Tuesday, November 17, 2015

பழைய குளிர்காலப் பாடல்

மகிழ்சியற்ற இந்நாட்களில்
ஒவ்வொரு நாளும் எனதறைத் திரும்புதலென்பது
ஒருவித சலிப்பை உருவாக்குகிறது 


இரு நாட்களாக
தொடர்ந்து பெய்யும் இந்த மழையில்
வெளியே செல்வதும்கூட

இவ்வெளியெங்கும்
புகையைப் போல படர்ந்து நிறைகிறன
கார் மேகங்கள்

பழைய குளிர்காலப் பாடல்களில்
நெஞ்சம் அலமலக்குற
கதகதப்பான இந்த போர்வைக்குள்
சுருண்டுப் படுத்திருக்கிறேன்

இன்று பெய்யும்
இந்த மழை குளிர்கிறது
மீதமுள்ள
என் எல்லா நம்பிக்கைகளையும் தகர்க்கிறது

Nov 12th 2015
- நளன்

......................

ஊதை தூற்றும்
இந்த மாலையில்
ஓமை மரக்கிளையில் வந்து அமர்கிறது

ஒற்றைக் காகம்

வெகுநேரத்திற்குப் பிறகு
அது அங்கிருந்து பறந்துப்போகும்வரை
அதனைப் பார்த்திருந்தேன்

பறவை நீங்கிய கிளை
மெல்ல அதிர்கிறது
கடைசி இலைகள் மிதக்கிறன

இருள் படர
ஒளி மங்குமிந்த மாலை
எப்பொழுதுக்குமான எனது துயரம்
இந்த வாழ்வைப் போல

நினைவுகளை அழித்துக்கொள்ள
ஏதேனுமொரு வழிவகை
இருந்திருப்பின்
இவ்வேளை
கலங்கமற்ற ஒரு புன்னகையுடன்
ஒரு சலனமுமின்றி எதிர்கொள்ளும்
அந்நியர்களாக இருந்திருப்போம்

இம்முறையும்
தேவைகள் நம்மைத் தீர்மானிப்பதை
நாம் அனுமதித்துதான் ஆகவேண்டுமா?

Oct 25th 2015
- நளன்
 

Wednesday, September 16, 2015

..................

மழை நின்ற இவ்வேளை
காற்றே இல்லை

மின்சார கம்பிகளில் அமர்ந்து
ஈரம் உலர்த்துகின்றன
மழைக்காலக் காக்கைகள்

அற்புதம்
அவ்வபோது காதல் சொரியும் உன் கண்கள்
எப்போதும் நெஞ்சம் அதிரும் உன் புன்னகை
உன் குரல் ஒருவித மயக்கம்

கண்ணாடி மதுக் கோப்பைகள்
மோதி அதிர நம் புன்னகைகள்
எப்போதாவது நிகழும் நமது இந்த சந்திப்பு

மதுவும்
இலக்கியமும் இசையும் போதும்
நம்மை இவ்வுலகிலிருந்து
கொஞ்சம் நேரமேனும் விடுவித்துக்கொள்ள

உன் முகம் வசீகரம்தான்

நெடுநாளான உனது குழப்பத்தை
பேச்சினிடையே
அவ்வபோது
எனது பார்வையில் உறுதி செய்துகொள்கிறாய்

ஆம் உனது அனுமானங்கள்
சரிதான்
எப்போதும் கண்கள் பொய் சொல்வதில்லை

மேலும்

ஒருவேளை
அப்பழுக்கற்ற எனதந்த ஈர்ப்பு
உனது அனுமானங்களில்
மெல்லத் தொலைந்துப் போகக்கூடுமெனில்
இந்த திரைச்சீலையை கொஞ்சம் விலக்கியே வைப்போம்

.............

