Thursday, May 4, 2017

...................

இந்தப் பருவத்தின் முதல் மழை
மண்வாசனை காற்றில் நிறைகிறது
எத்தனையோ நாட்களுக்குப் பிறகு
குளிர்ந்து கிடக்கிறது இந்த நிலம் 
நேற்றுவரை
மழைக்கு ஏங்கிக்கிடந்த
உயிர்கள் சிலிர்க்கின்றன

அறுவை சிக்கைச்சைக்கு
உடல் ஏற்றதல்லவென மருத்துவர்கள்
கைவிரிக்கவில்லையெனினும்
கைவிடப்பட்ட இக்காலத்தில்
தனதறையில்
இலையுதிர்கால மரம் போல
அமர்ந்திருக்கிறாள் இடுப்பு உடைந்த கிழவி

தொண்ணூறுகளில் இன்னும்
உயிரை கையில் இறுகப் பிடித்திருக்கும்
ஊரின் மிகவயதான
அவளுக்கு அல்செய்மர்ஸ் இருக்கிறது
காது சரியாக கேட்பதில்லை
இரண்டு அடி தூரத்திலிருப்பவர்களைக் கூட
அடையாளம் காண இயலாதவாறு
கண் பார்வை மங்கலாகிவிட்டது 

இம்முறை ஊருக்கு சென்றிருந்தபோது 
பக்கத்தில் அமர்ந்திருந்தேன்
தலைகோதும் என் விரல்களை மட்டும்
நினைவில் வைத்துப் புன்னகைக்கிறாள்

இத்தனை நாட்களாக ஏன் வரவில்லை என்றாள்
அம்மாவுக்கு அவளைப் பார்த்துக்கொள்ள
விருப்பமேயில்லையென்றாள்
பின் இப்படி ஆவேனென்று நினைக்கவில்லையென
உடைந்து அழுதாள்

ஆறு மாதங்களாக
இவ்வறை
இந்த ஒளி
இந்த சன்னல்  மட்டும்
தன்னோடிருப்பதாய் அவள் சொல்கையில்
இயலாமையின் ஒற்றை சாட்சியாய் அமர்ந்திருந்தேன்

இந்நாட்களில்
நண்பர்களற்று
தனியேப் பேசியேயிருக்குக்கும்
அவளை காண கடினமாக இருக்கிறது

பதிமூன்று வயதில் தன் தாய்மாமனை
மணந்துகொண்டவள்
பதினேழுவருட தவத்திற்குப் பின்
அப்பாவைப் பெற்றெடுத்தாள்
இரயில்வே வேலையை விட்டுவிட்டு
தாத்தா சராயக்கடையையும்
கூத்தியாவையும் வைத்துக்கொள்ள
கணவனைப் பிரிந்தாள்
சில ஆண்டுகளில் மாரடைப்பில்
கணவன் இறந்துப்போக
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவுமில்லை
ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லையென
சின்னப்பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்

ஏனோ
அவள் மன்னிப்பதேயில்லை
யாரோடும் நெருங்குவதுமில்லை
உறவினர் ஊராரென
யாரிடமும் பேச்சுவார்த்தையில்லை
எனக்கு தெரிந்து
இத்தனை ஆண்டுகளில்
காசுக்காக யாரிடமும் கையேந்தியதில்லை
தன் உழைப்பை மட்டும் நம்பியிருந்தாள்

இந்தப் பின்னிரவில்
கதவைத் திறந்துப் பார்க்கிறேன்
உறக்கமற்றுப் படுக்கையில் அமர்ந்திருக்கிறாள்
அவளுடலில்
இன்னும் கொஞ்சம் இலைகள்
மட்டுமே மீதமிருக்கின்றன

போய் வருகிறேனென
சொல்ல மனமில்லாமல்
இந்த யாமத்தில் நகரம் திரும்புகிறேன்

இன்றுப் பெய்த
இந்த மழைப் போதுமானதாக இல்லை
எல்லா உயிர்களையும் குளிர்விக்க.

1 comment:

Ramani S said...

மனம் கனக்கச் செய்து போகும்
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்