Thursday, August 16, 2012

...................இல்லை
எவ்வித‌ வருத்தமுமில்லை

நேற்றையப் பயணத்தில்
தவிர்க்க இயலாது வெளிபட்ட
எனது விசும்பலை யாரோ கவனித்தார்கள்

அசௌகரியமாய் இருந்தது

கேட்காதீர்கள்
நன்றாயினும் தீங்காயினும்  அவை என்னாலானது
யாரையும் குறைக்கூற விரும்பவில்லை

கணக்குகள் தீர்த்தாகிவிட்டது
குறிப்புகள் நீக்கப்பட்டுவிட்டன
இனி ஒன்றுமில்லை
கடந்தவைகளைப் பற்றிப் பேச
எனக்கு விருப்பமுமில்லை

இன்று ஒரு பரத்தையைப் போல
மிக சுதந்திரமாக இருக்கிறேன்
விழுந்த‌ இறகொன்றைப் போல
எளிதாக சுற்றித் திரிகிறேன்

காலம்
நம் அனைவரையும்
பின்தொடர்கிறது இல்லையா?

சாம்பல் மினுங்கும் வானம்
இத்தனிமையின் சுவைக்கூட்டுகிறது

முன்னறியாத‌
இசைத்தட்டைச் சுழலவிட்டுவிட்டு
தேனீர் கோப்பையுடன் தாழ்வாரத்தில் நிற்கிறேன்

படபடத்தபடி
காற்றிலாடும் புளியங்கிளைகளை
ஆழ‌ப்பற்றுகிறன நீர்க்காக்கைகள்

மழை வரும் போலிருக்கிறது

Friday, June 29, 2012

இடம்பெயர்தல்

காற்றில் சிலிர்க்கிறது நீரின் மேற்பரப்பு

எப்பொழுதும்
ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நகர்தலென்பது
பயணங்களைப் போன்று இருப்பதில்லை

மனிதர்களை
செல்லப் பிராணிகளை
தொட்டிச் செடிகளை
பிடுங்கிய தோட்டதுச் செடிகளை
லட்சோபலட்சம் அசையாப்பொருட்களை
வண்டியில் ஏற்றியாகிவிட்டது

ஆயினும்
மீந்துவிடுகிறன சில நினைவுகள்

வெறுமை நிரம்பிய முகத்தோடு
கடைசியாய் ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன்

புதிய வீட்டில்
கொணர்ந்தப் பொருட்களை வகைப்படுத்தியப்பின்
முதல் வேலையாக
பிடுங்கி வந்த தோட்டத்துச்செடிகளை
குழி தோண்டி நட்டு மண்ணனைத்து
நீரூற்றினேன்

அவை தலைசாய்த்தபடியிருந்தன

வீட்டிற்கும் புதிய பள்ளிக்குமான
இடைபட்டப் பயணத்தில்
ஆறாவது முறையாக கேட்கிறாள் சாய்னா
அத்தா ஜீவிதாவும் வருவாளாவென

ம் என்றேன்

புதிய‌ வகுப்பறைக்கு முன்
அழுகைத் ததும்பும் முகத்துடன்
கால்களை கட்டிக்கொண்டு போகவேண்டாமென்ற‌வளை
அவள் உயரத்திற்கு குதிகாலிட்டு அமர்ந்து
வழியும் நீரை விரலழுத்தித் துடைத்து முத்தமிட்டு
திரும்பி பார்க்காது அவள் பிடி நழுவி வெளியேறினேன்

எங்கோ போகின்றன
சில பறவைகள்

மாலை
மீண்டும் காண்கிறேன்
இன்னமும் தலைசாய்த்தபடியேயிருக்கிறன‌
நடப்பட்ட தோட்டத்துச்செடிகள்

Thursday, May 3, 2012

பறவைகளைப் போல இருப்பதில்லை நீங்கள்

முதன் முதலாக பறக்க முயலும் பறவைகளைப் போல இருக்கிறார்கள்
தத்தி தத்தி நடக்க முயலும் மழலைகள்

பறக்க இயலாமல்
அவைகள் கிளைகளைப் பற்றுகையில்
அவர்கள்  சுவர்களைப் பிடித்துக்கொள்கிறார்கள்


தூக்கியணைத்து கொஞ்சி மகிழும்
இந்நாட்களில்
நீங்கள் எப்பொழுது கேட்டாலும் கிடைக்கிறன முத்தங்கள்
கன்னங்களில்
நெற்றியில்
பெரும்பாலும் உதடுகளில்

புணர்ச்சி வேண்டா சமயங்களில்
உங்களிடயே தலைமுட்டிக் குடைந்து
உங்களுக்குள் புதைந்துப்படுக்கும்
அவர்களைத் தடவிக்கொடுத்தபடி உறங்கிப்போகும் நீங்கள்
மற்றொருப் பொழுதில் அவர்களை வாளியில் நிற்க வைத்து குளிப்பாட்டுகையில்
முதுகில் சிறியதாக சிறகு வளர்ந்திருப்பதைக்கண்டு
மெல்ல அதிர்வுறுகிறீர்கள்