நேற்று
அத்தனை மௌனத்திற்குப் பின்
உன்னைப் பார்க்கவோ
உன்னிடம் பேசவோ
எனக்கு எந்த விருப்பமுமில்லை என்றேன்


அழைப்பை துண்டித்தாய்

வாசல் கதவைத் தட்டிவிட்டு
ஏன் தயங்கி நிற்கிறாய்
உள்ளே வா
மழையில் நனைந்திருக்கிறாயென
துவட்டுவதற்குத் துண்டை நீட்டுகிறேன்
நீ வாங்கவில்லை

இப்போது எதற்காக
குரல் உடைந்து அழுகிறாய்

சற்று யோசித்து 
உன் கண்ணீரில் எனக்கு நம்பிக்கையில்லை
என்றேன்

நீர் வழியும் கண்ணங்களோடு
வெறுமென என்னைப் பார்த்தாய்

சட்டென யூகித்திடா கருணையுடன்
நான் உன் கண்ணீரை துடைத்திட முயன்றேன்
நீ எனது கைகளைத் தட்டி விட்டாய்

எதையோ நினைத்தப் பின்
இப்போது அழுகையை நிறுத்திவிட்டாய்
அறையிலிருந்து
ஒரு பறவையென வெளியேறிவிடவே நினைத்தாய்

நீ வெளியேறாவண்ணம்
நான் கதவை மூட முயல்கிறேன்
நீயோ வெளியேற முயல்கிறாய்
வலுக்கொண்டு நான் மூட
உன் முயற்சியை கைவிட்டாய்

இப்பொழுது
கட்டிலின் இன்னொரு ஓரம் அமர்ந்திருக்கிறாய்

சுவற்றில் வெகுநேரம் அசையாதிருக்கும்
இந்தப் பல்லியை என்ன செய்யலாம்

நான் நெருங்கி உன் கைப்பற்றிக்கொள்ள முயல்கிறேன்
நீ உன் கைகளை இழுத்துக்கொண்டாய்
இந்த திரைச்சீலைகள்
ஏன் இத்தனை அமைதியாக இருகின்றன
இந்த காற்றும்

இப்பொழுது
உன்னை மார்போடு இறுகப் பற்றியபடி இருக்கிறேன்
பின் எதற்காக விசும்புகிறாய்
ஏனெனக் கேட்கிறேன்
நீ எதுவும் சொல்லவேயில்லை
திரும்ப விசும்புகிறாய்
உனை விலக்க எத்தனைக்கிறேன்
என்னை இறுக இறுக இறுக அணைத்துக்கொண்டாய்

எனக்குத் தெரியும் ஏனென

இப்பொழுதும் நான் உன்னிடம் இருப்பதற்கான காரணம்
அது ஒன்றன்றி வேறெதுவுமில்லை.

- நளன்
July 8th 2015

............

தயவுசெய்து
அந்தப் பாடலை நிறுத்துங்கள்

என் நெஞ்சம் வலியால் நிரம்புகிறது
உன் நினைவுகளுக்குள் வலிய இழுத்துத் தள்ளுகிறது
உன்னோடு இருந்த நாட்களை
உன் புறக்கணிப்பை
குறிப்பாக
உன் பொய்களை
என் கண்முன் நிறுத்துகின்றது

இந்த காலி மதுக்கோப்பை
சுக்குநூறாக உடைத்து நொறுக்கப்படுவதற்கு முன்பாவது

தயவுசெய்து
அந்தப் பாடலை நிறுத்திவிடுங்கள்.

- நளன்
June 21st 2015

................

இந்த நெடுஞ்சாலைப் பயணத்தில்
இருப் பக்கங்களிலும் விரையும் வாகனங்களினால்
காற்றில் திணறுகின்றன அரளிச் செடிகள்

சிறு வயதில் ஒரு நாள்
திரும்பத் தரவியலாதப் பணத்திற்காக
கந்துவட்டிகாரன்
அம்மாவை திட்டிப்போக
யாருமே பார்த்திராத மறுநாள் வைகறையில்
அவன் வீட்டு சன்னலை
கல்விட்டெறிந்து உடைத்து வந்ததை
இவ்வேளையில் நினைத்து கொள்கிறேன்

இம்மழைக்காலங்கள் ஏன் எப்போதும்
நினைவுகளைக் கிளருகின்றன

குளிருக்கு இதமாக
சுருண்டுப் படுத்திருக்கும்
மழைக்கால நாய்களைப் போல
ஆட்களற்ற இப்பேருந்தில்
கண்ணாடிகளில் வழியும் மழையை
பார்த்தபடி புகை காற்றில் நிரம்ப
புகைப்பிடித்தல் ஒரு ஆசுவாசம் 

