரு பறவை
ஒரு பட்டம்

எதுவுமேயில்லை.

இன்று இச்சாம்பல்நிற வானிருப்ப‌து
தெளிந்த‌ நிலையிலா இல்லை த‌னிமையிலா?