மார்போடு தூங்கும் அவர்களின் சிறகுகளை
வலிக்காமல் ஒவ்வொரு இறகாய் வெட்டியெறிந்தப்பின் 
பெருமூச்சொன்று நிகழ்ந்து மறையும்
இப்பொழுதில்தான் உங்களுக்கு நிம்மதி

சக பறவையுடனான
குழப்பங்களில் சிறகுகளை வெட்ட‌ மறந்துவிடுகையில்
முன்பைவிட வலிய‌
புதிய சிறகுகள் வளரத்துவங்குகிறன
இனி அவைகளை களைந்தெறிவது
ஒருபோதும் எளிதான‌தல்ல என்பதையறிந்த நீங்கள்
அவர்களுக்கான எல்லைகளைத் தீர்மானிக்கிறீர்கள்
தெருக்களில் மெல்ல மெல்லப் பறந்து திரும்புமவர்களை
கண்டுப் புன்னகைக்கிறீர்கள்
அணைத்துக்கொள்கிறீர்கள்
சில சமயம் எல்லை மீறுமவர்களை எச்சரிக்கையும் செய்கிறீர்கள்

எல்லா வேளைகளிலும் விழிப்புடனே இருக்கிறீர்கள்
விட்டுப் பறந்துவிடாதபடி

இருந்தாலும்
உங்களுக்குத் தெரியும்
தன் உணவை தானே தேடுவதையறியாத பறவைகள்
கூட‌டைந்தே ஆக‌ வேண்டுமென

மொழியறிந்த அவர்கள்
இப்பொழுது நன்றாக பறக்கிறார்கள்
மற்ற பறவைகளையும் விட உயரம் உயரம் பறப்பதைஎண்ணி
பெருமிதம் கொள்கிறீர்கள்

இம்முறை
கடலின் அக்கரைக்கு பறக்கும்
அவர்களின் விருப்பத்திற்கு தலையசைத்து
விடைகொடுத்துப்பின் வந்து அமர்கிறீர்கள்
இலைகளற்ற‌ கூதிர்கால மரமொன்றில்

ஒவ்வொரு நாளும்
தோன்றும் மறைவதுமாய் இருக்கிறது
ஒளி

இப்பொழுதெல்லாம்
உங்களால் அதிகம் பறக்க முடிவதில்லை

உங்கள் சிறகுகளிலிருந்து இறகுகள்
உதிர்ந்துகொண்டேயிருப்பதையெண்ணிக்கவலைக்கொள்ளும்
இம்முதுவேனிற் காலத்தில்
பழைய முத்தங்களில் நெகிழ்ந்து நனைகிறீர்கள்

தொலைதூரம் சென்றுவிட்ட பறவைகளின்
மீள்வருகைக்காய் காத்துக்கிடக்கும் நீங்க‌ள்
என்றாவது ஒருநாள்
அது நிகழ்கையில்
அவர்கள் கொடுப்பதாக இருந்தாலும்
நீங்கள் கேட்பதாக இல்லை.


முத்தங்களை.


........

விருப்பங்களில்லா மரங்களின் மேல்
படர்வதில்லை கொடிகள்
என்றாலும்

வேலிகள‌ற்று  இருக்கிறது இவ்வெளி

Sunday, March 25, 2012

காற்றோடு போதல்

இந்நாட்களிலென் குழப்பங்களெல்லாம்
வ‌ழிப்போக்க‌ர்க‌ளின் புன்ன‌கையை
எங்க‌ன‌ம் எதிர்கொள்வ‌தென்பதில்தான்

வீசும் வாடை காற்றில்
உலர்த்த தொங்கவிடப்பட்டிருந்த துணிகள் பறக்கின்றன

அதிகாலை வானை
காற்றில் மிதக்கும் பறவைகளை
மழைக்கு முந்தைய மேகங்களை
நிறம் மாறும் இலைகளை
நிலவை நீர்நிலைகளை
வின்மீன்களை
இனி கானாது போவேனோ

மேலும் இல‌ந்தையின் இச்சுவை

சொல்வதற்கு எச்செய்தியுமற்ற இவ்விரவில்
திரும்ப இயலாத தூரம்
என்கிற வாக்கியம்
மிகுந்த அச்சத்தைத் தருகிறது

திரைச்சீலையை விலக்கி
சன்னல்வழியே பார்க்கிறேன்
காற்றை

இந்நேரத்தில்
எதைத் தேடி அலைகிறது இக்காற்று
இப்பொழுதென் தோட்ட‌த்துச்செடிகளை அசைக்கிறது

வெளியேறி
ஒரு புன்னகைத் ததும்ப
காற்றோடு நடக்கிறேன்

எனக்குத் தெரியும்
என்னோடுவரும் இக்காற்று
பின்னொரு நாளென்னை துடித்தடங்கச்செய்யுமென்று