தன் பழைய முகத்தை
கழற்றி எறிந்தப்பின்
ஒரு கூட்டுப் புழுவாக
இவ்வேளை காத்திருக்ககூடும்தானே
ஏதேனுமொரு கம்பளிப்பூச்சி
என்றாவது ஒரு நாள்
சிறகு முளைத்து ஒரு வண்ணத்துப்பூச்சியாக
அங்குமிங்கும் அலைவதற்கு

எப்போதும்
முளைத்திடாத சிறகுடன்
எந்தவொரு கசப்பான நினைவையும்
பழைய முகத்தையும்
கழற்றியெறியவியலாத நான் காத்திருக்கின்றேன்
குறைந்த பட்சம்
இந்த மழை நிற்பதிற்கு.

- நளன்
June 13th 2015

Sunday, March 22, 2015

.............இந்தப் பயணத்தில்
கடந்துப்போகும்
வழிப்போக்கர்களைப் பார்த்தபடி இருக்கிறேன்

இந்நாட்களில்
நான் கற்றுக்கொண்டது என்னவோ
எல்லோரிடமிருந்தும்
ஏதோவொரு வகையில்
தொலைந்துப்போதல் எவ்வளவு நல்லதென

எத்தனையோ முறை முயன்றும்
சொல்லாது மறைத்துவைத்துக் கொண்ட
சொற்களை நேற்றுப் பேசினாய்

முற்றிலும் அழுகிப்போன 
இச்சொற்களை
எவ்வளவு காலம் மனதில் வைத்திருந்தாய்

இன்று எந்த பாசாங்குகளும்
இல்லையெனினும்
என்னை அதிர்வுரச்செய்வதெல்லாம்
சில நாட்களுக்கு முன்பான உரையாடலில் 
இடையிடையேயான
உன் புன்னகைகள் மட்டுமே

மனதில் இத்தனை
கசப்புக்களை வைத்துக்கொண்டு
புன்னகைத்துப் பேச உன்னால் எப்படி முடிந்தது?

இருப்பினும்
எனக்குத் தெரியும்
உனது இயலாமையை

நேற்று எந்த சலனமுமின்றி
நீரின் மேல் ஏன் கல்லெறிந்தாயென

நீர்வளையங்களுக்குப் பின்னரான
மேற்பரப்பென
மெல்ல
எதுவுமே நடந்துவிடாததுப் போல
இன்று அவரவர் நிலைக்கு மீள்கிறோம்

கணக்குமுந்தன் சொற்கள் மட்டும் இருக்கிறன
நீரினடியில் கற்களைப் போல
மிக ஆழமாக.

Tuesday, February 3, 2015

...........

தக்க சந்தர்ப்பத்திற்காக
காத்திருக்கின்றோம்
யாவரும்

முன்னெப்பொழுதும் வெளிப்படுத்தாது
இதுவரை தேக்கி வைத்தப் புகார்களை
மொத்தமாக சேர்த்து
சேற்றைப் போல
முகத்தில் அறைவதற்கு

Monday, January 19, 2015

.............

எல்லாவற்றிர்க்கும் இருக்கின்றன
ஏதோவொரு காரணங்கள்

இப்பொழுதெல்லாம் நீ பேசி முடித்தப்பின்
நான் கேட்பதேயில்லை
அழைத்தது யாரென

நீயாக சொல்வதுமில்லை


29 டிசம்பர் 2014
- நளன் 

அந்த குரல்கள்

எல்லா வேளைகளிலும் மழைத் தூரும்
இக்கார்காலத்தில்
இந்த இதமான வெந்நீர் குளியலைப் போன்று ஏதுமில்லை

மஞ்சள் விளக்குகள் பின்னால் நகர
இத்தொய்யத்தில்
ஊர் திரும்புகிறேன்

குளிர்மிக்க அதிகாலைகளில்
காடுகளில் அலைந்து
அக்காவுக்காக டிசம்பர் பூக்களைப் பறித்து வந்தது
நினைவிலாடுகிறது

சென்ற முறை
மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை காரணமாக
தான் முலையற்றிருப்பதை
முந்தானையை விலக்கி காட்டிய
ஜெயா பெரியம்மா இப்பொழுது இல்லை

மழைக் காற்று
முகத்தில் படர கண்களை மூடிக்கொள்கிறேன்

நின்று போன கடிகாரத்தில்
உறைந்து போய்விடுகிற காலத்தைப் போல
தேங்கிவிடுகிறன சில நினைவுகள்

என்ன இருக்கிறது
இந்த இருத்தலில்
மற்றும் இல்லாது போதலில்

கூதிர்கால இலைகளைப் போல
ஒவ்வொருவராக
இறந்துப் போகிறார்கள்

அவர்களது குரல்கள் மட்டும்
என்றைக்கும்
என்னிடம் இருக்கிறன.19 டிசம்பர் 2014
- நளன்

பறவைகள் வெளியேறியத் தீவு

எங்கிருந்து வந்ததென தெரியவில்லை
சில மாதங்களாக
மொட்டை மாடியில் சுற்றித் திரிகிறன
இரு வெண்ணிறப் புறாக்கள்

பார்த்ததும்
முதலில் ஓடி மறைந்தவை
நான் உணவளிக்க துவங்கியதும்தான்
எனை நம்ப ஆரம்பித்தன

யாருடையதாக இருக்கும்

எப்படி இருப்பினும்
தன்னிடத்தை விட்டு வெளியேறுதல்
துயரம்

எனினும் சில நாட்களில்
நாங்கள் நண்பர்களாகியிருந்தோம்
அவை என் கை தோள் தலைமேல் அமருமளவிற்கு

கின்னர இசை மிதக்கும் மாலைகளில்
அவைகளுடனிருப்பது மனிதர்களுடன்
இருப்பதைக்காட்டிலும் எனக்குப் பிடித்திருக்கிறது

அவ்வெண்ணிறம் ஏகாந்தம்

படபடக்கும் அவற்றின் சிறகுகள்
எனது நீண்டகால ஏக்கம்

இதற்கிடையில்
இன்று காலை என் வீட்டிற்கு வந்த பெண்ணொருவள்
அப்புறாக்களை தன்னுடயவை என்கிறாள்

நான் எப்படி விட்டுக்குடுப்பது
இல்லை
அவை என்னுடயவை என்றேன்

இல்லை அவை தன்னுடையவை என்கிறாள்

தான் பக்கத்துத் தீவில் வசிப்பதாகவும்
அங்கிருக்கும் போர்க்காலச் சூழலில்
தொடரும் வெடிச்சப்ததைக் கேட்க சகிக்காது
அவைகள் வெளியேறிவிட்டதெனவும்
அவைகளைத் தேடி
வெகுதொலைவு வந்திருப்பதாகவும்
தயவு செய்து தந்துவிடுங்களென
மூச்சிறைக்கக் கேட்கிறாள்

தந்துவிடலாமெனினும்
பறவைகளே வெளியேறியத் தீவில்
நீ எப்படி இருக்கிறாயென எதார்த்தமாகக் கேட்டேன்

அத்துனை வெறுமையாக எனைப் பார்த்தப்பின்
சொல்லாது கொள்ளாது
வெளியேறி முகங்களுக்குள் தொலைந்துப்போனவளை
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்

நமது கையாலாகாதத் தனத்தை மூடிமறைக்க
எல்லோரையும் இங்கேயே
அழைத்துக்கொள்ளலாம் தானே
எட்டுப்பேர் தாரளமாகத் திரியும் வீட்டில்
மேலுமொருவர்
குறுகிப்படுத்துறங்கவா இடமில்லை.10 செப்டம்பர் 2014
- நளன்

............

இந்த சுவரைப் போல ஏதுமில்லை
எவ்வளவுதான் தலைமுட்டி உடலழுந்திப் படுத்தாலும்
அவை விலகுவதேயில்லை.


14 ஆகஸ்ட் 2014
- நளன்

...............

யாரிடமும் பகிரவியலாத சொற்கள்
சுவாசத்தை கடினமாக்குகிறன

இந்நாட்களில்
மழை அவ்வளவாக இல்லை

முற்றிய சோளங்களுமில்லை
பறவைகளும் இல்லை
அவற்றின் ரீங்காரங்களுமில்லை

அவமதிப்பிற்கு பின்னரான இந்த இரவில்
தனித்து கரையொதிங்கிய
ஒற்றை தோணியென அலைமோதுகிறேன்

உன் நினைவுகள் அழுந்தும் துயரை
வேறெப்படி பதிவு செய்வது.


