Monday, January 19, 2015

புறநானூறு

நீங்கள் எட்டுப் பேர் இருக்கிறீர்கள்
எதிரி ஒருவன் மட்டும் தான்

இருப்பினும் எதிரி
எங்கு எப்பொழுது வேண்டுமானாலும்
தாக்கலாமென
உங்களுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது

நீங்கள் நம்பி இருக்கிறீர்கள்
உங்கள் கூட்டத்தின் ஒற்றை மாவீரனை
பிளிறைப் போன்று
உறுதிமிக்க அவனது உடல் வலுவினை

எந்த ஒரு உயிரினப் போரளிக்குமான
மிக முக்கியக் கடமை
தம் மனைவி மக்கள் மண்
இவற்றை காப்பதென முழங்குகிறான் மாவீரன்

வீரம் மிக்க அவனதுப் பேச்சில்
சிலிர்த்துக் கிடக்கிறீர்கள்
ஆண்மைமிக்க அவனது மொழி
உங்களை வசீகரிக்கிறது

முன்காலங்களில்
எனது வாளுக்கு காயம்பட்டு
பலமுறை பேடித்து ஓடியவன் தான் இந்த எதிரி எனினும்
யாரையும் குறைவாக
எடை போடவேண்டாம் என்கிறான் மாவீரன்

இம்முறை அவனதுப் பேச்சு
உங்களைச் சிந்திக்க வைக்கிறது

போர் நாள் நெருங்க நெருங்க
கொன்றைப் பூக்கள் நிறைந்த
குடில்க‌ளுக்குள் பெண்களையும் குழந்தைகளையும் ஒளித்துவைத்து

நீங்கள் தயாராகவே இருக்கிறீர்கள்

பிறிதொரு கார் நாளில்
குளம்பொலிகள் அதிர அதிர வருகிறான் எதிரி

குதிரையில் இருந்தவாறே
அவன் இழுத்து எய்திய அம்புகள் உங்களது
கேடையங்களில் ஊடுருவுகிறது
மறைந்திருந்த‌ மாவீரன் குதிரையை தடம்புரளச்செய்ய
மழைநீர் தெறிக்க கீழே விழுகிறான் எதிரி

இருவருக்கும் நடக்கிறது
மிக கடுமையானப் போர்

முடிவில்
வஞ்சகமும் சூழ்ச்சியும் கொண்ட எதிரியின் வாள்
குரல்வளையை பதம்பார்க்க
இரத்தம் சிதற‌ உடைந்து சரிகிறான் மாவீரன்

தும்பைச் செடிகளில் இரத்தம் படிகிறது

எதிரியின் வாள்
உங்கள் நெற்றியில் நிற்கும் இத்தருவாயில்
அவனை வணங்கி மண்டியிடுவதைத் தவிர
வேறு வழியில்லை உங்களுக்கு

மாவீரனின் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்

உங்கள் கூட்டத்தின் இளம் பெண்கள்
எதிரியால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்

இருப்பினும்
அவனை எதிர்க்க வலுவற்று
மௌனமாக இருக்கிறீர்கள்

எதிரி
இப்பொழுது இது எனது மண்
நீங்கள் எனது அடிமைகள் என்கிறான்

இப்பொழுதும் நீங்கள் மௌனமாகவே இருக்கிறீர்கள்

மாவீரனின் மனைவியை அபகரித்தபடி
எதிரி அவனது நாடு திரும்புகிறான்

இப்பொழுது நீங்கள்
உலகிலுள்ள அலட்சியமிக்க‌ மற்ற கூட்டத்தின் முன்னே
தன் கூட்டத்திற்கு அநீதி நேர்ந்துவிட்டதாகவும்
உங்கள் தலைவன் கொல்லப்பட்டதாகவும்
நீதி வேண்டுமெனவும்
கெஞ்சுகிறீர்கள் கதறுகிறீர்கள்

இப்பொழுது
அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்

எதிரியின் கூட்டம்
எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கத் துவங்க
உங்களது
முன்னோர்களின் வீரமிக்க காப்பியங்களைக் கிழித்து
எல்லாம் பொய்கள்
கட்டுக்கதைகள் என்கிறீர்கள்

நாட்கள் கழிகிறன

இந்நாட்களில்
நீங்கள் அடிமைகளாகவே வாழப் பழகிவிட்டீர்கள்

கள்ளுண்டு
தம் தம் மனைவியைப் புணர்ந்து திரியும்
உங்களுடைய புதிய குழப்பம் இப்போது என்னவெனில்
உங்களுள் புதியத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பதென்பது

கூட்டத்தில்
உங்களது செல்வாக்கை நிலைநிறுத்த
எல்லோருக்கும் பாதுகாப்பு,
எல்லோருக்கும் இலவச உணவு,
மிக முக்கியமாக
எதிரியிடமிருந்து இந்த மண் மீட்கப்படும்
என வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறீர்கள்

வேறுவழியில்லாமல்
என்றாவது ஒருநாள் மீண்டும்
இம்மண் நம் சொந்தமாகுமென்ற எளிய‌ நம்பிக்கையில்
காத்திருக்க துவங்குகிறார்கள் மக்கள்

செத்தொழியுங்கள் ஈனப்பிறவிகளே

நம்பிக்கை என்பது
இயலாமையின் கடைசி மிச்சம்தான் இல்லையா?


24 மார்ச் 2014
- நளன் 

No comments: