Sunday, April 10, 2016

........................

நீ வேறு யாருடனோ மகிழ்வுடன் இருக்கும்
புகைப்படத்தைப் பார்த்தப்பின்
குளியலறையின் வெந்நீரூற்றில்
சுமார் அரைமணி நேரம் அப்படியே நின்றிருந்தேன்

பின்வேளை
ஆவிப்படர்ந்த குளியலறைக்கண்ணாடியில்
உன் பெயரெழுதிப் பார்த்தேன்
இந்நாட்களில்
நாம் தொடர்புகொள்வதில்லை
முயல்வதுமில்லை
உனக்குள் இருக்குமோ
சுட்டு வலிக்கும் மாலை நேரத்து நினைவு
இந்த மன அழுத்தம்
இந்த கோடையில்
ஒரு சலனமுமற்று இருக்கிறாய் நீ
நானோ
உனை நீங்கும் மனவுறுதியற்று
ஒரு கிளையைப் போல உடைந்து தொங்குகிறேன்.
எப்பொழுதோ
நீங்கிய இலைகளை
மெல்ல கலைக்கிறது இந்த காற்று.

..................

முட்புதருக்குள் கைவிடப்பட்ட
கண்விழிக்காத இரு நாய்குட்டிகள்
மெல்லத் தொடப்படுகையில்
என் விரல்களுக்கிடையில் முலைக்காம்புகளை
தேடி அலைகின்றன

உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட
பெண்ணொருவள் மூடிய கோவிலுக்கு வெளியே
கைத்தூக்கி அவ்வளவு ஆத்மார்த்தமாக
பிராத்தனை செய்கிறாள்
துயர்மிக்க இந்த மாலையில்
மெதுவாக கீழிறங்குகிறது சூரியன்
அத்தனை இயல்பாக.

March 2nd

Tuesday, February 2, 2016

........................

இப்பொழுதெல்லாம்
கொஞ்சம் வேகமாக நடக்கிறேன்
கொஞ்சம் கூடுதல் வேகத்தில் வண்டியையும்

இப்பொழுதெல்லாம்
கொஞ்சம் அதிக ஒலியுடன் பேசுகிறேன்
கொஞ்சம் அதிகம் புன்னகைக்கவும்
மக்கள் நிறைந்த கேளிக்கைகளில்
யாரோவொருவர் கூர்ந்து கவனிக்கிறார்கள்

தனிமை நிரம்பும் இந்நாட்களில்
கொஞ்சம் அதிகமாகப் புகைப்பிடிக்கிறேன்
கொஞ்சம் கூடுதலாக மதுவும்

மேலும்
வேறென்ன செய்துவிட முடியும்
கைவிடப்பட்ட மற்றும்
ஆயிரம் சில்லுகளாக உடைக்கப்பட்ட ஒரு நெஞ்சம்.

....................

உன் ஒற்றைச் சொல்லில்
உடைந்து நொறுங்கிய முன்பகலொன்றில்
நகரின் உயரமான கட்டிடத்தின் உச்சிலிருந்து
என்னைத் தூக்கி எறிய நினைத்தேன்

உன் புறக்கணிப்பின்
துயர் தாங்காதப் பின்னிரவில்
நீலமடைந்த இந்த உடலை
ஒரு மின்விசிறியெனச் சுழற்றிவிடவும்
இப்பொழுது
வெகுநாட்களாக அறையிலிருக்கும்
இந்த பாலித்தீன் பையைப் பார்க்கிறேன்
எப்பொழுதோ இறந்துபோய்விட்ட என்னை
இன்னும் எத்தனை முறைதான்
மீண்டும் கொல்வேன்?
முன்பு நினைத்தைப் போல
இந்த மரணம் ஒரு கனவைப் போன்றதல்ல
இருப்பினும்
இன்னொரு முறை நிகழலாம்
என்னை மலர்களினால் அலங்கரிக்கும் வண்ணம்
அவ்வாறு ஒருவேளை நிகழுமேயானால்
அவர்களை
அழவேண்டாமெனச் சொல்லுங்கள்
அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்
இங்கிருந்து
இவ்விடத்திலிருந்து
வெளியேறுதலே எனது ஆசுவாசமென்று.

Jan 19th 2016

....................

சிலவேளை நினைத்துக்கொள்வேன்
எனக்கு யாருமில்லையென
சிலவேளை தோன்றும் என்னுடனிருப்பது
நான் வாழும் இந்த பழைய நகரம் மட்டுமேயென
மஞ்சள் ஒளி மிதக்கும்
குளிர்கால மாலைகளில்
நடைபாதையில்
எதிர்வரும் மக்களைப் பார்த்திருப்பேன்
அவர்களின்
புன்னைகைமிக்க முகங்களை

எப்போதாவது பார்த்திருக்கிறேன்
யாரோ ஒருவர் தனித்து உடைந்து அழுவதை
அவ்வேளைகளில் அவர்களை
தேற்ற விரும்பாது
நகர்ந்து
ஆளரமவற்ற பேருந்தில்
யாருடனும்
ஒரு வார்த்தைகூட பேசாது பயணித்திருப்பேன்
எனக்குத் தெரியும்
இவ்வாழ்வின் மிகவும் கடினமான தருணங்கள்
அழும் போதானவையல்ல
அழக்கூட முடியாமல் போகும்போதானவை மட்டுமே.

Jan 13th 2016