13 ஆகஸ்ட் 2014
- நளன்
 

கைவிடப்பட்டப் பொழுது


பற்றுவதற்கு ஏதுமில்லாமல்
காற்றிலலைகிறன பிச்சிப்பூக் கொடிகள்

இம்மழைக்கால தவளைகளின்
குரலை எவ்வளவு நேரத்திற்கு கேட்டுக்கொண்டிருப்பது

உன்னால் புறக்கணிக்கப்பட்டப்பின்
இந்த இரவு கொண்டு வருகிறது
வாழ்வின் அத்தனைத் துயரங்களையும்

கவிழ்ந்தப்பின் திரும்ப இயலாது தவிக்கும்
கரப்பான்பூச்சியை ஒத்திருக்கிறேன்

நாட்கள்
வேகமாக செல்வதாக தோன்றினும்
மிக நீளமானது இந்த வாழ்வு

உனக்கு நினைவிருக்கிறதா
அன்றொரு நாள்
நெஞ்சம் இறுக அணைத்துக்கொண்டாய்

நெற்றியிலுன் ஈர முத்தம்
நான் கண்களை மூடிக்கொண்டேன்

மழைக்காற்றுக்கு எதிர் திசையில்
பறக்கும் அக்குடையை சமாளித்தபடி நடந்துப்போனோம்

இன்று
இக்கைவிடப்பட்டப் பொழுதில்
உயிர் வலிக்கத் தனித்திருக்கிறேன்

தூக்கியெறிந்த கண்ணாடியென
குளியலறைக்குள்
குலுங்கி உடைந்து அதிரும் என்னுடைய கண்ணீர்

இம்மழைக்கால தவளைகளின்
குரலை எவ்வளவு நேரத்திற்குதான் கேட்டுக்கொண்டிருப்பது.


 04 ஆகஸ்ட் 2014
- நளன்

.....................


ஒருப் பிடிப்பும‌ற்று
மிகுந்த சோர்வாக இருக்கிறது

சன்னல் வழியே
இக்காலை
மழையைப் பார்த்தபடி இருக்கிறேன்

பாடல்களால் நிரம்பி இருக்கிறது எனது உலகம்
கேட்கும்
ஒவ்வொரு பிடித்தமானப் பாடல்களும்
எனை கைப்பிடித்து எங்கோ அழைத்துச் செல்கிறன
பெரும்பாலும் இறந்த காலத்திற்கு

யாரேனும் ஒருவரை
ஏதேனுமொரு நிகழ்வை
சமயங்களில் கசப்பான எதோவொன்றை
நினைத்துக் கொள்கிறேன்

மனநிலைக்கு பொருந்திப்போக இயலாதப் பாடல்கள்
எனை எங்கும் அழைத்துச் செல்வதேயில்லை

காற்றுத் தீண்டுமிந்த‌ பேருந்துப் பயணத்தில்
அத்தனை யோசனைக்குப்பின்
சொல்கிறாய்

அரிப்பெடுத்தால்
எங்காவது போக வேண்டியதுதானே
எனை நம்ப வைத்து ஏன் கழுத்தறுக்கிறாயென

எத்தனை நிச்சலமான தருணம்
நான் எதுவும் சொல்லவேயில்லை

எக்காலத்திலும்
எந்தவொரு உறவிலும்
சந்தர்ப்பம் கிடைத்தால்
இரவுகளில் தன் விருப்பப்படி புணர்ந்துத் திரியுமொரு
சாதாரண விலங்கைப் போலவே இருந்திருக்கிறேன்

இதைச் சொல்கையில்
நீங்கள் என்ன நினைப்பீர்கள்
என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை


எனது நிலைப்பாடு
தெளிவாக இருக்கிறது 


எப்படியேனும்
வழியில் காணும் யாரேனும் ஒருவர்
உங்களை என்னை சலனப்படுத்திவிட இயலுமெனினும்
உங்களதிந்த
நிலைப்பாடு யதார்த்ததிற்கு அப்பாற்பட்டிருக்கிறது 
 
உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்த இயலாதுப்போகும் 
இச்சமூகத்தில் வாழுதலென்பது
எப்பொழுதும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது

எனக்குத் தெரியவில்லை
ஒரு மலர்
மெல்ல அவிழ்வதைப் போல
மிக எளிதாக எங்கனம் இருப்பதென.


