Wednesday, September 16, 2015

..................

மழை நின்ற இவ்வேளை
காற்றே இல்லை

மின்சார கம்பிகளில் அமர்ந்து
ஈரம் உலர்த்துகின்றன
மழைக்காலக் காக்கைகள்

அற்புதம்
அவ்வபோது காதல் சொரியும் உன் கண்கள்
எப்போதும் நெஞ்சம் அதிரும் உன் புன்னகை
உன் குரல் ஒருவித மயக்கம்

கண்ணாடி மதுக் கோப்பைகள்
மோதி அதிர நம் புன்னகைகள்
எப்போதாவது நிகழும் நமது இந்த சந்திப்பு

மதுவும்
இலக்கியமும் இசையும் போதும்
நம்மை இவ்வுலகிலிருந்து
கொஞ்சம் நேரமேனும் விடுவித்துக்கொள்ள

உன் முகம் வசீகரம்தான்

நெடுநாளான உனது குழப்பத்தை
பேச்சினிடையே
அவ்வபோது
எனது பார்வையில் உறுதி செய்துகொள்கிறாய்

ஆம் உனது அனுமானங்கள்
சரிதான்
எப்போதும் கண்கள் பொய் சொல்வதில்லை

மேலும்

ஒருவேளை
அப்பழுக்கற்ற எனதந்த ஈர்ப்பு
உனது அனுமானங்களில்
மெல்லத் தொலைந்துப் போகக்கூடுமெனில்
இந்த திரைச்சீலையை கொஞ்சம் விலக்கியே வைப்போம்

.............

நேற்று
அத்தனை மௌனத்திற்குப் பின்
உன்னைப் பார்க்கவோ
உன்னிடம் பேசவோ
எனக்கு எந்த விருப்பமுமில்லை என்றேன்


அழைப்பை துண்டித்தாய்

வாசல் கதவைத் தட்டிவிட்டு
ஏன் தயங்கி நிற்கிறாய்
உள்ளே வா
மழையில் நனைந்திருக்கிறாயென
துவட்டுவதற்குத் துண்டை நீட்டுகிறேன்
நீ வாங்கவில்லை

இப்போது எதற்காக
குரல் உடைந்து அழுகிறாய்

சற்று யோசித்து 
உன் கண்ணீரில் எனக்கு நம்பிக்கையில்லை
என்றேன்

நீர் வழியும் கண்ணங்களோடு
வெறுமென என்னைப் பார்த்தாய்

சட்டென யூகித்திடா கருணையுடன்
நான் உன் கண்ணீரை துடைத்திட முயன்றேன்
நீ எனது கைகளைத் தட்டி விட்டாய்

எதையோ நினைத்தப் பின்
இப்போது அழுகையை நிறுத்திவிட்டாய்
அறையிலிருந்து
ஒரு பறவையென வெளியேறிவிடவே நினைத்தாய்

நீ வெளியேறாவண்ணம்
நான் கதவை மூட முயல்கிறேன்
நீயோ வெளியேற முயல்கிறாய்
வலுக்கொண்டு நான் மூட
உன் முயற்சியை கைவிட்டாய்

இப்பொழுது
கட்டிலின் இன்னொரு ஓரம் அமர்ந்திருக்கிறாய்

சுவற்றில் வெகுநேரம் அசையாதிருக்கும்
இந்தப் பல்லியை என்ன செய்யலாம்

நான் நெருங்கி உன் கைப்பற்றிக்கொள்ள முயல்கிறேன்
நீ உன் கைகளை இழுத்துக்கொண்டாய்
இந்த திரைச்சீலைகள்
ஏன் இத்தனை அமைதியாக இருகின்றன
இந்த காற்றும்

இப்பொழுது
உன்னை மார்போடு இறுகப் பற்றியபடி இருக்கிறேன்
பின் எதற்காக விசும்புகிறாய்
ஏனெனக் கேட்கிறேன்
நீ எதுவும் சொல்லவேயில்லை
திரும்ப விசும்புகிறாய்
உனை விலக்க எத்தனைக்கிறேன்
என்னை இறுக இறுக இறுக அணைத்துக்கொண்டாய்

எனக்குத் தெரியும் ஏனென

இப்பொழுதும் நான் உன்னிடம் இருப்பதற்கான காரணம்
அது ஒன்றன்றி வேறெதுவுமில்லை.

- நளன்
July 8th 2015

............

தயவுசெய்து
அந்தப் பாடலை நிறுத்துங்கள்

என் நெஞ்சம் வலியால் நிரம்புகிறது
உன் நினைவுகளுக்குள் வலிய இழுத்துத் தள்ளுகிறது
உன்னோடு இருந்த நாட்களை
உன் புறக்கணிப்பை
குறிப்பாக
உன் பொய்களை
என் கண்முன் நிறுத்துகின்றது

இந்த காலி மதுக்கோப்பை
சுக்குநூறாக உடைத்து நொறுக்கப்படுவதற்கு முன்பாவது

தயவுசெய்து
அந்தப் பாடலை நிறுத்திவிடுங்கள்.

- நளன்
June 21st 2015

................

இந்த நெடுஞ்சாலைப் பயணத்தில்
இருப் பக்கங்களிலும் விரையும் வாகனங்களினால்
காற்றில் திணறுகின்றன அரளிச் செடிகள்

சிறு வயதில் ஒரு நாள்
திரும்பத் தரவியலாதப் பணத்திற்காக
கந்துவட்டிகாரன்
அம்மாவை திட்டிப்போக
யாருமே பார்த்திராத மறுநாள் வைகறையில்
அவன் வீட்டு சன்னலை
கல்விட்டெறிந்து உடைத்து வந்ததை
இவ்வேளையில் நினைத்து கொள்கிறேன்

இம்மழைக்காலங்கள் ஏன் எப்போதும்
நினைவுகளைக் கிளருகின்றன

குளிருக்கு இதமாக
சுருண்டுப் படுத்திருக்கும்
மழைக்கால நாய்களைப் போல
ஆட்களற்ற இப்பேருந்தில்
கண்ணாடிகளில் வழியும் மழையை
பார்த்தபடி புகை காற்றில் நிரம்ப
புகைப்பிடித்தல் ஒரு ஆசுவாசம் 

தன் பழைய முகத்தை
கழற்றி எறிந்தப்பின்
ஒரு கூட்டுப் புழுவாக
இவ்வேளை காத்திருக்ககூடும்தானே
ஏதேனுமொரு கம்பளிப்பூச்சி
என்றாவது ஒரு நாள்
சிறகு முளைத்து ஒரு வண்ணத்துப்பூச்சியாக
அங்குமிங்கும் அலைவதற்கு

எப்போதும்
முளைத்திடாத சிறகுடன்
எந்தவொரு கசப்பான நினைவையும்
பழைய முகத்தையும்
கழற்றியெறியவியலாத நான் காத்திருக்கின்றேன்
குறைந்த பட்சம்
இந்த மழை நிற்பதிற்கு.

- நளன்
June 13th 2015