 12 ஜூன் 2014
- நளன்

நீலம் இழத்தல்


இன்று மாலை மழைப் பெய்ததில்
ஏதோ ஒருவகை நிம்மதி

இப்பொழுதெல்லாம்
நீ வருகையில்
எனது கண்களில் மிளிர்வதில்லை
எந்தவொரு எதிர்பார்ப்பும்

இப்பொழுதெல்லாம்
நாம் உதடுகளில் முத்தங்களிட்டுக்கொள்கையில்
நீ மூடிக்கொள்வதேயில்லை
உனது இமைகளை

இப்பொழுதெல்லாம்
நமது பிரியங்கள்
குடிக்காமல் ஆறிய தேனீரை ஒத்திருக்கிறது

முன்னெப்போதும் இல்லாமல்
எனது சிறிய‌ சிறிய பிசக்குகளையும்
கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டாய்

நமது விரல் நுனிகள் தருவதில்லை
எந்தவொரு கதகதப்பையும்

இந்த இரவு
மௌனங்களில் நிரம்பியப்பின்
எழும் துளி ஆட்சேபனையில்
பாதியிலேயே நின்றுப்போகிறது நமது நெருக்கம்

இந்நாட்களில்
வசீகரமிழந்த உனது குரல்
ஒரு வழிப்போக்கனைப் போல என்னை கடந்துப்போகிறது

நீ கேட்கிறாய்
இரவு வந்தவுடன் வானம் நீலமிழந்து கருப்பதேனென

இவ்வளவு நாளும்
நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்
வானம் எப்பொழுதும் நீலமாகவே இருப்பதாகவும்
நிலம் மட்டுமே கருப்பதாகவும்.
 
26 ஏப்ரல் 2014
- நளன் 

....................

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது
சிறு வயதில்
புளிய‌ மரங்களை வேரோடுச் சாய்த்த
அந்த பெருமழைக் காற்றை

மழை நீரில் நிரம்பிய
அந்த வீதிகளை

நீச்சல் பழகிய
கருங்குளிர்ந்தநீர் தெப்பக்குளத்தை
அதனைச் சுற்றி அமைந்திருந்த
மேலே நடப்பதற்கு ஏதுவான
பாசிப் படர்ந்த நீண்ட கருஞ்சுவரை

ஊரின்
மிகப் பெரிய அரச‌ மரத்தை

பட்டம் விடப் பழகிய நாட்களை

வண்ணங்கள் பூசி
விரட்டி விரட்டி நீரடித்த
மாரியம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு விழாவை

திருவிழா முகங்களை

பால்யகால அம்மாவை

எதைக்கொண்டும் நிரப்ப முடியாது
வெறுமை மட்டுமே இருக்கும்
இந்நாட்களில் வாய்க்கவில்லை
ஒரு திருவிழா நாள்
ஒரு பெருமழை நாள்

இன்றைய
இந்தப் பயணத்தில்
பண்பலையில் யாரோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
தேவையற்ற ஏதோ ஒன்றை

ஒரு பிடித்தமானப் பாடலொன்றிக்காக
காத்திருக்கிறேன்.
 
01 ஏப்ரல் 2014
- நளன் 

புறநானூறு

நீங்கள் எட்டுப் பேர் இருக்கிறீர்கள்
எதிரி ஒருவன் மட்டும் தான்

இருப்பினும் எதிரி
எங்கு எப்பொழுது வேண்டுமானாலும்
தாக்கலாமென
உங்களுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது

நீங்கள் நம்பி இருக்கிறீர்கள்
உங்கள் கூட்டத்தின் ஒற்றை மாவீரனை
பிளிறைப் போன்று
உறுதிமிக்க அவனது உடல் வலுவினை

எந்த ஒரு உயிரினப் போரளிக்குமான
மிக முக்கியக் கடமை
தம் மனைவி மக்கள் மண்
இவற்றை காப்பதென முழங்குகிறான் மாவீரன்

வீரம் மிக்க அவனதுப் பேச்சில்
சிலிர்த்துக் கிடக்கிறீர்கள்
ஆண்மைமிக்க அவனது மொழி
உங்களை வசீகரிக்கிறது

முன்காலங்களில்
எனது வாளுக்கு காயம்பட்டு
பலமுறை பேடித்து ஓடியவன் தான் இந்த எதிரி எனினும்
யாரையும் குறைவாக
எடை போடவேண்டாம் என்கிறான் மாவீரன்

இம்முறை அவனதுப் பேச்சு
உங்களைச் சிந்திக்க வைக்கிறது

போர் நாள் நெருங்க நெருங்க
கொன்றைப் பூக்கள் நிறைந்த
குடில்க‌ளுக்குள் பெண்களையும் குழந்தைகளையும் ஒளித்துவைத்து

நீங்கள் தயாராகவே இருக்கிறீர்கள்

பிறிதொரு கார் நாளில்
குளம்பொலிகள் அதிர அதிர வருகிறான் எதிரி

குதிரையில் இருந்தவாறே
அவன் இழுத்து எய்திய அம்புகள் உங்களது
கேடையங்களில் ஊடுருவுகிறது
மறைந்திருந்த‌ மாவீரன் குதிரையை தடம்புரளச்செய்ய
மழைநீர் தெறிக்க கீழே விழுகிறான் எதிரி

இருவருக்கும் நடக்கிறது
மிக கடுமையானப் போர்

முடிவில்
வஞ்சகமும் சூழ்ச்சியும் கொண்ட எதிரியின் வாள்
குரல்வளையை பதம்பார்க்க
இரத்தம் சிதற‌ உடைந்து சரிகிறான் மாவீரன்

தும்பைச் செடிகளில் இரத்தம் படிகிறது

எதிரியின் வாள்
உங்கள் நெற்றியில் நிற்கும் இத்தருவாயில்
அவனை வணங்கி மண்டியிடுவதைத் தவிர
வேறு வழியில்லை உங்களுக்கு

மாவீரனின் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்

உங்கள் கூட்டத்தின் இளம் பெண்கள்
எதிரியால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்

இருப்பினும்
அவனை எதிர்க்க வலுவற்று
மௌனமாக இருக்கிறீர்கள்

எதிரி
இப்பொழுது இது எனது மண்
நீங்கள் எனது அடிமைகள் என்கிறான்

இப்பொழுதும் நீங்கள் மௌனமாகவே இருக்கிறீர்கள்

மாவீரனின் மனைவியை அபகரித்தபடி
எதிரி அவனது நாடு திரும்புகிறான்

இப்பொழுது நீங்கள்
உலகிலுள்ள அலட்சியமிக்க‌ மற்ற கூட்டத்தின் முன்னே
தன் கூட்டத்திற்கு அநீதி நேர்ந்துவிட்டதாகவும்
உங்கள் தலைவன் கொல்லப்பட்டதாகவும்
நீதி வேண்டுமெனவும்
கெஞ்சுகிறீர்கள் கதறுகிறீர்கள்

இப்பொழுது
அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்

எதிரியின் கூட்டம்
எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கத் துவங்க
உங்களது
முன்னோர்களின் வீரமிக்க காப்பியங்களைக் கிழித்து
எல்லாம் பொய்கள்
கட்டுக்கதைகள் என்கிறீர்கள்

நாட்கள் கழிகிறன

இந்நாட்களில்
நீங்கள் அடிமைகளாகவே வாழப் பழகிவிட்டீர்கள்

கள்ளுண்டு
தம் தம் மனைவியைப் புணர்ந்து திரியும்
உங்களுடைய புதிய குழப்பம் இப்போது என்னவெனில்
உங்களுள் புதியத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பதென்பது

கூட்டத்தில்
உங்களது செல்வாக்கை நிலைநிறுத்த
எல்லோருக்கும் பாதுகாப்பு,
எல்லோருக்கும் இலவச உணவு,
மிக முக்கியமாக
எதிரியிடமிருந்து இந்த மண் மீட்கப்படும்
என வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறீர்கள்

வேறுவழியில்லாமல்
என்றாவது ஒருநாள் மீண்டும்
இம்மண் நம் சொந்தமாகுமென்ற எளிய‌ நம்பிக்கையில்
காத்திருக்க துவங்குகிறார்கள் மக்கள்

செத்தொழியுங்கள் ஈனப்பிறவிகளே

நம்பிக்கை என்பது
இயலாமையின் கடைசி மிச்சம்தான் இல்லையா?


24 மார்ச் 2014
- நளன் 

.........

இரு முகங்களுடன்
அலைகிறோம் எப்பொழுதும்

நமக்கு தெரிந்திருக்கிறது
எந்த முகத்தை
எப்பொழுது மாட்டிக்கொள்ள‌ வேண்டும்
அல்லது கூடாதென

தற்செயலாகவோ
யதார்தமாகவோ
இல்லை மறைந்திருந்தோ
இன்னொரு முகத்தை காண நேர்ந்துவிடுகையில்
பின் நாம் ஒருபோதும் திரும்புவதேயில்லை
நமது உறவின் ஆரம்ப நிலைக்கு.


20 மார்ச் 2014
- நளன் 

................

இந்த விடலைப் பருவ சிறார்களுக்கு
கோபம் எங்கிருந்துதான் வருகிறதென தெரியவில்லை
சாப்பாடு பிடிக்கவில்லையென
தட்டோடு தூக்கி எறிந்து வெளியேறி பனியில் நிற்கிறான்

அம்மா சொன்னாள்
உள்ளே வா, குளிருமென‌

அவளைப் பார்க்காது அவன் சொன்னான்
குளிரும், அதனாலென்ன?

அதனாலென்ன உனக்கு சளிப் பிடிக்கும்

சளிப் பிடிக்கும், அதனாலென்ன?

அதனாலென்ன
இப்படியே வெகுநேரம் நின்றிருந்தால்
உடல் விறைத்துவிடும்

உடல் விறைத்துவிடும், அதனாலென்ன?

உடல் விறைத்தால் நீ இறந்துவிடுவாய்

சிறிது இடைவெளிக்குப்பின்
அவன் சொன்னான்

நான் இறந்துவிடுவேன், அதனாலென்ன?


05 மார்ச் 2014
- நளன் 

..................

புன்னகைகளற்ற உரையாடல்கள்
நம்மை இன்னும் பிளவுபடுத்துகிறன

அவ்வளவு ஆதுரமிக்க
நெருக்கத்தின் பின்னும்
மற்றொரு தருணம்
நாம் மீள்வதென்னவோ
கேளாது எஞ்சிய நமது புகார்களில் மட்டுமே

முன்னெப்போதும் இப்படி இருந்ததா?

பிறகு ஏன் இவ்வாறு ஆனது?

பின்பனி காலம் தொடங்கிவிட்டது

வெய்யிலில் மட்டுமல்ல
இப்பனியிலும் காய்கிறன
கொடிகளும் புற்களும் குறுஞ்செடிகளும்

வற்றத்துவங்கும் கன்மாய்களிலும்
குளம் குட்டைகளிலும்
எளிதாக மீனுண்கிறன
கொக்குகளும் இன்னபிற‌ பறவைகளும்

இப்போதைக்கு
இருக்கும் ஒரே ஆறுதல்
இப்புங்கைமரத்தின் இளம் கொழுந்துகள் மட்டுமே

அதிகாலைப் பனியில்
குளிர்காய்தலென்பது அத்தனை இதமானதாக இருக்கிறது

கைகளில் ஒத்தி எடுத்த
தீயின் கதகதப்பை கன்ன‌த்தில் வைத்துக்கொள்கிறேன்

இந்த தீயும்
இந்த தேநீரும்
பண்பலையின் இந்தப் பாடலும்
எனை இன்னும் எளிதாக்குகிறன

ஒரு சீரான இடைவெளி
இருக்க வேண்டும் போல

சமயங்களில்
மிக்க நெருங்கினால் சுடும்
விட்டு விலகினால் குளிரும்
இக்குளர்காய்தலை ஒத்திருக்கிறோம்


03 மார்ச் 2014
- நளன்